செவ்வாய், 1 செப்டம்பர், 2026

இலங்கைக்கு ஐ.நா.வின் சிவப்பு எச்சரிக்கை !!

தற்போது நிலவும் எல் நினோ காலநிலை நிலைமை காரணமாக, இந்த ஆண்டின் இறுதிப் பகுதியில் இலங்கையில் அதிக மழைவீழ்ச்சி பதிவாவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. 

இதன்போது வெள்ளப்பெருக்கு, நீர்நிலைகள் மூழ்குதல் மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்குப் பாதிப்புகள் ஏற்படுவதற்கான அபாயம் உள்ளதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. 

எல் நினோ காலநிலை நிலைமை குறித்து ஆசிய பிராந்திய நாடுகளுக்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் தொடர்பான புதிய மதிப்பீட்டு அறிக்கையை வெளியிட்டே ஐக்கிய நாடுகள் சபை இதனைத் தெரிவித்துள்ளது. 

அந்த மதிப்பீட்டின்படி, எல் நினோ நிலைமை காரணமாகக் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டிய ஒரு நாடாக இலங்கை அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், நாட்டின் பிரதான அபாயமாக வறட்சியான காலநிலையை விட அதிக மழைவீழ்ச்சி கிடைப்பதே என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இலங்கையின் பல பிரதேசங்களில் குறிப்பிடத்தக்களவு மழைவீழ்ச்சி பதிவாகும் என்பதுடன், டிசம்பர் முதல் பெப்ரவரி வரை வடகிழக்கு பருவக்காற்று தீவிரமடைவதோடு இயல்பை விட அதிக மழை பெய்யக்கூடும் என அந்த மதிப்பீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை தொடர்பான அறிக்கையில், காலநிலை அபாயத்துடன் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் நெருக்கடியின் தாக்கம் காரணமாக இலங்கையின் பொருளாதார அழுத்தமும் அதிகரிக்கக்கூடும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

எவ்வாறாயினும், இந்த அபாயம் இன்னும் பாரிய தாக்கமாக மாறவில்லை என்பதால், முன்ஆயத்தங்களை மேற்கொள்வதற்கான தீர்மானமிக்க சந்தர்ப்பம் இன்னமும் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது. 

இதனிடையே, தற்போது அனுராதபுரம் மாவட்டத்தில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாகப் பல நீர்த்தேக்கங்கள் வற்றிப்போயுள்ளதாக அனுராதபுரம் மாவட்ட செயலாளர் ரஞ்சித் விமலசூரிய தெரிவித்துள்ளார். 

 எல் நினோ நிலைமையினால் பாதிக்கப்பட்டுள்ள விவசாய நிலங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு அரசாங்கம் ஏற்கனவே தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2026

சர்வதேசத்துக்கு சவாலாகும் மத்திய கிழக்கு ஒப்பந்தங்கள்!

மத்திய கிழக்கில் உள்ள இஸ்லாமிய அண்டை நாடுகள் வெளிநாட்டு சக்திகளை சார்ந்திருக்காமல் உள்ளக பொறிமுறையை கையாளவேண்டும் என ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் கூறியுள்ளார். 

மேலும், உருவாகி வரும் பிராந்திய ஒப்பந்தங்களும் ஏற்பாடுகளும் ஒரு புதிய கட்டத்தின் தொடக்கத்தைக் குறிக்கக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். பிராந்தியத்திற்கு நீடித்த பாதுகாப்பை வழங்கும் திறனும் வெளிநாட்டு சக்திகளுக்கு இல்லை என்பதையும் தான் நினைவுபடுத்துவதாக காலிபாஃப் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவ்வாறு செய்ய மத்திய கிழக்கு நாடுகள் விரும்பவில்லை என்பதையும் சமீபத்திய ஒப்பந்தங்கள் காட்டியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பிராந்தியத்திற்கு வெளியே உள்ள சக்திகளின் இருப்பு மற்றும் தலையீட்டை அடிப்படையாகக் கொண்ட பாதுகாப்பு பலவீனமானது மற்றும் சார்புடையது என்றும், அதே நேரத்தில் பிராந்திய நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பின் அடிப்படையில் கட்டமைக்கப்படும் பாதுகாப்பு நீடித்திருக்கக்கூடியது என்றும் காலிபாஃப் வாதிட்டுள்ளார். 

அத்தோடு, ஈரானில் வாழும் முஸ்லீம் தரப்புக்களுக்கு இடையேயான ஒற்றுமை என்பது ஒரு சடங்கு ரீதியான முழக்கம் அல்ல, மாறாக அது தேசிய சக்தியின் அடித்தளம் என்பதை சர்வதேசத்துக்கு தெரியப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் ஆயுதக் களஞ்சியசாலை மீது ரஷ்யா தாக்குதல் !

கிவ் நகரின் குடியிருப்புப் பகுதிக்கு அருகில் உக்ரைன் இராணுவத்திற்கான ஆயுதங்களை சேமித்து வைக்கும் களஞ்சியசாலை ஒன்றின் மீது ரஷ்ய நடத்திய ட்ரோன் தாக்குதலில் 37 பேர் உயிரிழந்துள்ளனர்.

 தாக்குதல் காரணமாக அங்கிருந்து சுமார் 400 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. வெள்ளிக்கிழமை பின்னிரவில் நடந்த இந்தத் தாக்குதலால் அங்குள்ள பீரங்கி குண்டுகள், கண்ணிவெடிகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் வெடித்ததில், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான காப்பகம் உள்ளிட்ட அருகிலுள்ள கட்டடங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஷெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். இந்த ஆயுதச் சேமிப்பு தளம் நிச்சயமாக அங்கு இருந்திருக்கக் கூடாது என்று கூறிய அவர், மக்களுக்கு அருகிலேயே வெடிபொருட்களை சேமித்து வைத்தவர்களின் அலட்சியம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

சமீப மாதங்களில் கிவ்வுக்கு அருகில் உள்ள ஆயுதக் களஞ்சியசாலைகள் மீது நடத்தப்பட்ட இரண்டாவது தாக்குதல் இதுவாகும். இது மக்கள் மத்தியில் மீண்டும் கோபத்தைத் தூண்டியுள்ளது.

 வெள்ளிக்கிழமை இரவு நடந்த இந்த பயங்கர தாக்குதலில் காயமடைந்த 42 பேரில் நான்கு குழந்தைகளும் அடங்குகின்றனர். இந்த தாக்குதல் காரணமாக அக்கிராமத்தில் சுமார் 130 வீடுகள் சேதமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நேபாள அனர்த்தம் - பலி 734

நேபாளத்தில் வெள்ளப் பேரிடரில் தற்போது 734 பேர் உயிரிழந்துள்ளனர் 3,000 பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை என அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. நேபாளம் - திபெத் எல்லை அருகே கடந்த 26 திகதி ஏற்பட்ட பனிச்சரிவு போடேகோஷி நதியில் மிகப்பெரிய வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியது. 

மத்திய நேபாளத்தை புரட்டிப்போட்ட வரலாறு காணாத இந்த பேரழிவு நூற்றுக்கணக்கானோரின் உயிர்களை காவு வாங்கி விட்டது. நேற்று வரை 600-க்கும் அதிகமான உடல்கள் மீட்கப்பட்டன. இது நிமிடத்துக்கு நிமிடம் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் இன்று மேலும் பலரது உடல்கள் மீட்கப்பட்டதால், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 734 ஆக அதிகரித்துள்ளது.

இடிபாடுகள் மற்றும் சேற்றுக்குவியலில் இருந்து மீட்கப்பட்ட உடல்கள் வைத்தியசாலைகளின் பிரேத அறைகளில் குவிந்துள்ளன. இதனால் புதிதாக வரும் உடல்களை வைக்க இடம் இல்லாமல் வைத்தியசாலை நிர்வாகங்கள் தவித்து வருகின்றன. எனவே தற்காலிக பிணக்கிடங்குகள் உருவாக்கப்பட்டு உடல்களை சேமிக்கும் பரிதாப நிலை ஏற்பட்டு உள்ளது.

அதேநேரம் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட இன்னும் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பற்றிய தகவல் இல்லை. இதனால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. மாயமானவர்களில் தமிழர்கள் உள்பட 167 இந்தியர்களும் அடங்கியிருப்பதால் இந்தியாவிலும் தொடர்ந்து சோகம் நிலவி வருகிறது.

இதற்கிடையே வெள்ளம் பாதித்த பகுதிகளில் 5-வது நாளாக இன்றும் முழு வீச்சில் மீட்புப்பணிகள் நடந்து வருகிறது. இரவு-பகலாக நடந்து வரும் இந்த மீட்புப்பணிகளில் நேபாள ராணுவத்தினர் 5 ஆயிரம் பேர் உள்பட 11 ஆயிரத்துக்கும் அதிகமான வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். 

இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு நிபுணர்களும் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் நேற்று வரை 4,451 பேரை மீட்டுள்ளனர். 

 இந்நிலையில் போட்டேகோஷி ஆற்றில் நீர்மட்டம் மீண்டும் உயர்ந்ததைத் தொடர்ந்து, மீட்புக் குழுக்களை விழிப்புடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். இமயமலை எல்லைப் பகுதியிலிருந்து தெற்கு நோக்கிப் பாயும் இந்த ஆறு, கடந்த புதன்கிழமை ஏற்பட்ட திடீர் வெள்ளத்தின்போது பெருமளவிலான நீரை மத்திய நேபாளப் பகுதிக்குக் கொண்டு சென்றது.

இந்நிலையில் நேபாள சுரங்கங்களில் 100க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளனர் 
என்றும், 100க்கும் மேற்பட்ட நீர்மின் பணியாளர்களும் சிக்கியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவும், சீனாவும் சிறப்பு மீட்புக் குழுக்களை அங்கு அனுப்பியுள்ளன. 

 மறுசீரமைப்பு மற்றும் பேரிடர் மீட்புப் பணிகளுக்கு பில்லியன் கணக்கில் செலவாகும் என நேபாளம் கருதுகிறது. இதனால் சர்வதேச ஆதரவையும் நாடுகிறது. இதனிடையே பனிப்பாறை கண்காணிப்பை இந்தியா தீவிரப்படுத்தி உள்ளது. பனிப்பாறை சரிவுடன் இந்த பேரிடர் தொடர்புபடுத்தப்பட்டதை அடுத்து, உத்தரகாண்ட் இமயமலைப் பனிப்பாறைகளையும் பனிப்பாறை ஏரிகளையும் கண்காணித்து வருகிறது.

நேபாளத்திற்கு உலகளாவிய உதவிகள் குவிந்து வருகின்றன. அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஐ.நா., ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச வனத்துறை ஆகியவை மனிதாபிமான உதவிகளுக்காக மில்லியன் கணக்கில் வழங்குவதாக உறுதியளித்துள்ளன. அதே நேரத்தில் சீனாவும் உதவி வழங்க முன்வந்துள்ளது.

சனி, 29 ஆகஸ்ட், 2026

கோதுமை மாவின் விலை 17 ரூபாவால் அதிகரிப்பு

பிரிமா (Prima) மற்றும் செரண்டிப் (Serendib) ஆகிய நிறுவனங்கள் கோதுமை மாவின் விலையை உயர்த்த நடவடிக்கை எடுத்துள்ளன. இதற்கமைய, கோதுமை மா கிலோ கிராம் ஒன்றின் விலையை 17 ரூபாவால் உயர்த்த அந்நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

இந்த விலை திருத்தம் இன்று (29) முதல் அமுலுக்கு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே, உயர்த்தப்பட்டுள்ள கோதுமை மாவின் விலை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் மத்திய செயற்குழு வரும் திங்கள்கிழமை (31) கூடுவதெனத் தீர்மானித்துள்ளது.

 அன்று கூடி, பாண் உள்ளிட்ட ஏனைய உணவுப் பொருட்களின் விலைகளை உயர்த்துவது குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என அச்சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

யாழ்-தென்னிந்திய திருச்சபை பிரதித் தலைவர் மீது தாக்குதல்

தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண ஆதீனத்தின் பிரதித் தலைவர் போதகர் அன்டனி செபஸ்டியன் மீது நேற்று வெள்ளிக்கிழமை (28) பிற்பகல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தாக்குதலில் காயமடைந்த போதகர் அன்டனி செபஸ்டியன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 


சம்பவம் தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் யாழ்ப்பாண ஆதீனத்தின் பிரதித் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்ட போதகர் செபஸ்டியன், திருச்சபையின் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்து வந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்தியாவில் இருந்து வருகை தந்திருந்த விசேட குழுவினரின் ஏற்பாட்டில், தென்னிந்திய திருச்சபையில் பணியாற்றும் போதகர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கான ஒன்றுகூடல் மற்றும் பயிற்சி நிகழ்வுகள் கடந்த சில நாட்களாக இடம்பெற்று வந்தன. 

அதன் இறுதி நாளான நேற்று, பேராயர் பேத்மதயாளன் தலைமையில் போதகர்களுக்கான விசேட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இதில் போதகர்களின் ஓய்வூதியம், எதிர்காலத் திட்டங்கள்

இலங்கைக்கு அருகில் நங்கூரமிட்டுள்ள ஈரானிய கப்பல்கள்

இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்கு அருகில் நங்கூரமிட்டுள்ளதாகக் கூறப்படும் கப்பல்கள் குறித்து அரசாங்கம் அவதானத்துடன் இருப்பதாக வெளியுறவு அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் நாயகம் துஷார ரொட்ரிகோ தெரிவித்துள்ளார். எனினும், குறித்த கப்பல்கள் இலங்கைக்குச் சொந்தமான நிலப்பரப்பிற்கு வெளியே இருப்பதால், அவை தொடர்பாக இலங்கைக்கு எந்தப் பொறுப்பும் இல்லை என்றும், அக்கப்பல்களுக்கு எந்தவொரு வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார். 

தங்கள் நாட்டு துறைமுகங்களை நோக்கி பயணிக்க முடியாமல் சுமார் 20 ஈரானிய எரிபொருள் கடற்போக்குவரத்து கப்பல்கள் தற்போது இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்கு அருகில் நங்கூரமிட்டுள்ளதாக 'TankerTrackers' இணையத்தளம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா விதித்துள்ள கடற்படைத் தடை காரணமாகவே குறித்த கப்பல்களால் ஈரானிய துறைமுகங்களை நோக்கி பயணிக்க முடியாமல் போயுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

இப்பின்னணியில், ஈரான் கொடியுடனான சுமார் 13 எரிபொருள் கடற்போக்குவரத்து கப்பல்களும், தடைகளைத் தவிர்க்கும் நிழற்படை கப்பல்கள் சிலவும் பாதுகாப்புத் தேடி இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்கு அருகில் தற்போது நங்கூரமிட்டுள்ளதாக 'TankerTrackers' இணையத்தளம் கூறுகிறது. 

 எனினும் குறித்த கப்பல்களில் தற்போது எரிபொருள் எதுவும் இல்லை என அந்த இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது.

Thank You Google

Thank You Google
Thanks