வெள்ளி, 4 செப்டம்பர், 2026

மட்டக்களப்பில் பாம்பின் விஷம் பட்ட நாவல் பழம் சிறுவன் பலி!!

மட்டக்களப்பு, வெல்லாவெளியில் நிலத்தில் வீழ்ந்து கிடந்த பாம்பின் விஷம் பட்டதாக சந்தேகிக்கப்படும் நாவல் பழத்தை உண்ட 11 வயதுடைய சிறுவன் ஒருவர் உயிரிழந்த பரிதாபகரமான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. 

மட்டு வெல்லாவெளி காவல்துறை பிரிவிலுள்ள பாலையடிவட்டை பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை (03) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

 பாலையடிவட்டை வைத்தியசாலை வீதியைச் சேர்ந்த 11 வயதுடைய 37-ஆம் கிராமம் நவகிரி வித்யாலயத்தில் 6ம் ஆண்டில் கல்வி கற்று வந்த ரொ.சஞ்சீவ் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுவனின் வீட்டிற்கு முன்னால் நின்ற நாவற்பழ மரத்தில் இருந்து நிலத்தில் வீழ்ந்து கிடந்த நாவற்பழத்தை சம்பவ தினமான நேற்று மாலை எடுத்து உண்டுள்ள நிலையில் சிறிது நேரத்தில் சிறுவன் மயங்கி வீழ்ந்ததையடுத்து அவரை உடனடியாக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் அவன் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பாம்பின் விஷம் பட்ட நாவற்பழத்தை உண்டதால் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது .

 இதனையடுத்து சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட் படுத்துவதற்கான நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.றுவன் மரத்தடியில் விழுந்து கிடந்த நாவற்பழத்தை எடுத்துச் சாப்பிட்டதாகவும், அதில் பாம்பின் விஷம் பட்டிருந்ததாலேயே இந்த மரணம் நிகழ்ந்ததாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. 

ஆனால், மருத்துவ மற்றும் விஞ்ஞான ரீதியாக ஆராயும்போது, பாம்பின் விஷம் பட்ட ஒரு பழத்தைச் சாப்பிட்டதால் ஒருவர் உயிரிழப்பது என்பது முற்றிலும் சாத்தியமற்ற ஒரு விஷயமாகும். இது மக்களிடையே நீண்ட காலமாக நிலவி வரும் ஒரு தவறான நம்பிக்கையே தவிர இதில் எந்த அறிவியல் உண்மையும் இல்லை. ​

இதற்கான முக்கிய காரணம், பாம்பின் விஷம் என்பது அடிப்படையில் சில புரதங்கள் மற்றும் நொதிகளால் ஆன ஒரு திரவமாகும். பாம்பு ஒருவரைக் கடிக்கும் போது அந்த விஷம் தோலினூடாக நேரடியாக இரத்தத்தில் கலப்பதால் மட்டுமே அது மனிதர்களுக்கு ஆபத்தாக மாறுகிறது. ஆனால், விஷம் பட்ட ஒரு பழத்தையோ அல்லது உணவையோ நாம் சாப்பிடும்போது, அது நேரடியாக நமது இரைப்பையைச் சென்றடைகிறது. 

நமது வயிற்றில் சுரக்கும் சக்திவாய்ந்த அமிலங்கள், சாதாரண உணவைச் செரிப்பது போலவே அந்த விஷத்திலுள்ள புரதங்களையும் சிதைத்து முற்றிலும் செயலிழக்கச் செய்துவிடும். விஷத்தை உண்பதும், அது நேரடியாக இரத்தத்தில் செலுத்தப்படுவதும் முற்றிலும் வெவ்வேறானவை. ​அப்படியானால் இந்த மரணத்திற்கான உண்மையான காரணம் என்னவாக இருக்கலாம் என்று சிந்தித்தால், வேறு சில நடைமுறைச் சாத்தியங்களே உள்ளன. 

சிறுவன் பழத்தைப் பொறுக்கும்போது, எறும்பு கடிப்பது போன்று மிகச் சிறிய வலியை மட்டுமே ஏற்படுத்தக்கூடிய கட்டுவிரியன் போன்ற கொடிய பாம்புகள் ஏதேனும் நேரடியாகக் கடித்திருக்கலாம், அதைச் சிறுவனும் உணராமல் விட்டிருக்கலாம். அல்லது கீழே கிடந்த பழத்தில் அல்லது அந்த நிலப்பகுதியில் வீரியமிக்க விவசாயப் பூச்சிக்கொல்லி மருந்துகள் கலந்திருக்கலாம். 

இது தவிர, திடீரென ஏற்பட்ட கடுமையான ஒவ்வாமை (அலர்ஜி) அல்லது வேறு ஏதேனும் உடல்நலப் பாதிப்புகள் கூட இந்தத் திடீர் மரணத்திற்குக் காரணமாக அமைந்திருக்கலாம். ​எனவே, "பாம்பின் விஷம் பட்ட நாவல் பழம்" என்பது ஆரம்பக்கட்ட விசாரணையின் யூகமே தவிர, அது முடிவான உண்மையல்ல. 

சிறுவனின் உடற்கூற்றுப் பரிசோதனை (Post-mortem) முடிவுகள் மூலமாக மட்டுமே மரணத்திற்கான உண்மையான காரணத்தை மருத்துவத்துறையினரால் உறுதியாகக் கூற முடியும். அதுவரை தேவையற்ற அச்சத்தையும், அறிவியலுக்குப் புறம்பான தகவல்களையும் பகிர்வதைத் தவிர்த்து, துயரத்தில் இருக்கும் அந்தச் சிறுவனின் குடும்பத்தினருக்கு நமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்போம்.

நீலாங்கரை, உத்தண்டி பகுதிகளில் 21 பங்களாக்களுக்கு நோட்டீஸ்

துரைப்பாக்கம், செப்.4: கிழக்கு கடற்கரை சாலையில் கடற்கரை ஒழுங்குமுறை மண்டல விதிகளை மீறி கட்டப்பட்ட 21 சொகுசு வீடுகளுக்கு சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அளித்துள்ளது. 

கிழக்கு கடற்கரை சாலை என்பது சென்னை திருவான்மியூரில் தொடங்கி கன்னியாகுமரி வரை நீண்டுள்ள ஒரு அழகிய மற்றும் முக்கியமான கடலோர சாலையாகும். இதில், சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கடற்கரை ரிசார்ட்டுகள், பொழுதுபோக்கு பூங்காக்கள் மற்றும் கலாச்சார மையங்கள், கேளிக்கை விடுதிகள் அதிகளவில் அமைந்துள்ளன. 

இந்த பகுதியின் கடற்கரையின் அழகை ரசிப்பதற்காக பல பிரபலங்களும், வசதி படைத்தவர்களும் கோடிக்கணக்கில் செலவு செய்து, கடற்கரை அருகில் சொகுசு பங்களாக்களை கட்டி உள்ளனர்.

இந்நிலையில், கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம் மற்றும் உத்தண்டி ஆகிய பகுதிகளில், கடற்கரை ஒழுங்குமுறை மண்டல விதியை மீறி கட்டப்பட்ட 21 சொகுசு வீடுகள் மற்றும் பங்களாக்களுக்கு சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

 அதாவது வீட்டின் உரிமையாளர்கள் தாமாக முன்வந்து வீடுகளை காலி செய்ய 15 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. விதிக்கப்பட்ட காலக்கெடுவுக்கு பிறகு கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டு, இடிக்கும் பணிகள் தொடங்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 10 முதல் 15 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த குடியிருப்போரின் மேல்முறையீட்டு மனுக்களை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை நிராகரித்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது. 

கடற்கரை ஒழுங்குமுறை விதிமுறைகளின்படி, 1991ம் ஆண்டுக்கு முன்பு ஏற்கனவே இருந்த சாலைகள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட உள்கட்டமைப்பு சார்ந்த உட்புற பகுதியில் உள்ள நிலத்தில் கட்டுமான பணிகளை மேற்கொள்ள அனுமதி உண்டு.

 இங்கு அனுமதிக்கப்பட்ட தரையமைப்பு குறியீடு 0.8 ஆகும். ஆனால் கடலோரப் பகுதிகளில் அனுமதிக்கப்பட்ட தள பரப்பளவு குறியீடு 0.8 அளவுக்கு மேல் கட்டடங்கள் கட்டப்பட்டிருப்பது மற்றும் உரிய சுற்றுச்சூழல் அனுமதியின்றி செயல்படுவது கண்டறியப்பட்டுள்ளது. 

 அதாவது, 192, 194 மற்றும் 197 ஆகிய வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள பல கட்டிடங்கள் 0.8க்கும் அதிகமான அனுமதிக்கப்பட்ட தரையமைப்பு குறியீடு அளவை கொண்டு விதிமுறைகளை மீறியுள்ளன.கடற்கரையோரம் சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு வீடுகள், கட்டிடங்கள் இருக்கக் கூடாது என்ற தீர்ப்பு சில வருடங்களுக்கு முன்பு நீதிமன்றம் வழங்கியது. 

இதை தொடர்ந்து நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், உத்தண்டி ஆகிய பகுதிகளில் கடற்கரை அருகில் உள்ள வீடுகளை சென்னை மாநகராட்சி கணக்கெடுப்பு நடத்தியது. அதில் 798 வீடுகள் விதிகளை மீறி கட்டப்பட்டு உள்ளதாக தெரியவந்தது. இதுகுறித்த விவரங்களை, தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறையிடம் மாநகராட்சி அதிகாரிகள் கொடுத்துள்ளனர்.

கடலோர ஒழுங்கு முறை மண்டல விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் மீது சென்னை மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதை அறிந்த 440 வீடுகளின் உரிமையாளர்கள் தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறையிடம் மேல் முறையிடு செய்து மனு அளித்தனர். 

அதில் 24 வீடுகளின் மனுக்களை தள்ளுபடி செய்த தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறை 21 வீடுகளை அகற்ற சென்னை மாநகராட்சி 15வது மண்டத்திற்கு பரிந்துரை செய்துள்ளது. 

இதையடுத்து 21 வீடுகளுக்கு சென்னை மாநகராட்சி 15வது மண்டலம் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டு மண்டல உதவி கமிஷனர் லோகேஸ்வரன் தலைமையில் செயற்பொறியாளர் மனோகரன் மற்றும் உதவி பொறியாளர்கள் வீடுகளுக்கு நோட்டீஸ் வழங்கினார்.

வியாழன், 3 செப்டம்பர், 2026

2026 பரீட்சையில் யாழ் சுரேந்தர் சபின் செய்த சாதனை

5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் 188 புள்ளிகளை பெற்றுக் கொண்ட சுரேந்தர் சபின் தமிழ் மொழிமூலம் தேசிய ரீதியில் முதலாம் இடம் பெற்று சாதனைப் படைத்துள்ளார்

யாழ்ப்பாணம் மல்லாகம் கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி கனிஷ்ட வித்தியாலயத்தில் கல்வி கற்று வரும் இவர், தமது பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார். அதேநேரம் சிங்கள மொழி மூலம் பெற்றுக்கொண்ட அதிகூடிய புள்ளியாக 193 குருநாகல் மாவட்டத்தில் பதிவாகியது.

 2026 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்று (2) மாலை வௌியாகின. இம்முறை அதிகூடிய வெட்டுப்புள்ளியாக 139 அமைந்துள்ளதுடன், பெறுபேறுகளுக்கு அமைய 56,000 மாணவர்கள் வெட்டுப்புள்ளியை விட அதிக புள்ளிகளைப் பெற்றுள்ளனர். 

 கடந்த ஒகஸ்ட் 09ஆம் திகதி நடைபெற்ற இந்த பரீட்சைக்காக 294,132 பரீட்சார்த்திகள் விண்ணப்பித்திருந்த நிலையில், அவர்களில் 289,867 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க நீதிமன்றத்தில் வெனிசுலா முன்னாள் ஜனாதிபதி மதுரோ மனு

அமெரிக்க நீதிமன்றத்தில் தன் மீது சுமத்தப்பட்டுள்ள போதைப்பொருள் கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டுக்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என வெனிசுலாவின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மனு தாக்கல் செய்துள்ளார். 

தன்னாதிக்கம் கொண்ட ஒரு நாட்டின் தலைவர் (Head of State) என்ற ரீதியில் தனக்கு சர்வதேச சட்டங்களின்படி குற்றவியல் நடவடிக்கைகளிலிருந்து முழுமையான விலக்குரிமை (Immunity) உள்ளதாக அவர் தனது மனுவில் வாதிட்டுள்ளார். அமெரிக்காவின் சிறப்பு இராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி 3-ஆம் திகதி காரகாஸ் நகரில் வைத்து மதுரோ கைது செய்யப்பட்டு அமெரிக்காவுக்குக் கொண்டு செல்லப்பட்டார். 

தற்போது புரூக்ளின் கூட்டாட்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மதுரோவின் சட்டத்தரணி பாரி போலாக் (Barry Pollack), மன்ஹாட்டன் நீதிமன்ற நீதிபதி ஆல்வின் ஹெல்லர்ஸ்டீனிடம் (Alvin Hellerstein) சமர்ப்பித்த மனுவில், “நூற்றாண்டுகளாக வெளிநாட்டு அரசுத் தலைவர்களுக்கு உள்ள முழுமையான பாதுகாப்பை மீறி இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார். 

 2018 மற்றும் 2024 வெனிசுலா தேர்தல்கள் முறைகேடானவை என்று கூறி, 2019-ஆம் ஆண்டிலிருந்தே அமெரிக்க ஜனாதிபதி நிர்வாகம் மதுரோவை அந்நாட்டின் முறையான ஜனாதிபதியாக அங்கீகரிக்க மறுத்து வருகிறது. 

இந்த மனு மீது அமெரிக்க அரசுத் தரப்பு எதிர்வரும் ஒக்டோபர் 2-ஆம் திகதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும், இது தொடர்பான விசாரணை நவம்பர் 17-ஆம் திகதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு நிராகரிக்கப்பட்டால், மதுரோ மீதான நீதிமன்ற விசாரணை 2027 ஜூன் 1-ஆம் திகதி ஆரம்பமாகும் எனத் தெரிகிறது.

ஈரான் டேங்கர் மீது அமெரிக்கா தாக்குதல்

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நிலவி வரும் மோதல் போக்கு மீண்டும் உச்சத்தை எட்டியுள்ளது. குறிப்பாக ஈரானுக்கு எதிரான தனது ராணுவ நடவடிக்கைகளை அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ளது. 

ஈரான் தரப்பிலிருந்து நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பதிலடியாகவும், சர்வதேச கப்பல் போக்குவரத்தை பாதுகாப்பதாகவும் கூறி, அமெரிக்க ராணுவம் ஈரானின் பல்வேறு பகுதிகளை குறிவைத்து சுமார் 100-க்கும் மேற்பட்ட இலக்குகள் மீது சக்திவாய்ந்த வான்வழி தாக்குதல்களை நடத்தியுள்ளது. ஈரான் அரசுக்குச் சொந்தமான இரண்டு பெரிய எண்ணெய் டேங்கர் கப்பல்களும் இந்த தாக்குதல்களில் இலக்கு வைக்கப்பட்டு தாக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஹார்முஸ் ஜலசந்தி பகுதி யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது என்பதில் ஈரானும் அமெரிக்காவும் உடன்பாட்டை எட்டாமல் உள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் Tanker-for-Tanker என்ற கொள்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளார். அதாவது ஈரானின் ஒவ்வொரு தாக்குதலுக்கும் அந்த நாட்டின் டேங்கர் கப்பல்களை தாக்குவது என முடிவு செய்துள்ளது. 

ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில், ஈரானின் புரட்சிகர பாதுகாப்பு படை கடலில் கண்ணிவெடிகளை பதிக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. பந்தர் அப்பாஸ் துறைமுகத்திற்கு அருகில் உள்ள லாராக் தீவு பகுதியில், ஈரான் படையினர் கடல் கண்ணிவெடிகளை ஏற்றி செல்லும் ராக்கெட் லாஞ்சர்களை தயார்படுத்தி கொண்டிருந்தபோது அமெரிக்கப் படைகள் அவற்றை தாக்கி அழித்தன என தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 29,108 காவலர் பணியிடங்கள்-முதல்வர் விஜய்

தமிழகத்தில் புதிதாக 29,108 காவல் பணியிடங்கள் உருவாக்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்து உள்ளார். விரைவில் 10,000 காவலர்கள் நியமிக்கப்படுவர், இதில் 5,000 பெண் காவலர்கள் அடக்கம். 

காவல்துறையை நவீனமயமாக்க ரூ.212 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். காவல் நிலையங்களுக்கு சில்லறை செலவினம் உயர்த்தி வழங்கப்படும் எனவும் முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். 

ரூ.14 கோடியில் டிஎன்ஏ பரிசோதனை மையம் அமைக்கப்படும். 6 இடங்களில் புதிய தீயணைப்பு நிலையம் அமைக்கப்படும் எனவும் முதல்வர் விஜய் அறிவித்து உள்ளார்.

பாதாள குழுவினருக்கு மோட்டார் சைக்கிள் "போம்புவல சுத்தா" கைது.

பாதாள உலகச் செயற்பாடுகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களுக்கு மோட்டார் சைக்கிள்களை வழங்கியதாக சந்தேகிக்கப்படும் "போம்புவல சுத்தா" என்ற புனைப்பெயரில் அழைக்கப்படும் 30 வயதுடைய சந்தேகநபர் ஒருவரை களுத்துறை குற்றத்தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகொட சந்திப் பகுதியில் உள்ள கடையொன்றின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் திருடப்பட்டமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி (CCTV) காணொளிகள் மூலம் சந்தேகநபரை அடையாளம் கண்டுள்ளனர். 


பின்னர் களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் குழுவினர், போம்புவல பகுதியில் குறித்த மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற நிலையில் சந்தேகநபரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்படும் போது, குறித்த மோட்டார் சைக்கிளின் இலக்கத் தகட்டில் பதிவு இலக்கங்கள் மாறுபடும் வகையில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

மேலதிக விசாரணைகளின் போது, இவர் இங்கிரிய, இரத்தினபுரி மற்றும் கிரியெல்ல ஆகிய பொலிஸ் பிரிவுகளில் பல மோட்டார் சைக்கிள் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்பது தெரியவந்துள்ளது. 

இவ்வாறு திருடப்படும் மோட்டார் சைக்கிள்களை போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஏனைய குற்றச் செயல்களுக்காக பாதாள உலகக் குழுக்களுக்கு வழங்குவதற்கு இவர் செயற்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், களுத்துறை குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Thank You Google

Thank You Google
Thanks