ஞாயிறு, 14 ஜூன், 2026

அமெரிக்கா – ஈரான் போர்நிறுத்த ஒப்பந்தம் இன்று !!

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே கடந்த பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி ஆரம்பமாகி, மூன்று மாதங்களுக்கும் மேலாக நீடித்து வரும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஆரம்பக்கட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 14, 2026) கையெழுத்தாக உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். 

தனது ‘டிரூத் சோஷியல்’ (Truth Social) தளத்தில் நேற்று சனிக்கிழமை இதனைப் பதிவிட்ட அவர், ஒப்பந்தம் கையெழுத்தானவுடன் சர்வதேச எரிபொருள் விநியோகத்தின் முக்கிய பாதையான ‘ஹோர்முஸ் நீரிணை’ (Strait of Hormuz) உடனடியாக மீண்டும் திறக்கப்படும் என்றும், ஈரான் இனி அணு ஆயுதங்களை நாடாது என்றும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் தன்னிடம் மாற்று இறுதி வழிமுறை உள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

இந்த அமைதி ஒப்பந்தத்திற்கான இடைஸ்திரப் பணிகளை மேற்கொண்டு வரும் பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப்பும், அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் மின்முறை (Electronic signing) மூலமாக இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகலாம் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார். 

இருப்பினும், இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் திகதி குறித்து ஈரான் வெளியுறவு அமைச்சகம் மிகவும் நிதானமான போக்கைக் கடைப்பிடிக்குமாறு வலியுறுத்தியுள்ளது. 

இது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் ஊடகப் பேச்சாளர் இஸ்மாயில் பாகேய் (Esmaeil Baghaei), அமெரிக்கத் தரப்பின் தயக்கம் காரணமாக உடன்படிக்கை இன்று ஞாயிற்றுக்கிழமை கையெழுத்தாகாது என்று தெளிவுபடுத்தியுள்ளார். 

ஆயினும், வரும் நாட்களில் இந்த உடன்பாடு எட்டப்படுவதற்கான சாத்தியக்கூறுகளை நிராகரிக்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதற்கிடையில், இந்த ஒப்பந்தத்தின் நிபந்தனைகள் குறித்து இரு நாடுகளும் முரண்பட்ட தகவல்களை வெளியிட்டு வருகின்றன.

 ஈரானின் முடக்கப்பட்ட 24 பில்லியன் டொலர் சொத்துக்களை விடுவித்தல், அமெரிக்க கடற்படை முற்றுகையை நீக்குதல் மற்றும் லெபனான் உள்ளிட்ட அனைத்து முனைகளிலும் போர்நிறுத்தம் ஆகியன இதில் அடங்குவதாக ஈரான் தரப்பு கூறினாலும், ஈரானுக்கு எந்த நிதியும் வழங்கப்பட மாட்டாது என்றும், அதன் செறிவூட்டப்பட்ட யுரேனியம் அழிக்கப்படும் என்றும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இவ்வாறான சூழலில், ஈரானின் மஷாத் (Mashhad) நகரில் வெளியுறவு அமைச்சக அலுவலகத்திற்கு வெளியே, இந்த ஒப்பந்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து தீவிரப்போக்குடைய ஈரானியர்கள் சனிக்கிழமை போராட்டங்களை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடர்நாக மாம்பழம் சாப்பிட்ட அக்காள்-தங்கை பரிதாப பலி!!

மாம்பழம் சாப்பிட்ட சில மணி நேரங்களிலேயே அக்காள், தங்கை ஆகிய இருவர்அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்த நெஞ்சை உலுக்கும் சம்பவம் பீதரில் நடந்துள்ளது. 


கர்நாடக மாநிலம் பீதர் பகுதியைச் சேர்ந்தவர் இந்துமதி. இவரது மகள்கள் பவானி வைஜிநாத் மேத்ரே (வயது 17), சந்தியாராணி மேத்ரே (14). இவர்கள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பெண் குழந்தைகள் மற்றும் தாய் இந்துமதி ஆகியோர் வீட்டில் மதிய உணவு சாப்பிட்ட பிறகு, மாம்பழம் சாப்பிட்டுள்ளனர். மாம்பழம் சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே அவர்கள் அனைவருக்கும் அடுத்தடுத்து கடுமையான வாந்தி, பேதி ஏற்பட்டுள்ளது.

இதனால் உடலம் முற்றிலும் பலவீனமடைந்து, அனைவரும் மயங்கி விழுந்தனர். அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக அவர்களை மீட்டு ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும், சிகிச்சை பலனின்றி பவானி மற்றும் அவரது தங்கை சந்தியாராணி ஆகிய இருவரும் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர். 

அதே மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மற்றொரு சகோதரி விஜயஸ்ரீ (19) என்பவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தாய் இந்துமதி மற்றும் இன்னொரு மகள் ஆகியோர் சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுகுறித்து ஐதராபாத் நாராயணகுடா போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 “பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே, மாம்பழத்தில் விஷம் கலந்திருந்ததா அல்லது ‘புட் பாய்சன்’ (உணவு நச்சு) காரணமா? என்ற உண்மை தெரியவரும்” என்று போலீசார் தெரிவித்துள்ளனர். ஒரே குடும்பத்தில் மாம்பழம் சாப்பிட்ட அக்காள், தங்கை உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

இன்று 

அதிகாலை 05.30 மணிக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தினரால் வெளியிடப்பட்டுள்ள நாளாந்த வானிலை அறிக்கையின்படி, நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலையும், பலத்த காற்று வீசக்கூடிய சாத்தியக்கூறுகளும் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 அதன்படி, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேலும், மன்னார் மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

 மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். 

நாட்டின் ஏனைய பகுதிகளில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவுக்குப் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் அந்தப் பகுதிகளில் தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால், மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய விபத்துக்களைக் குறைத்துக் கொள்வதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தற்போது குழந்தைகள் மத்தியில் பரவி வரும் சில நோய்கள்!!

தற்போது சிறுவர்களிடையே சில நோய்கள் பரவி வருவதால் பெற்றோர் அது குறித்து அவதானத்துடன் இருக்க வேண்டும் என்று கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். 

 டெங்கு, இன்ஃப்ளூயன்சா, கை, கால் மற்றும் வாய் நோய், மற்றும் மெனிஞ்சைடிஸ் ஆகிய நோய்கள் தற்போது சிறுவர்களிடையே பரவி வருவதைக் காணக்கூடியதாக உள்ளதாக விசேட வைத்திய நிபுணர் குறிப்பிட்டுள்ளார். 

 இதற்கமைய, இந்நோய் நிலைமைகள் குறித்து விழிப்புடன் இருந்து, இந்நோய்களுக்கு ஆளாவதைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பது அனைத்து தரப்பினரதும் பொறுப்பாகும் என்றும் விசேட வைத்திய நிபுணர் இங்கு சுட்டிக்காட்டினார். 

 அங்கு டெங்கு நோய் பற்றிக் குறிப்பிடுகையில், அது ஒரு உயிராபத்தான நோய் என்றும் காய்ச்சல், தலைவலி, கண்களுக்குப் பின்புறம் வலி, உடல் வலி, மூட்டு வலி மற்றும் வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகளைக் காண முடியும் என்றும், 2 நாட்களுக்கு மேல் காய்ச்சல் காணப்பட்டால் அது குறித்து அவதானமாக இருக்குமாறும் விசேட வைத்திய நிபுணர் குறிப்பிட்டார். 

 இன்ஃப்ளூயன்சா நோய் பற்றிக் குறிப்பிடுகையிலும் காய்ச்சலுடன் இருமல், தடிமன், உடல் வலி, மூட்டு வலி போன்ற அறிகுறிகளைக் காண முடியும் எனச் சுட்டிக்காட்டிய விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா, இருமல், தடிமனுடன் காய்ச்சல் காணப்பட்டால் பிள்ளைகளை மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்துமாறு கேட்டுக்கொண்டார். 

அத்துடன், இந்நோய் காணப்பட்டால் பிள்ளைகளுக்கு ஓய்வளிப்பது மிகவும் பொருத்தமானது எனச் சுட்டிக்காட்டிய வைத்தியர், பிள்ளைகளைப் பாடசாலைகள் அல்லது முன்பள்ளிகள், பகல்நேர பராமரிப்பு நிலையங்களுக்கு அனுப்பும்போது முகக்கவசம் அணிவிக்குமாறும், அதன் மூலம் மற்றைய தரப்பினருக்கு நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த முடியும் என்றும் சுட்டிக்காட்டினார். 

 மேலும், தற்போது சிறுவர்களிடையே கை, கால் மற்றும் வாய் நோய் பரவி வருவதைக் காணக்கூடியதாக உள்ளதாகச் சுட்டிக்காட்டிய விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா, அந்த நோயின் அறிகுறிகளாக கால்கள், முழங்கைகள், வாய் சார்ந்த பகுதிகளில் சிவப்புப் புள்ளிகள் மற்றும் சில வேளைகளில் வெள்ளை நிற நீர் கொப்புளங்கள் ஏற்படலாம் என்றும் குறிப்பிட்டார். 

இந்நோய்க்கான காரணி Coxsackievirus எனப்படும் வைரஸ் எனச் சுட்டிக்காட்டிய விசேட வைத்திய நிபுணர், இந்நோய் பாதிக்கப்பட்ட ஒரு பிள்ளையின் உடல் மற்றுமொரு பிள்ளையின் உடலில் படுவதன் மூலம் அந்தப் பிள்ளைக்குப் பரவுகிறது என்றும் சுட்டிக்காட்டினார். எனவே, இந்த அறிகுறிகளைக் கொண்ட பிள்ளைகளை 3-4 நாட்கள் வீட்டில் வைத்திருக்குமாறும், தேவையான மருத்துவ சிகிச்சைகளை வழங்குமாறும் விசேட வைத்திய நிபுணர் பெற்றோரிடம் கேட்டுக்கொண்டார். 

 இதற்கிடையில், தற்போது சிறுவர்களிடையே மெனிஞ்சைடிஸ் நோய் பரவி வருவதாகவும் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இதற்குக் காரணம் ஒரு வைரஸின் தாக்கம் என்றும், இதன் அறிகுறிகளாக காய்ச்சலுடன் தலைவலி, வாந்தி, மின் ஒளி அல்லது ஏதேனும் ஒரு வெளிச்சத்தைப் பார்ப்பதில் சிரமம், அதேபோல் சில சமயங்களில் சத்தங்களைக் கேட்பதற்குக் கூட விருப்பமின்மை, உடல் வலி போன்ற அறிகுறிகள் தென்படும் என்றும் வைத்தியர் இங்கு சுட்டிக்காட்டினார். 

இந்நோய் செரிமானப் பாதை மற்றும் சுவாசப் பாதை மூலம் பரவுகிறது என்றும், இந்நோய் பரவுவதைக் குறைப்பதற்காக சுத்தமான உணவு, கொதித்தாறிய நீரைப் பருகுதல், இருமல் மற்றும் தடிமன் காணப்பட்டால் முகக்கவசம் அணிவது பொருத்தமானது என்றும் விசேட வைத்திய நிபுணர் சுட்டிக்காட்டினார்.

சுரேஷ் சலே உடல் நிலை ’ஜனாதிபதி அநுர அவர்களுக்கு கடிதம்!!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே அவர்களின் உடல் நிலை குறித்து உடனடியாக கவனம் செலுத்துமாறு கோரி ‘சர்வஜன அதிகாரம்’ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. 


 சுரேஷ் சலே அவர்களின் உடல் நிலை மோசமடைந்து வருவது குறித்து 'சர்வஜன அதிகாரம்' கட்சி தனது பலத்த கவலையை வெளிப்படுத்தியுள்ளதாக அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. நாட்டின் இறையாண்மை

 மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்காக ஒரு துணிச்சலான இராணுவ வீரராக அவர் ஆற்றிய தனித்துவமான சேவையை பாராட்டுவதுடன், தேசத்திற்காக அவர் செய்த அர்ப்பணிப்பையும் பங்களிப்பையும் எவராலும் மறந்துவிட முடியாது என்றும் அக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. 

தற்போதைய சூழ்நிலையில் இத்தகையதொரு வீரருக்கு கிடைக்க வேண்டிய மரியாதையும் பாதுகாப்பும் வழங்கப்பட வேண்டும் என்பது தங்களது கட்சியின் நம்பிக்கை என்றும் அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 எனவே, மனிதாபிமான அடிப்படையிலும், சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாக்கும் நோக்கிலும், இந்த விவகாரம் குறித்து உடனடியாக கவனம் செலுத்தி, தாமதமின்றி தகுந்த நடவடிக்கைகளை எடுக்குமாறு சர்வஜன அதிகாரம், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. 

 "எங்களுக்கு கிடைத்துள்ள தகவல்களின்படி, அவரது சுகாதார நிலை நாளுக்கு நாள் மிக வேகமாக மோசமடைந்து வருவதாகத் தெரிகிறது. இந்த நிலைமையைக் கருத்தில் கொண்டு, அவரும் அவரது குடும்ப உறுப்பினர்களும் விடுத்துள்ள கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுவது, அவரைத் தடுப்புக் காவலில் வைப்பதற்கான உத்தரவை பிறப்பித்த தரப்பு என்ற வகையில் உங்களது நேரடிப் பொறுப்பாகும் என நாங்கள் கருதுகிறோம்.

 காவலில் வைக்கப்பட்டுள்ள ஒரு நபரின் அடிப்படை மனித உரிமைகளையும் சுகாதாரப் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவது ஒரு அரசாங்கத்தின் முதன்மையான பொறுப்பாகும். 

 சுரேஷ் சலே அவர்களின் சுகாதார நிலை தொடர்பாக ஏதேனும் துரதிர்ஷ்டவசமான சூழ்நிலை ஏற்பட்டால், அது உள்நாட்டில் மட்டுமன்றி, சர்வதேச ரீதியிலும் இலங்கையின் பிம்பத்திற்கும், மனித உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பாக நாட்டின் மீதுள்ள நம்பகத்தன்மைக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது எங்களது நிலைப்பாடாகும். 

அத்துடன், தடுப்புக் காவல் உத்தரவை பிறப்பித்த அதிகாரம் என்ற வகையில் அதன் நேரடிப் பொறுப்பு உங்கள் மீதே சுமத்தப்படும்."

சனி, 13 ஜூன், 2026

செம்மணி அகழ்வாராய்ச்சியின் மூன்றாம் கட்டம் 23-வது நாளில் .

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் தொடரும் மனிதப் புதைகுழி அகழ்வாராய்ச்சியின் போது, இலங்கையின் கடந்த கால ஆட்சியாளர்களின் மனித உரிமை மீறல்களையும், போர்க்காலக் கொடூரங்களையும் வெளிப்படுத்தும் வகையிலான அதிர்ச்சி தரும் ஆதாரங்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருகின்றன. 

நீதிமன்ற உத்தரவிற்கு அமைவாக, தொல்பொருள் நிபுணர்கள் மற்றும் தடயவியல் மருத்துவர்களின் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த அகழ்வுப் பணியின் 32 ஆவது நாளில் (மூன்றாம் கட்ட அகழ்வின் 22 ஆம் நாள்) பல முக்கிய சான்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. 

நேற்றைய தின (11.06.26) அகழ்வாராய்ச்சியின் போது, புதிதாக மேலும் 02 மனித என்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. அதேவேளை, ஏற்கனவே அடையாளப்படுத்தப்பட்ட என்புக்கூடுகளில் ஒரு சிறுவனுடைய என்புக்கூடு உட்பட 09 மனித என்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. 

இதன் அடிப்படையில், செம்மணி வளாகத்தில் இதுவரை மொத்தம் 341 மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் 327 என்புக்கூடுகள் முழுமையாக மீட்கப்பட்டு நீதிமன்றப் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன. 

மேலும், இப்பகுதியில் நேற்று ஒரு புதிய மனித என்புக்கூட்டுக் குவியல் கண்டறியப்பட்டுள்ளது. இதுவரையிலான அகழ்வுப் பணிகளில் கண்டறியப்பட்ட கூட்டுக்குவியல்களில் இது 23 ஆவது குவியல் என்பது குறிப்பிடத்தக்கது. 

சர்வதேச விதமுறைகளுக்கு அமைவாகவும், நீதித்துறை கண்காணிப்பிலும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த அகழ்வுப் பணிகள், கடந்த காலங்களில் இடம்பெற்ற காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கான முக்கிய நீதிக்கோரிக்கையாக மாறியுள்ளது.

கோர விபத்தில் சிக்கிய இந்திய விமானப்படை விமானம்!!

இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஏஎன்-32 போக்குவரத்து விமானம் ஒன்று இன்று அசாமின் ஜோர்ஹட் விமானப்படைத் தளத்தில் விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் இருந்த ஐந்து வீரர்கள் உயிரிழந்ததாக இந்திய விமானப்படை உறுதிப்படுத்தியுள்ளது. ஜோர்ஹாட் விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது விமானம் விபத்துக்குள்ளானதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

Thank You Google

Thank You Google
Thanks