வெள்ளி, 11 செப்டம்பர், 2026

இந்தியா நான்கு நாள் வங்கி முடக்கம்

வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக, நான்கு நாட்களுக்கு வங்கி சேவைகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. 

வங்கி ஊழியர்களுக்கு வாரத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை வழங்க வேண்டும், சாதாரண ஊழியர்களுக்கு காட்டப்படும் பாரபட்சமான நடவடிக்கையை மாற்ற வேண்டும் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி, வங்கி ஊழியர் சங்கங்கள் நாடு முழுவதும் நாளை ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளன. இதனால் வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை விநாயகர் சதுர்த்தி என, தொடர்ந்து நான்கு நாட்கள் வங்கிகள் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, அனைத்திந்திய வங்கி அதிகாரிகள் சங்கத்தின் தமிழகப் பொதுச்செயலாளர் ரோஷன் கார்க்கி கூறியதாவது: வங்கி ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதில் உயர் அதிகாரிகளுக்கும், சாதாரண ஊழியர்களுக்கும் இடையே காட்டப்படும் பாரபட்சமான நடவடிக்கைகளைக் கண்டித்தும், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியும், இரண்டு கட்ட வேலைநிறுத்தப் போராட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

அதன்படி, நாளை ஒருநாள் அடையாள வேலைநிறுத்தமும், வரும் 28 முதல் 30-ம் தேதி வரை மூன்று நாட்கள் தொடர் வேலைநிறுத்தமும் நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

பிரிக்ஸ் அமைப்பின் மாநாடு நாளை டெல்லியில் !!

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆபிரிக்கா உள்ளிட்ட நாடுகள் உறுப்பினர்களாக உள்ள பிரிக்ஸ் அமைப்பின் மாநாடு நாளை (12) மற்றும் நாளை மறுதினங்களில் (13) டெல்லியில் இடம்பெறவுள்ளது. இம்மாநாட்டிற்கு 4-வது முறையாக இந்தியா தலைமை ஏற்கிறது. 

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், தென் ஆபிரிக்கா ஜனாதிபதி சிரில் ரமபோஸா, ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷெஷ்கியான், எகிப்து அதிபர் அப்தேல் பட்டா எல் சிசி, எத்தியோப்பியா பிரதமர் அபி அஹமது, இந்தோனேஷியாஜனாதிபதி பிரபாவோ சுபியான்டோ, யுஏஇ சார்பில், அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் ஜயீத் அல்நஹ்யான், பிரேசில் வெளியுறவு அமைச்சர் மவுரோ வியிரா ஆகியோர் பங்கேற்கின்றனர். 

இந்த மாநாட்டில் பங்கேற்க ரஷ்ய ஜனாதிபதி புடின் இன்று காலை டெல்லி வந்தடைந்தார். மொஸ்கோவில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி வந்தடைந்த புடினை வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கேவி சிங்க் விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்றார். 

 அவரது வருகையை முன்னிட்டு டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரஷ்ய ஜனாதிபதியை வரவேற்றது தொடர்பான புகைப்படத்தை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஷ்வால் கூறியிருப்பதாவது: 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டுக்காக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை அன்புடன் வரவேற்பதாக குறிப்பிட்டுள்ளார்.

​தெஹிவளையில் வீடொன்றின் மீது கைக்குண்டு தாக்குதல்

தெஹிவளை, கவுடான சிறிசகபோ வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்தனர்.இன்று (11) அதிகாலை இக்கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த தாக்குதலில் அந்த வீட்டில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் இரண்டு பிள்ளைகள் என மூன்று பேர் காயமடைந்த நிலையில் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். 

 அவர்களில் 10 மற்றும் 14 வயதுகளையுடைய இரண்டு சிறுவர்களும் உயிரிழந்தனர். அதேநேரம் உயிரிழந்த சிறுவர்களின் 55 வயதுடைய தந்தை தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

வியாழன், 10 செப்டம்பர், 2026

பாலியல் தொல்லை: போக்சோவில் ஜிஎஸ்டி ஆய்வாளர் கைது

சென்னை முகப்பேர் 2வது பிரதான சாலையில் உள்ள ஜிஎஸ்டி அலுவலகத்தில் ஆய்வாளராக பெண் பணியாற்றி வருகிறார்.‌ இதே அலுவலகத்தில் மேற்கு வங்கத்தை சேர்ந்த சவுரவ் (28) என்பவரும் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஆய்வாளர் சவுரவ், தன்னுடன் பணியாற்றி வரும் பெண் ஆய்வாளருக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு அளித்துவந்துள்ளார். 

அடிக்கடி இரட்டை அர்த்தத்தில் பேசி டார்ச்சர் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக, பெண் ஜிஎஸ்டி ஆய்வாளரின் புகைப்படங்களை திருடி அதனை மார்பிங் செய்து சமூக வலைத்தளங்களில் பரப்பியது, உயர் அதிகாரிகளோடு இணைத்து காதலுக்கு வயது தடையில்லை என்பதுபோன்ற வாசகங்களை இணைத்து பதிவிடுவது என தொடர்ச்சியாக தொல்லை கொடுத்து வந்துள்ளார். 

இதுகுறித்து திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண் ஜிஎஸ்டி ஆய்வாளர் புகார் அளித்தார். அதன்பேரில், மகளிர் போலீசார் விசாரித்து, சவுரவ் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 4 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து சவுரவை நேற்று கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

போதைப்பொருள் மூலம் ஈட்டப்பட்ட பல கோடி பெறுமதியான சொத்துக்கள்

போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாகச் ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 10 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான சொத்துக்களை முடக்குவதற்குச் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது. 


 2020 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் திகதி பேலியகொடை பொலிஸாரால் ஜீப் வண்டியொன்றில் ஹெரோயின் கடத்திச் சென்ற 7 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதுடன், அவர்கள் தொடர்பாகப் பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினராலும் விசாரணையொன்று ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

 அந்த விசாரணைகளில், பேலியகொடை பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவர் போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைத்த பணத்தைப் பயன்படுத்திச் சொத்துக்களைக் கொள்முதல் செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 இதற்கமைய, மஹர, கடவத்தை பகுதியில் 19.90 பேர்ச்சஸ் காணியில் அமைக்கப்பட்டுள்ள இருமாடி வீடு மற்றும் சிங்காரமுல்ல, களனி பகுதியில் 18 பேர்ச்சஸ் காணியில் அமைக்கப்பட்டுள்ள 

இருமாடி வீடு தொடர்பிலும் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன. இந்த இரண்டு சொத்துக்களின் தோராயமான பெறுமதி தலா 500 இலட்சம் ரூபாவாகும் என்பதுடன், இதன் மொத்தத் தோராய பெறுமதி 10 கோடி ரூபாய்க்கும் அதிகமானதாகும். 

 விசாரணைகளின்படி, போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட பணத்தில் இச்சொத்துக்கள் வாங்கப்பட்டதாகக் கருதப்படுவதால், பணச்சலவை தடுப்புச் சட்டத்திற்கு அமைவாக 2026 செப்டெம்பர் 10 ஆம் திகதி முதல் 14 நாட்களுக்கு அவற்றை முடக்குவதற்கான உத்தரவுகள் பெறப்பட்டுள்ளன.

நீதிமன்றில் சாட்சியமளித்துவிட்டு திரும்பியவர் மீது வாள்வெட்டு!

ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் வழக்கொன்றில் சாட்சியமளித்துவிட்டு வெளியேறிய நபர் மீது மர்ம கும்பலொன்று வாள்வெட்டு தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது. 


நெடுந்தீவைச் சேர்ந்த 31 வயதுடைய இளைஞர் ஒருவரே இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நெடுந்தீவு பகுதியில் இரு தரப்பினருக்கு இடையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில் சாட்சியமளிப்பதற்காக நேற்று நீதிமன்றத்திற்கு வந்தவர்கள், சாட்சியம் அளித்த பின்னர் நெடுந்தீவுக்குச் செல்வதற்காகப் பயணித்துக் கொண்டிருந்தபோது, முகங்களை மூடிய நிலையில் மோட்டார் சைக்கிள்களில் வந்த கும்பலொன்று அவர்களை வழிமறித்து வாள்களால் தாக்கியதாக கூறப்படுகிறது.

தாக்குதலுக்குப் பின்னர் குறித்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தாக்குதலுக்கு இலக்கான இளைஞர், தாக்குதலில் ஈடுபட்டவர்களில் ஒருவரை அடையாளம் கண்டுள்ளதாகவும், அது தொடர்பில் காவல்துறையினரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், தாக்குதலில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. நீதிமன்றில் சாட்சியமளித்த பின்னர் ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் இந்தச் சம்பவம், சாட்சிகளின் பாதுகாப்பு மற்றும் நீதித்துறை நடவடிக்கைகளில் அச்சுறுத்தல் ஏற்படுத்தப்படாதிருப்பது தொடர்பில் கவலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

சாட்சிகளை அச்சுறுத்துதல் அல்லது அவர்கள் மீது தாக்குதல் நடத்துதல் போன்ற நடவடிக்கைகள் நீதியின் செயற்பாட்டை பாதிக்கக்கூடியவை என்பதால், சம்பவம் தொடர்பில் விரைவான விசாரணை நடத்தப்பட்டு, குற்றம் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பாதிக்கப்பட்ட தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஓஸ்லோவில் நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்டுக்கு விடை அளிப்பு!

நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்டு தனது 89-வது வயதில் காலமானார் என நார்வே அரச அரண்மனை அறிவித்துள்ளது. 

அவர் வெள்ளிக்கிழமை காலை 6:35 மணிக்கு ஓஸ்லோவில் உள்ள தேசிய மருத்துவமனையில் காலமானதாக அரச அரண்மனை தெரிவித்தது. ஹரால்டு ஐரோப்பாவின் மிகவும் வயதான மன்னராக இருந்தார். பிரபலமான அந்த மன்னர் அரச குடும்பத்தை நவீனமயமாக்கினார்,

ஆனால் சமீப காலங்களில் பதவி துறந்த மற்ற வயதான மன்னர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்ற மறுத்துவிட்டார். அவரது மகன் இப்போது தானாகவே எட்டாம் ஹாக்கான் மன்னராகிறார். 

ஹரால்டு ஆகஸ்ட் 17 முதல் இரத்தக் கோளாறுக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

Thank You Google

Thank You Google
Thanks