ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2026

ஈரோடு வஉசி பூங்காவில் 9 ஆண்டுகளாக அடைக்கப்பட்ட சாலைகள் திறப்பு

ஈரோடு வஉசி பூங்காவில் 9 ஆண்டுகளாக அடைக்கப்பட்டிருந்த சாலைகள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

ஈரோடு மாநகரின் மையப்பகுதியில் வஉசி பொழுதுபோக்கு பூங்கா மற்றும் சிறுவர் பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்கா அருகே தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்படும் மாவட்ட விளையாட்டு மைதானமும், விளையாட்டு மாணவிகள் விடுதியும், அரசு அருங்காட்சியகமும், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் பழமையான மகாவீர ஆஞ்சநேயர் கோயிலும் உள்ளது. 

நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டும் செயல்பட்டு வருகிறது. பூங்காவின் நுழைவாயில் பகுதியில் சத்தியமங்கலம் சாலையையும், பவானி சாலையையும் இணைக்கும் வகையில் பொது வழித்தடம் உள்ளது. இந்த வழித்தடத்தை பூங்காவிற்கு வரும் மக்களும், ஆஞ்சநேயர் கோயிலுக்கு வரும் பக்தர்களும், பொதுமக்களும் பயன்படுத்தி வந்தனர். 

நான்கு சக்கர வாகனங்களுக்கு இந்த வழியாக செல்ல தடை விதித்து, இரு சக்கர வாகனங்கள் மட்டும் செல்ல அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. இதனால், பூங்காவின் சுற்றுப்புற பகுதிகளில் இருக்கும் பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் குறைந்து இருந்தது. 

வஉசி பூங்காவின் மேம்பாட்டு பணி மற்றும் கொரோனாவை காரணம் காட்டி பூங்காவை இணைக்கும் 2 சாலைகளின் நுழைவு பகுதிகளிலும் இரு சக்கர வாகனங்களில் மக்கள் செல்ல மாநகராட்சி மூலம் தற்காலிக தடை விதிக்கப்பட்டது. குறிப்பாக, மேம்பாட்டு பணிகளின்போது, வாகனங்கள் உள்ளே வராமல் இருக்க பிரதான வழித்தடத்தில் படிக்கட்டுகள் கட்டப்பட்டன.

சத்தியமங்கலம் சாலையில் இருந்து வரும் நுழைவு பகுதியில் இரும்பு கம்பியால் தடுப்பு அமைத்தும், பவானி சாலையில் இரும்பு கதவு போட்டும் தடுத்தனர்.இது பொதுமக்களுக்கு மட்டுமின்றி பூங்காவுக்கு வரும் மக்களுக்கும், அருங்காட்சியகத்திற்கு வரும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கும், ஆஞ்சநேயர் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கும் பெரும் இடையூறாக இருந்து வந்தது. 

இந்த தடையை நீக்கி, பழையபடி இரு சக்கர வாகனங்களில் அனைத்து தரப்பு மக்களும் வந்து செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கக்கோரி மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் அந்த வார்டு கவுன்சிலர் பழனியப்பா செந்தில்குமார், மண்டல தலைவர் பழனிசாமி ஆகியோர் கோரிக்கை விடுத்து பேசினர். வஉசி பூங்கா வளாகத்தில் உள்ள அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மகாவீர ஆஞ்சநேயர் கோயில் சார்பில், பூங்கா நுழைவாயில் அடைக்கப்பட்டதற்கு மாவட்ட முதன்மை உரிமையியல் நீதிமன்றத்தில் பெறப்பட்ட உத்தரவினை, மேற்கொள்காட்டி மாநகராட்சியில் மனு அளித்தனர்.

இந்த நிலையில், பல கட்ட கோரிக்கைக்கு பின், மாநகராட்சி நிர்வாகம் வஉசி பூங்காவில் தடை செய்யப்பட்ட இரண்டு சாலைகளின் தடையை நீக்கி முழுவதுமாக திறந்து விட முடிவு செய்து தற்போது சாலைகளை திறந்து விட்டுள்ளது. மேலும், வாகனங்கள் செல்லாமல் சாலைகளில் அமைக்கப்பட்ட படிக்கட்டுகளையும் பாதியாக இடித்து, வாகனங்கள் செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சனி, 8 ஆகஸ்ட், 2026

உயர்தர மாணவர்களுக்கு விசேட அறிவித்தல்!!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஓகஸ்ட் 10 ஆம் திகதி ஆரம்பமாகி செப்டம்பர் 05 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் 2,532 மத்திய நிலையங்களில் நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் தெரிவித்துள்ளார்.


 பரீட்சைக்காக பாடசாலை விண்ணப்பதாரர்கள் 264,496 பேரும், தனியார் விண்ணப்பதாரர்கள் 107,814 பேரும் அடங்கலாக மொத்தம் 372,310 விண்ணப்பதாரர்கள் தோற்றவுள்ளனர். பாடசாலை விண்ணப்பதாரர்களின் பரீட்சை அனுமதி அட்டைகள் அந்தந்த அதிபர்களுக்கும், தனியார் விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகள் அவர்களின் முகவரிகளுக்கும் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார். 

 பரீட்சை மண்டபத்திற்குள் நுழைவதற்கு முன்னர் அனுமதி அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள தங்களது கையொப்பத்தை முறைப்படி சான்றொப்பம் செய்து கொள்வது கட்டாயமாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். அனுமதி அட்டை தொலைந்து போயிருந்தால், பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இருந்து அதை மீண்டும் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

பரீட்சையின் போது ஆளடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கு தேசிய அடையாள அட்டை, செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம் அல்லது செல்லுபடியாகும் கடவுச்சீட்டு ஆகியவற்றை மட்டுமே பயன்படுத்த முடியும்.

தேசிய அடையாள அட்டை தொலைந்துபோயிருந்தால், தற்காலிக அடையாள அட்டையாக தபால் அடையாள அட்டைக்கு பயன்படுத்தப்படும் இரண்டு புகைப்படங்களை பாடசாலை விண்ணப்பதாரர்கள் அதிபர் மூலமும், தனியார் விண்ணப்பதாரர்கள் கிராம உத்தியோகத்தர் மூலமும் சான்றொப்பம் செய்து வைத்திருக்க வேண்டும் என்றும் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

 பரீட்சை கால அட்டவணையை தீவிரமாகக் கவனத்திற் கொண்டு, பரீட்சை தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே பரீட்சை நிலையங்களுக்கு வருமாறு பரீட்சைத் திணைக்களம் மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. 

 மேலும் கையடக்கத் தொலைபேசிகள், ஸ்மார்ட் கடிகாரங்கள், குறிப்புகள் அல்லது புளூடூத் உள்ளிட்ட எந்தவொரு இலத்திரனியல் சாதனங்களையும் பரீட்சை மண்டபத்திற்குள் கொண்டு வர முற்றாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

பரீட்சை விதிகளுக்கு அமைவாகச் செயல்பட்டு பரீட்சை மோசடிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறும், கடந்த ஆண்டுகளிலும் பரீட்சை மோசடிகள் காரணமாக பல மாணவர்களின் முடிவுகள் இடைநிறுத்தப்பட வேண்டியிருந்ததாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டினார். 

 ஏதேனும் அவசர அனர்த்த நிலைமைகள் ஏற்ப்பட்டால், அதற்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுக்கவும் பரீட்சைத் திணைக்களம் தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அமெரிக்க செனட்டில் அதிரடி சட்டமூலம் நிறைவேற்றம்!

ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்யும் நாடுகளின் பொருட்களுக்கு 100 சதவீதம் வரை வரி விதிக்கும் சட்டமூலம் அமெரிக்க செனட் அவையில் (U.S. Senate) 86-11 என்ற பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

 "லிண்ட்சே ஓ கிரஹாம் ரஷ்யா மற்றும் ஈரான் தடைகள் சட்டம் 2026" என அழைக்கப்படும் இந்தச் சட்டம், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் மற்றும் எரிவாயுவை இறக்குமதி செய்யும் முக்கிய நாடுகளுக்கு 100 சதவீதம் வரை வரி விதிக்க வழிவகை செய்கிறது. 

இந்த நடவடிக்கை நிறைவேற்றப்பட்டால், சீனா மற்றும் இந்தியா உட்பட ரஷ்ய எரிபொருளை இறக்குமதி செய்யும் குறைந்தது ஐந்து முக்கிய நாடுகளைப் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கத்திய தடைகளில் இருந்து தப்பிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் ரகசிய கடல்சார் விநியோக வலையமைப்புகளையும் இந்த சட்டமூலம் குறிவைக்கிறது. செனட் சபையில் 86–11 என்ற வாக்குக் கணக்கில் இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது. 

இது அடுத்து பிரதிநிதிகள் சபைக்கு அனுப்பப்படும். பிரதிநிதிகள் சபையின் கோடைக்கால விடுமுறை காரணமாக, அங்கு ஓகஸ்ட் மாதத்திற்குப் பிறகு (செப்டம்பர் தொடக்கத்தில்) தான் வாக்கெடுப்பு நடைபெறும். 

 ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் போர் நடவடிக்கைகளுக்குச் செல்லும் பணப்புழக்கத்தைத் தடுப்பதே இதன் முதன்மை நோக்கம் என அமெரிக்க அரசியல் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். 

 உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி இந்த நடவடிக்கையை வரவேற்று அமெரிக்க செனட் சபைக்கு தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2026

சவூதி ரியாத்மீது ஹூதி தாக்குதல்!!

சவூதி அரேபியா மீது ஏமனின் ஹூதி அமைப்பு நேற்று (ஆகஸ்ட் 6) நடத்திய தாக்குதலில் பொதுமக்களில் 11 பேர் காயமடைந்ததாக ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அதோடு, ஹூதியுடன் ஈரானின் ஆதரவுடன் இயங்கும் மற்ற ஈராக்கிய அமைப்புகள் ஒன்றாகத் திட்டமிட்டுத் தங்கள்மீது தாக்குதல் நடத்தவிருப்பது கிட்டத்தட்ட உறுதி என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இரத்தினபுரி - குருவிட்ட சிறையில் பதற்றம்!

குறைந்தபட்ச அதிகாரத்தை பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தியதில் குருவிட்ட சிறைச்சாலையில் நிலவிய பதற்றமான சூழ்நிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக நீதியமைச்சர் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். 

இரத்தினபுரி குருவிட்ட சிறைச்சாலைக்குள் இன்று (7) காலை இடம்பெற்ற மோதலில் 2 பேர் பலியான நிலையில் 4 கைதிகள் காயமடைந்துள்ளனர். நேற்றிரவு குறித்த சிறைச்சாலையில் பதற்ற நிலையில் ஏற்பட்ட நிலையில் அது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் இன்று (7) காலை மீண்டும் அந்த சிறைச்சாலைக்குள் கைதிகளால் பதற்ற நிலை உருவானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

 நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக பொலிஸாரினால் கண்ணீர்புகை பிரயோகம் நடத்தப்பட்டது. இந்நிலையில் குறித்த சம்பவத்தில் 4 கைதிகள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

 இந்த சம்பவத்தின் போது குருவிட்ட சிறைச்சாலை வைத்தியசாலைக்கு கைதிகளால் சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பல்லன்சேன சிறைச்சாலை கைதிகள் போராட்டம்!

நீர்கொழும்பு, தளுபொத, பல்லன்சேன திறந்தவெளிச் சிறைச்சாலையில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது கைதிகள் சிலர் கூரையின் மீது ஏறியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

கடந்த மாதம் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சூழ்நிலையைத் தொடர்ந்து, அங்கிருந்த கைதிகள் சிலர் பல்லன்சேன திறந்தவெளிச் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வியாழன், 6 ஆகஸ்ட், 2026

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழி!!

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட 44 ஆம் நாள் அகழ்வுப் பணிகள் இன்றைய தினம் புதன்கிழமை (2026 ஓகஸ்ட் 05) நீதவான் நீதிமன்றக் கண்காணிப்பில் முன்னெடுக்கப்பட்ட நிலையில், புதிதாக 08 மனித என்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 08 என்புக் கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. நீதிமன்றத்தின் உத்தியோகபூர்வ உத்தரவுக்கு அமைய, தொல்லியல் மற்றும் மருத்துவ நிபுணர்களின் தீவிர கண்காணிப்பில் இப் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

செம்மணி மனிதப் புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை 56 நாட்கள் தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கு நீதிமன்றம் உத்தியோகபூர்வ அனுமதி வழங்கியிருந்தது.

 அதற்கமைய, 44 ஆம் நாளான இன்றைய தின அகழ்வுப் பணியின் போது, ஏற்கனவே அடையாளம் காணப்பட்டிருந்த 8 என்புக் கூடுகள் சான்றுப் பொருட்களாக உத்தியோகபூர்வமாகத் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. அத்துடன், இன்றைய தின அகழ்வுச் நடவடிக்கைகளின் போது புதிதாக மேலும் 08 மனித என்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டு, அவற்றுக்கான அகழ்வுப் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 செம்மணிப் புதைகுழியில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்கள் என இதுவரையில் மொத்தம் 98 நாட்கள் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

இக் காலப்பகுதியில் மொத்தமாக 491 மனித என்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 489 என்புக் கூடுகள் உத்தியோகபூர்வமாக முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Thank You Google

Thank You Google
Thanks