சனி, 31 அக்டோபர், 2026

இன்று முதல் பாணின் விலை 5 ரூபாவால் அதிகரிப்பு!!

இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 450 கிராம் நிறையுடைய ஒரு பாணின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. 

பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலை அதிகரிப்பு தொடர்பில் வினவிய போதே அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன இவ்வாறு குறிப்பிட்டார். 

அத்துடன், ஏனைய பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளும் 5 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

கடந்த 10 நாட்களுக்கு முன்னர் நாட்டிலுள்ள கோதுமை மா விநியோக நிறுவனங்கள் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை 13 ரூபாவினால் உயர்த்தின. 

நாட்டின் வரலாற்று வழக்கத்தின்படி கோதுமை மாவின் விலை அதிகரித்தால் பாணின் விலையும் உடனடியாக உயர்த்தப்பட வேண்டும்.இருப்பினும், இந்த மா விலை அதிகரிப்பு சட்டவிரோதமானது என்றும், அது குறித்துத் தமக்கு முன்னறிவித்தல் வழங்கப்படவில்லை என்றும் நுகர்வோர் விவகார அதிகாரசபையின் பதில் பணிப்பாளர் நாயகம் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் தெரிவித்திருந்தார். 

 அத்துடன், வெளிநாடு சென்றிருந்த அமைச்சர் வசந்த சமரசிங்க நாடு திரும்பியதும் மா நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வை எட்டும் வரை பாண் விலையை உயர்த்த வேண்டாம் எனவும் அதிகாரசபை வேண்டுகோள் விடுத்திருந்தது. 

அரசாங்கத்தினதும் அதிகாரசபையினதும் இந்த வேண்டுகோளுக்கு மதிப்பளித்து, பேக்கரி உரிமையாளர்களிடமிருந்து கடுமையான அழுத்தங்கள் வந்தபோதிலும், அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் கடந்த 10 நாட்களாக விலையை உயர்த்தாமல் பொறுமையுடன் காத்திருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks