திங்கள், 10 ஆகஸ்ட், 2026
இலங்கையில் மரண தண்டனை கைதி ரனேபுர தேவகே தலைமறைவு !
2019 ஆம் ஆண்டு ராகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வல்பொல பகுதியில் பெண் ஒருவரைத் தாக்கிக் கொலை செய்த சம்பவம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
நீர்கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் குறித்த குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாமையினால் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் விதிகளுக்கமைய வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொலிஸாரால் தேடப்பட்டு வரும் குற்றவாளி, ரனேபுர தேவகே ரனுக எரந்த விஜேதுங்க எனும் 38 வயதுடைய நபராவார்.
இவரது முகவரியாக இலக்கம் 35/1, உக்கஹேன, வல்பொல, ராகம எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த குற்றவாளி தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால், ராகம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு 071 859 1604 என்ற தொலைபேசி இலக்கத்திலோ அல்லது குற்றப் பிரிவுப் பொறுப்பதிகாரிக்கு 071 962 7561 என்ற தொலைபேசி இலக்கத்திலோ தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களைக் கேட்டுக்கொள்கின்றனர்
சீனாவில் பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
பலத்த மழையினால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்படக்கூடும் என்ற அச்சத்திற்கு மத்தியில், 'டால்பின்' (Dolphin) சூறாவளி கிழக்குச் சீனாவில் கரையைத் தொட்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலைக்குள் பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.
ஜெஜியாங் (Zhejiang) மாகாணத்தின் கடலோர நகரமான வென்ஜோ (Wenzhou), 9 லட்சத்திற்கும் அதிகமான மக்களை இடம்பெயரச் செய்ததாகவும், 1,500-க்கும் மேற்பட்ட அவசரக்கால முகாம்களைத் திறந்ததாகவும் தெரிவித்துள்ளது. அண்டை மாகாணமான ஃபுஜியானில் (Fujian), அதிக ஆபத்துள்ள பகுதிகளில் வசித்த 98,900 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.
ஷாங்காயில், ஞாயிற்றுக்கிழமை மாலை நிலவரப்படி, அபாயகரமானதாகக் கருதப்படும் பகுதிகளில் இருந்து 215,600 பேர் வெளியேற்றப்பட்டனர்.
இது முன்னர் அறிவிக்கப்பட்ட 30,300 என்ற எண்ணிக்கையை விட கணிசமாக அதிகமாகும்.
ஷாங்காயின் மையத்தில் உள்ள ஒரு வானிலை நிலையம், திங்கட்கிழமை காலை 7 மணி வரையிலான 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 313 மி.மீ மழையைப் பதிவு செய்தது.
இது 150 ஆண்டுகளுக்கும் மேலான பதிவுகளில் பதிவான மிக அதிகபட்ச 24 மணி நேர மழையாகும். நகரில் உள்ள மற்றொரு நிலையம் கிட்டத்தட்ட 400 மி.மீ மழையைப் பதிவு செய்தது. நகரின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றான வுகாங் மாளிகையைச் சுற்றியுள்ள தெருக்களில் வெள்ளம் சூழ்ந்ததைக் காட்டும் காணொளிகள் பரவியதால், "ஷாங்காய் கடலாக மாறுகிறது" என்ற ஹேஷ்டேக் சீன சமூக ஊடக தளமான வெய்போவில் பிரபலமாகத் தொடங்கியது.
வெள்ளிக்கிழமை மாலை முதல் திங்கட்கிழமை காலை வரை ஜெஜியாங் முழுவதும் பதிவான சராசரி மழையளவு 173 மி.மீ-ஐ எட்டியது. இது லெகிமா மற்றும் பாவி உள்ளிட்ட முந்தைய பெரிய புயல்களின் போது காணப்பட்ட அளவுகளை விட அதிகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
டால்பின் புயல் திங்கட்கிழமை காலை 5 மணிக்குள் வெப்பமண்டல புயலாக வேகமாக வலுவிழந்தது. ஆனால், புயல் தொடர்ந்து வடக்கு நோக்கியும் மேலும் உள்நாட்டிற்குள்ளும் நகர்ந்ததால், கிழக்கு மற்றும் மத்திய சீனாவின் பெரும் பகுதிகளில் கனமழை பெய்யும் என முன்னறிவிப்பு செய்யப்பட்டது.
இது வடக்கு நோக்கி ஷான்டாங் வரை பரவி, ஹெனான், ஹுபேய், அன்ஹுய், ஜியாங்சு, ஜெஜியாங் மற்றும் ஷாங்காய் ஆகிய மாகாணங்களையும் பாதிக்கும்.
செவ்வாய், 13 ஜனவரி, 2026
டாலர் கட்டமைப்பிற்கு வெளியே இயங்கியதே புலிகளின் அழிவுக்கு முக்கிய காரணியாக அமைந்தது.
உலக வரைபடத்தில் ஒரு சிறிய நிலப்பரப்பை மீட்டெடுக்கப் போராடிய விடுதலைப் புலிகள் இயக்கம், ஏன் ஒட்டுமொத்த உலக நாடுகளாலும் வளைத்து வளைத்துத் தாக்கி அழிக்கப்பட்டனர்?
அதற்கான விடை ‘தமிழீழ வைப்பகத்தில்’ (Bank of Tamil Eelam) ஒளிந்திருந்தது.
இலங்கையில் விடுதலைப் புலிகள் ஒரு தனி தேசத்திற்கே உரிய (De-facto State) அனைத்துக் கட்டமைப்புகளையும் கொண்டிருந்தனர்.
குறிப்பாக, அவர்கள் உருவாக்கிய ‘தமிழீழ வைப்பகம்’ (Bank of Tamil Eelam) மற்றும் அவர்களின் தன்னாட்சிப் பொருளாதாரம் உலக வங்கியியல் ஒழுங்கிற்கு (Central Banking System) பெரும் அச்சுறுத்தலாக அமைந்தது.
இன்று உலகிலுள்ள பெரும்பாலான நாடுகளின் மத்திய வங்கிகள் ஒரு குறிப்பிட்ட வங்கியியல் முறையின் கீழேயே (Central Banking System) இயங்குகின்றன. உலக வர்த்தகம் என்பது Petro-Dollar எனப்படும் அமெரிக்க டாலரிலேயே நடக்க வேண்டும்.
யாராவது ஒரு தலைவர் தனது நாட்டு வளங்களை டாலருக்கு மாற்றாகத் தங்கம் (Gold Standard) அல்லது வேறு ஒரு பொது நாணயத்தில் வர்த்தகம் செய்ய முயன்றால், அவர் உலக வங்கியியல் கட்டமைப்பிற்கு அச்சுறுத்தலாகக் கருதப்படுகிறார்.
அவர்கள் உடனடியாக ‘மனிதகுல எதிரியாக’ ஊடகங்கள் மூலமாக சித்தரிக்கப்படுவார்கள்.
டாலருக்கு மிரட்டலாகவும் அல்லது தடையாக யாராவது இருந்தாலும் அவர்கள் ‘சர்வாதிகாரிகள்’ என்றும் ‘பயங்கரவாதிகள்’ என்றும் முத்திரை குத்தப்பட்டு அழிக்கப்படுவார்கள்.
ஈராக்கிய எண்ணெயை டாலருக்குப் பதிலாக ‘யூரோ’ (Euro) நாணயத்தில் விற்பனை செய்யத் துணிந்தார் சதாம். விளைவு? பேரழிவு ஆயுதங்கள் (WMD) வைத்திருப்பதாகப் பொய் சொல்லி ஈராக் தரைமட்டமாக்கப்பட்டது.
ஆப்பிரிக்கக் கண்டம் முழுமைக்கும் தங்கம் மற்றும் வெள்ளியை அடிப்படையாகக் கொண்ட Gold Dinar என்ற பொது நாணயத்தைக் கொண்டுவர முயன்றார் கடாபி. இது டாலரின் உலகளாவிய ஆதிக்கத்திற்குச் சவப்பெட்டி அடிக்கும் செயல் என்பதால், லிபியா சிதைக்கப்பட்டு அவர் கொடூரமாகக் கொல்லப்பட்டார்.
வெனிசுலாவின் அபரிமிதமான எண்ணெய் வளங்களை அமெரிக்க டாலர் கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்து,
‘பெட்ரோ’ (Petro) போன்ற மாற்று வழிகளைத் தேடுவதால், இன்று மதுரோ குறிவைக்கப்பட்டுள்ளார்.
அவர் விரைவில் தூக்கிலிடப்படலாம் அல்லது மின்சாரக்கதிர் ஏற்றப்படலாம் என்ற அச்சுறுத்தல் நீடிக்கிறது.
விடுதலைப் புலிகள் உருவாக்கிய தமிழீழ வைப்பகம் (Bank of Tamil Eelam) உலக வங்கியின் கட்டுப்பாடுகள் இன்றி இயங்கியது.
டாலரின் ஆதிக்கத்தைப் புறக்கணித்துத் தமக்கென ஒரு நாணய முறையையோ அல்லது பண்டமாற்று முறையையோ புலிகள் முன்னெடுத்திருந்தால், அது ஆசியாவில் ஒரு ‘பொருளாதார முன்னுதாரணமாக’ மாறிவிடும் என சர்வதேச சக்திகள் அஞ்சின.
குறிப்பாக, மத்திய வங்கிகளின் (Central Banks) வட்டி மற்றும் கடன் பிடிக்குள் சிக்காத ஒரு நிர்வாகம் உருவாவதை டாலர் ஏகாதிபத்தியம் ஒருபோதும் விரும்பாது.
டாலருக்கு அச்சுறுத்தலாக வளரும் எந்த ஒரு ‘நிழல் பொருளாதாரத்தையும்’ முளையிலேயே கிள்ள வேண்டிய தேவை அவர்களுக்கு இருந்தது.
சிங்கள ராணுவம் மட்டும் புலிகளை அழித்தது என்பது வெறும் புறத்தோற்றம் மட்டுமே.
உண்மை என்னவென்றால், Rothschilds வங்கியியல் முறையை மீறிச் செயல்பட்ட ஒரு அமைப்பை வேரோடு பிடுங்க வேண்டிய தேவை அவர்களுக்கு இருந்தது.
அதனாலேயே அமெரிக்காவின் உத்தரவின் பேரில், ஐக்கிய நாடுகள் சபையின் ஆசியுடன், இந்தியா, சீனா, பாகிஸ்தான், பிரிட்டன், இஸ்ரேல் ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து ஆயுதம், தொழில்நுட்பம் மற்றும் இராணுவ உதவிகளை வழங்கி விடுதலைப் புலிகளை அழித்தொழித்தனர்.
விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்கு உண்மையான காரணம் அவர்களின் ராணுவ பலவீனம் அல்ல, அவர்களின் பொருளாதாரத் தன்னுரிமை. ‘தமிழீழ வைப்பகம்’ என்ற அமைப்பு, சர்வதேச வங்கி மேலாதிக்கத்திற்கு (Rothschilds Control) எதிராக டாலர் கட்டமைப்பிற்கு வெளியே இயங்கியதே புலிகளின் அழிவுக்கு முக்கிய காரணியாக அமைந்தது.
யாரெல்லாம் டாலரின் ஆதிக்கத்திற்கு முட்டுக்கட்டை போடுகிறார்களோ, அவர்கள் அனைவரும் அழித்து ஒழிக்கப்படுவார்கள் என்பதே தற்போதைய கசப்பான உலக நியதி.
மதுரோவின் தற்போதைய நிலைமையும் இதைத்தான் நமக்கு உணர்த்துகிறது.
அமெரிக்கா எப்போதுமே தங்களின் ‘டாலர்’ நிலைத்தன்மைக்காக (Stability) எந்தவொரு இனத்தையும் காவு கொடுக்கத் தயங்காது.
எங்கள் இனத்தின் இனப்படுகொலைக்கு நீதி கிடைக்காததற்குக் காரணம்,
நீதிபதிகளே குற்றவாளிகளுடன் கைகோர்த்திருப்பதுதான்.
விடுதலைப் புலிகளின் ‘தமிழீழ வைப்பகம்’ முதல் மதுரோவின் ‘பெட்ரோ’ வர்த்தகம் வரை அனைத்தும் இந்த அதிகாரப் போட்டிக்கு இரையானவையே.
-முகிந்தன் துரைராஜசிங்கம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
Thank You Google
Thanks


