சனி, 10 அக்டோபர், 2026

டெல்லி போராட்டத்திற்கு ஆதரவாக அறவழி போராட்டங்களை ஒடுக்கும் அத்துமீறல்!

தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிரான டெல்லி போராட்டத்திற்கு ஆதரவாக சென்னை பெசண்ட்நகரில் குரலெழுப்பிய சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் இளைஞர்கள் அராஜக முறையில் போலீசால் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு எஸ்டிபிஐ கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அபுபக்கர் சித்திக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

அரசியலமைப்பு விரோத எஸ்ஐஆர் குளறுபடிகளைக் கண்டித்தும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் உடனடியாகப் பதவி விலகக் கோரியும், தலைநகர் டெல்லியில் காக்ரோச் ஜனதா பார்ட்டி உள்ளிட்ட பல்வேறு ஜனநாயக சக்திகள், மாணவ மற்றும் இளைஞர் அமைப்புகள் ஒருங்கிணைந்து இன்று போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன. 

ஆனால், இந்த நியாயமான போராட்டத்தைத் தடுக்கும் நோக்கில் மெட்ரோ மற்றும் ரயில் சேவைகளை ரத்து செய்தும், இணைய சேவையைத் துண்டித்தும், 20 ஆயிரத்துக்கும் அதிகமான காவல் மற்றும் துணை ராணுவ வீரர்களைக் குவித்தும், தலைவர்களை வீட்டுக்காவலில் அடைத்து வைத்தும், போரட்டத்திற்கு வந்த இளைஞர்களை ரயிலிலிருந்து கீழிறக்கியும் ஒன்றிய பாஜக அரசு பலப்பிரயோகம் செய்து ஜனநாயகத்தை ஒடுக்கி வருகிறது.

இந்நிலையில், ஒன்றிய அரசின் இந்த சர்வாதிகாரப் போக்கை கண்டித்தும், டெல்லி போராட்டத்திற்கு ஆதரவாகவும், தலைமைத் தேர்தல் ஆணையரின் பதவி விலகலை வலியுறுத்தியும் சென்னை பெசன்ட் நகரில் அமைதியான முறையில் குரலெழுப்பிய சமூக செயற்பாட்டாளர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட இளைஞர்களை தமிழக காவல்துறை குண்டுகட்டாகக் கைது செய்திருப்பது அப்பட்டமான ஜனநாயக அத்துமீறலாகும். 

ஆகவே, கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக எவ்வித நிபந்தனையுமின்றி விடுதலை செய்வதோடு, தங்களது ஜனநாயகக் குரலை எழுப்புவதற்கு ஒரு இடத்தை ஒதுக்கி அனுமதி வழங்க வேண்டும் என்ற அவர்களின் நியாயமான கோரிக்கைக்கு சென்னை காவல்துறை உடனடியாகச் செவிமடுக்க வேண்டும். 

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலகக் கோரி 'இந்தியா கூட்டணி' சார்பாக நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாகச் சென்னையில் நடைபெற்ற கூட்டணி கூட்டத்தில், ஆளும் தவெக அரசின் பிரதிநிதிகளாக மாண்புமிகு அமைச்சர் ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். 

ஆனால், அதே கோரிக்கைக்காக அறவழியில் குரலெழுப்பும் சமூக ஆர்வலர்களுக்குத் தமிழக காவல்துறை அனுமதி மறுப்பதும், அவர்களைக் கைது செய்வதும் நகைமுரணாக உள்ளது. ஜனநாயக ரீதியிலும் அறவழியிலும் மக்கள் தங்களது உரிமைகளுக்காகக் குரலெழுப்புவதைத் தடுத்து நிறுத்தும் இத்தகைய அடக்குமுறைகளுக்கு எஸ்டிபிஐ கட்சி தனது வலுவான எதிர்ப்பைப் பதிவு செய்கிறது. 

மக்கள் உரிமைகளைப் பாதுகாக்கவும், ஜனநாயகத்தை மீட்டெடுக்கவும் நடைபெறும் அனைத்து அறவழிப் போராட்டங்களுக்கும் எஸ்டிபிஐ கட்சி தனது முழுமையான ஆதரவை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறது துன்று அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks