புதன், 21 அக்டோபர், 2026

மொரட்டுவையில் துப்பாக்கிச் சூடு

மொரட்டுவை, சொய்சாபுர பகுதியில் காரில் வந்த அடையாளம் தெரியாத நபர்களால் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த உணவக உரிமையாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகக் காவற்துறை ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இன்றைய தினம் சொய்சாபுர பகுதியிலுள்ள உணவகம் ஒன்றிற்குள் புகுந்த ஆயுததாரிகள், அங்கு நின்றிருந்த உரிமையாளர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றிருந்தனர். 

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த உணவக உரிமையாளர், உடனடியாக மீட்கப்பட்டுத் தீவிர சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

இக் கொலைக்கான துல்லியமான பின்னணி மற்றும் துப்பாக்கிச் சூட்டை நடத்திய சந்தேகநபர்கள் யார் என்பது இதுவரை உத்தியோகபூர்வமாகக் கண்டறியப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரிகளைக் கைது செய்வதற்குப் பல விசேட காவற்துறைக் குழுக்கள் களமிறக்கப்பட்டு விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 

 மொரட்டுவை உணவக உரிமையாளர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு காரில் தப்பிச் செல்ல முற்பட்ட சந்தேகநபர்களின் வாகனம், பிலியந்தலை – சுவரபொல பகுதியில் இயந்திரக் கோளாறு காரணமாகப் பழுதடைந்தது.

இதனையடுத்து, அப்பகுதியில் வானத்தை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு அச்சத்தை ஏற்படுத்திய ஆயுததாரிகள், அங்கிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றைக் கைப்பற்றித் தப்பிச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks