பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலைமை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் இலங்கையின் சில பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பு மற்றும் காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை, பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் பயணிக்கும் பலநாள் கடற்றொழில் படகுகளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு கிழக்கே வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலவும் குறைந்த காற்றழுத்தப் பிரதேசம் வடக்கு நோக்கிய சாய்வுடன் வடமேற்குத் திசையில் நகர்ந்து, இன்று (15) காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடைய அதிக வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, வட அட்சரேகை 5 முதல் 15 வரையிலும், கிழக்கு நெடுங்கோடு 80 முதல் 90 வரையிலும் அமைந்துள்ள கடற்பரப்புகளிலும், காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை, பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளிலும் மறு அறிவித்தல் வரை கடற்றொழில் மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், ஏற்கனவே குறித்த கடற்பரப்புகளில் கடற்றொழில் மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களை நோக்கிச் செல்லுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் அறிவுறுத்தியுள்ளது.
எம்.கே சிவாஜிலிங்கத்தின் இறுதிக் கிரியைகள் நாளை (16) நடைபெறவுள்ளது.
அன்னாரின் உடல் வல்வெட்டித்துறை, நெடியகாட்டில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இன்று முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாளை மதியம் 12 மணியளவில் வல்வெட்டித்துறை சந்தியில் அன்னாரின் பூதவுடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும்.
பின்னர், வல்வெட்டித்துறை ஊறணி இந்து மயானத்திற்கு அன்னாரது பூதவுடல் எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினரும், தற்போதைய வல்வெட்டித்துறை நகரசபையின் தலைவருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தமது 69 வயதில் நேற்று (14) இரவு காலமானார்.
நீண்ட காலமாக உடலநலக் குறைவினால் பாதிக்கப்பட்டிருந்த அவர் நேற்றிரவு 11.35 மணிக்கு அவரது இல்லத்தில் காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிலவருடங்களாக சிறுநீரக செயலிழப்பு காரணமாக நோய்வாய்ப்பட்டிருந்த சிவாஜிலிங்கத்திற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் , கொழும்பில் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
பின்னர் வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பிய அவருக்கு, சில வாரங்களுக்கு முன்னர் கடுமையான உடல்நலகுறைவு ஏற்பட்டது
இதனை அடுத்து அவர் பருத்தித்த்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று, வீடு திரும்பியிருந்தார்.
இந்நிலையிலேயே ,நேற்றைய தினம் காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது.
வடமராட்சி வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட எம்.கே சிவாஜிலிங்கம், தமிழீழ விடுதலை இயக்கத்தின் (TELO) போராளியாக இருந்து, தனது நீண்ட அரசியல் பயணத்தைத் தொடங்கினார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் (TNA) சார்பில் யாழ்ப்பாண மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினராக 2001 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தொடர்ந்து வந்த கால பகுதியில் வடக்கு மாகாண சபை உறுப்பினராகவும், கடந்த ஆண்டு முதல் வல்வெட்டித்துறை நகரசபையின் தலைவராகவும் பொறுப்பேற்று, மக்கள் சேவையை முன்னெடுத்து வந்தார்.
தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்காக பல்வேறு சந்தர்ப்பங்களில் ஜனநாயக போராட்டங்களில் ஈடுபட்டு குரல் கொடுத்து வந்தார்.
அவரது மறைவு தமிழ் தேசிய அரசியல் வட்டாரத்திலும், அவரது சொந்த ஊரான வல்வெட்டித்துறை மக்களிடையேயும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாமல் சமூக ஆர்வலர்களும் தமது இரங்கலை வௌியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அக்போ யானை அடிக்கடி நடமாடும் அநுராதபுரம், திறப்பனை வலையத்தை அண்மித்த பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட 'ஹஸ்தி சேனா' கூட்டு நடவடிக்கையின் போது, அனுமதியற்ற துப்பாக்கிகள், வெடிமருந்துகள் உள்ளிட்ட பல பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
காட்டு யானைகளின் உயிரைப் பாதுகாத்தல், மனித உயிர்களையும் சொத்துக்களையும் பாதுகாத்தல் மற்றும் மனித -யானை மோதலைக் குறைக்கும் நோக்கத்துடன் நடைமுறைப்படுத்தப்படும் தேசிய 'ஹஸ்தி சேனா' நடவடிக்கையின் கீழ் இந்த விசேட முற்றுகை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காகப் பயன்படுத்தப்படும் அனுமதியற்ற துப்பாக்கிகள், ஹக்கபட்டஸ், பொறிகள் மற்றும் வெடிமருந்துத் தொகை ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கற்குளம், கெட்டமாலாகந்த, முரியாக்கடவல, பெரியமியைங்குளம், கிரிந்தேகம, வண்ணான்குளம், உள்ளிட்ட பல பகுதிகளை உள்ளடக்கிய வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
காட்டு யானைகளை வேட்டையாடுவதையும் அவற்றின் உயிர்களுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் சட்டவிரோத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதையும் அத்துடன் மனித - யானை இணக்கப்பாட்டை உறுதிப்படுத்துவதையுமே இந்த நடவடிக்கையின் பிரதான நோக்கமாகும்.
பிரத்யேகத் தகவல்: மார்ச் 2027-க்குள் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைய வேண்டுமானால், மாதம் கூடுதலாக 2,850 நோயாளிகளுக்கு 62 நாட்களுக்குள் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.
இதற்கிடையில், தலைமைத்துவத்தின் தோல்வி குறித்து நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.இங்கிலாந்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சுமார் 10,000 பேருக்கு உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காது என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
அரசாங்கம் தனது இலக்குகளை அடையத் தவறியதே இதற்குக் காரணம் என்றும், தலைமைத்துவம், கவனம் மற்றும் வளங்கள் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள குறைபாடே இதற்கு அடிப்படையாகும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மார்ச் 2027-க்குள், அவசர பரிந்துரை அல்லது நிபுணரின் பரிந்துரை கிடைத்த 62 நாட்களுக்குள் 80% புற்றுநோய் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்று தேசிய சுகாதார சேவை (NHS) ஒரு இடைக்கால இலக்கை நிர்ணயித்திருந்தது.
ஆனால், அந்த இலக்கை அடைய இன்னும் 100 நாட்களுக்கும் குறைவான காலமே உள்ள நிலையில், செப்டம்பர் மாதத்தில் உரிய நேரத்தில் சிகிச்சை பெறத் தொடங்கிய நோயாளிகளின் விகிதம் 71.9%-லிருந்து 70.7%-ஆகக் குறைந்துள்ளதாக NHS புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
'தி கார்டியன்' (The Guardian) நாளிதழுக்காக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களை ஆய்வு செய்ததில், நோயாளிகளின் எண்ணிக்கை தற்போதைய அளவிலேயே நீடிக்கும் பட்சத்தில், இலக்கை மீண்டும் அடைய NHS ஒவ்வொரு மாதமும் கூடுதலாக 2,850 நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியம் என்பது தெரியவந்துள்ளது.
'ரேடியோதெரபி யுகே' (Radiotherapy UK) அமைப்பின் கணக்கீட்டின்படி, மார்ச் மாதத்திற்குள் 80% என்ற இலக்கை அடைய, ஒவ்வொரு மாதமும் 24,400 புற்றுநோய் நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். ஆனால், தற்போது NHS அமைப்பால் மாதம் சுமார் 21,500 நோயாளிகளுக்கு மட்டுமே 62 நாட்களுக்குள் சிகிச்சை அளிக்க முடிகிறது.
இதனால், மாதம் 2,850 நோயாளிகள் என்ற அளவில், மொத்தம் 9,490 நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது.
'ரேடியோதெரபி யுகே' அமைப்பின் தலைவரும், முன்னணி புற்றுநோய் நிபுணருமான பேராசிரியர் பேட் பிரைஸ் (Prof Pat Price) கூறுகையில்: "அரசாங்கம் தனது புற்றுநோய் சிகிச்சை இலக்கை அடையத் தவறிவிடும்.
ஏனெனில், சிகிச்சைக்காக வரும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, போதுமான பணியாளர்களோ அல்லது மருத்துவ உபகரணங்களோ NHS-இடம் இல்லை. தலைமைத்துவமின்மையால், ஆயிரக்கணக்கான மக்கள் உரிய நேரத்தில் சிகிச்சை பெற முடியாமல் உயிரிழக்கும் அபாயம் உள்ளது" என்று எச்சரித்துள்ளார்.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அமெரிக்கா முழுவதும் விதிக்கப்பட்டிருந்த விமானப் போக்குவரத்துத் தடை நீக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் போக்குவரத்துச் செயலாளர் ஷோன் டஃபி (Sean Duffy) அறிவித்துள்ளார்.
இருப்பினும், இந்தத் தடையினால் ஏற்பட்ட பயணக் குழப்பங்கள் முழுமையாகச் சீரடைவதற்கு இன்னும் சிறிது காலம் எடுக்கும் எனவும், ஏராளமான பயணிகள் இன்னமும் விமான நிலையங்களில் சிக்கித் தவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையங்களில் ஏற்பட்ட தகவல் தொடர்பாடல் கோளாறு காரணமாகவே இந்த நாடளாவிய விமானத் தடை விதிக்கப்பட்டிருந்ததாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் முன்னதாகத் தெரிவித்திருந்தனர்.
இதேவேளை, அமெரிக்க மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாகத்தின் (FAA) கோரிக்கைக்கு அமைய, ஐரோப்பாவிலிருந்து அமெரிக்கா நோக்கிப் புறப்படவிருந்த விமானங்களும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன.
2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11 தாக்குதல்களுக்குப் பின்னர், அமெரிக்காவில் விதிக்கப்பட்ட மிகப்பெரிய விமானப் போக்குவரத்துத் தடை இதுவாகும்.
இச்சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் மார்க்வெய்ன் முல்லின் (Markwayne Mullin), இது அமெரிக்காவிற்கு எதிரான சைபர் தாக்குதல் என்பதற்கு எவ்வித ஆதாரங்களும் இல்லை என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
மண்டைதீவு மனிதப் புதைகுழி தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் இழுத்தடிக்கப்பட்டு வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், இச்சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய இராணுவ சாட்சி மற்றும் அரசியல் தரப்பினர் குறித்த அதிர்ச்சித் தகவல்கள் தற்போது வெளியாக ஆரம்பித்துள்ளன.
காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் பிரதேச அரசியல் பிரதிநிதிகளால் காவல்துறையில் அளிக்கப்பட்ட முறைப்பாடுகளைத் தொடர்ந்து, குறித்த கிணறுகளை அகழ்ந்து ஆய்வு செய்ய அனுமதி கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்தப் பின்னணியில், சில முக்கிய சாட்சிகள் தொடர்பான விடயங்கள் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
டென்சில் கொப்பேகடுவவின் கட்டுப்பாட்டின் கீழ் மண்டைதீவுப் பிரதேசங்கள் இருந்த காலப்பகுதியில், அங்கு இராணுவ அதிகாரியாகப் பணியாற்றிய கோட்டாபய ராஜபக்ச அவர்களே தற்போது உயிருடன் இருக்கும் முக்கிய இராணுவ சாட்சியாகக் கருதப்படுவதாக முக்கிய விடயம் ஒன்று வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
அவரிடம் விசாரணைகளை முன்னெடுத்தால் பல மர்மங்கள் வெளிச்சத்திற்கு வரும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, ஈ.பி.டி.பி கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மற்றும் அவரது தரப்பினர் மண்டைதீவுப் பகுதிகளில் இடம்பெற்ற கொலைச் சம்பவங்கள் மற்றும் ஆட்கடத்தல்களுடன் தொடர்புபட்டுள்ளதாகப் பாதிக்கப்பட்ட மக்களின் கருத்துக்கள் மற்றும் ஆதாரபூர்வமான சாட்சியங்களின் அடிப்படையில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்தப் பின்னணியில், ஐ.பி.சி தமிழின் 'உண்மைகள் பேசட்டும்' நிகழ்ச்சி இது குறித்த பல ஆதாரபூர்வமான விடயங்களைத் தொடரும் காணொளியில் விரிவாக ஆராய்ந்துள்ளது.
மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க செல்லும்போது அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வது தொடர்பான ஆலோசனைகளை முதல்வர் விஜய் வழங்கினார். மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க செல்லும்போது இயற்கை பேரிடர்களால் கடலில் காணாமல்போவது மற்றும் உயிரிழப்பு போன்ற இன்னல்களை சந்திக்க நேரிடுகிறது.
தற்போது வடகிழக்கு பருவமழை காலமாக உள்ளதால், தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் ஏற்படக்கூடிய புயல் மற்றும் இயற்கை இடர்பாடுகளின்போது, கடலில் மீன்பிடிப்பில் ஈடுபட்டிருக்கும் மீனவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வது தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் விஜய் தலைமையில் நேற்று ஆய்வுக்கூட்டம் நடந்தது.
கூட்டத்தில், புயல் மற்றும் இயற்கை இடர்பாடுகளின்போது, மீனவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தற்பொழுது பின்பற்றப்படும் நடைமுறைகள் குறித்து முதல்வர் விரிவாக கலந்தாலோசித்தார்.
மேலும், மீனவர்கள் மற்றும் மீன்பிடி படகுகள் கடலில் இடர்பாடுகளை சந்திக்கும் அவசர காலங்களில், மீனவர்கள் இருக்கும் இடத்தை துல்லியமாக கண்டறிவதற்கான தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துதல், கடலில் மீனவர்களின் தகவல் தொடர்பு கருவிகளை மேம்படுத்துதல், படகு மற்றும் அதன் இயந்திரங்கள் கடலில் செல்லத்தக்க வகையில் இருப்பதை உறுதிசெய்தல், இவை தொடர்பான சட்டங்களை முறையாக அமல்படுத்துதல் குறித்தும் அறிவுரைகள் வழங்கினார்.
மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் செல்லும்போது காணாமல் போகும் நேர்வில், கடல்வள சட்ட அமலாக்கப் பிரிவு, கடலோர காவல் குழுமம், இந்திய கடலோர காவல் படை மற்றும் இந்திய கப்பற்படை போன்ற பல்வேறு அமைப்புகள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையுடன் ஒருங்கிணைந்து, விரைந்து தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று முதல்வர் விஜய் அறிவுறுத்தினார்.