ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2026

ஈரோடு வஉசி பூங்காவில் 9 ஆண்டுகளாக அடைக்கப்பட்ட சாலைகள் திறப்பு

ஈரோடு வஉசி பூங்காவில் 9 ஆண்டுகளாக அடைக்கப்பட்டிருந்த சாலைகள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

ஈரோடு மாநகரின் மையப்பகுதியில் வஉசி பொழுதுபோக்கு பூங்கா மற்றும் சிறுவர் பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்கா அருகே தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்படும் மாவட்ட விளையாட்டு மைதானமும், விளையாட்டு மாணவிகள் விடுதியும், அரசு அருங்காட்சியகமும், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் பழமையான மகாவீர ஆஞ்சநேயர் கோயிலும் உள்ளது. 

நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டும் செயல்பட்டு வருகிறது. பூங்காவின் நுழைவாயில் பகுதியில் சத்தியமங்கலம் சாலையையும், பவானி சாலையையும் இணைக்கும் வகையில் பொது வழித்தடம் உள்ளது. இந்த வழித்தடத்தை பூங்காவிற்கு வரும் மக்களும், ஆஞ்சநேயர் கோயிலுக்கு வரும் பக்தர்களும், பொதுமக்களும் பயன்படுத்தி வந்தனர். 

நான்கு சக்கர வாகனங்களுக்கு இந்த வழியாக செல்ல தடை விதித்து, இரு சக்கர வாகனங்கள் மட்டும் செல்ல அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. இதனால், பூங்காவின் சுற்றுப்புற பகுதிகளில் இருக்கும் பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் குறைந்து இருந்தது. 

வஉசி பூங்காவின் மேம்பாட்டு பணி மற்றும் கொரோனாவை காரணம் காட்டி பூங்காவை இணைக்கும் 2 சாலைகளின் நுழைவு பகுதிகளிலும் இரு சக்கர வாகனங்களில் மக்கள் செல்ல மாநகராட்சி மூலம் தற்காலிக தடை விதிக்கப்பட்டது. குறிப்பாக, மேம்பாட்டு பணிகளின்போது, வாகனங்கள் உள்ளே வராமல் இருக்க பிரதான வழித்தடத்தில் படிக்கட்டுகள் கட்டப்பட்டன.

சத்தியமங்கலம் சாலையில் இருந்து வரும் நுழைவு பகுதியில் இரும்பு கம்பியால் தடுப்பு அமைத்தும், பவானி சாலையில் இரும்பு கதவு போட்டும் தடுத்தனர்.இது பொதுமக்களுக்கு மட்டுமின்றி பூங்காவுக்கு வரும் மக்களுக்கும், அருங்காட்சியகத்திற்கு வரும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கும், ஆஞ்சநேயர் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கும் பெரும் இடையூறாக இருந்து வந்தது. 

இந்த தடையை நீக்கி, பழையபடி இரு சக்கர வாகனங்களில் அனைத்து தரப்பு மக்களும் வந்து செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கக்கோரி மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் அந்த வார்டு கவுன்சிலர் பழனியப்பா செந்தில்குமார், மண்டல தலைவர் பழனிசாமி ஆகியோர் கோரிக்கை விடுத்து பேசினர். வஉசி பூங்கா வளாகத்தில் உள்ள அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மகாவீர ஆஞ்சநேயர் கோயில் சார்பில், பூங்கா நுழைவாயில் அடைக்கப்பட்டதற்கு மாவட்ட முதன்மை உரிமையியல் நீதிமன்றத்தில் பெறப்பட்ட உத்தரவினை, மேற்கொள்காட்டி மாநகராட்சியில் மனு அளித்தனர்.

இந்த நிலையில், பல கட்ட கோரிக்கைக்கு பின், மாநகராட்சி நிர்வாகம் வஉசி பூங்காவில் தடை செய்யப்பட்ட இரண்டு சாலைகளின் தடையை நீக்கி முழுவதுமாக திறந்து விட முடிவு செய்து தற்போது சாலைகளை திறந்து விட்டுள்ளது. மேலும், வாகனங்கள் செல்லாமல் சாலைகளில் அமைக்கப்பட்ட படிக்கட்டுகளையும் பாதியாக இடித்து, வாகனங்கள் செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks