சுமார் 2 பில்லியன் பீப்பாய்கள் மசகு எண்ணெய் மற்றும் 9 டிரில்லியன் கன அடி இயற்கை எரிவாயு வளம் இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ள இப்பகுதியில், 100 மீட்டரில் இருந்து 3,000 மீட்டர் வரையிலான ஆழ்கடல் களங்களில் பன்னாட்டு எண்ணெய் நிறுவனங்கள் மூலம் பல நூறு மில்லியன் டொலர் முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டன் மற்றும் கோலாலம்பூரில் முதலீட்டாளர் மாநாடுகளை நடத்த இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் இலங்கைக்கு இந்த ஆழ்கடல் வளம் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தாலும், பழைய தரவுகளின் அடிப்படையில் சர்வதேச முதலீடுகளை ஈர்ப்பதில் உள்ள சவால்கள், பிராந்தியத்தில் நிலவும் புவிசார் அரசியல் போட்டிகள் மற்றும் சூழலியல் அச்சங்கள் குறித்துப் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன."உலகளவில் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வுகளுக்காக வெட்டப்படும் கிணறுகளில் 10 முதல் 15 சதவிகிதமானவை மட்டுமே வெற்றியடைகின்றன.
ஆனால், இலங்கையின் மன்னார் படுகையில் தோண்டப்பட்ட 4 சோதனைக் கிணறுகளில் இரண்டு கிணறுகளில் உயர்தர இயற்கை எரிவாயு கண்டறியப்பட்டு 50% வெற்றி விகிதம் கிடைத்துள்ளது" என பேராதனைப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தரும், பிரபல புவியியல் அறிஞருமான பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்தார்.
அத்துடன், இலங்கையில் பெட்ரோலிய தொழில்நுட்பத்திற்குத் தேவையான பயிற்சி பெற்ற புவியியலாளர்களும் தொழில்நுட்ப அதிகாரிகளும் பேராதனைப் பல்கலைக் கழகம் வாயிலாகத் தயாராக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக