அதன் பெயர் “குமுதினி படுகொலை”.
1985ல் வடமாகாணத்தையே உலுக்கிய கோரப்படுகொலை அது.
குமுதினி படகுப் படுகொலை( Kumutini boat massacre) என்பது இலங்கையின் உள்நாட்டுப் போர்க் காலத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக நடுக்கடலில் நிகழ்த்தப்பட்ட ஒரு மிக கொடூரமான கூட்டுப் படுகொலையாக ஆண்டாண்டு நினைவு கூருகிறோம்.
இந்த படுகொலையை யார் நிகழ்ந்தியது என்பதை தெரிந்து கொண்ட நாம் இந்த படுகொலை ஏன் நிகழ்த்தப்பட்டது என்பது பற்றி பலர் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுவதில்லை,
வாருங்கள் அந்த வரலாற்றை பார்க்கலாம்.
1984 இன் இறுதியில் இந்தியாவின் பிரதமராகப் பொறுப்பேற்ற ராஜீவ் காந்தி, தனது தாயார் இந்திரா காந்தியின் கொள்கைகளில் இருந்து சற்றே மாறுபட்டு, இலங்கைப் பிரச்சினைக்கு இராணுவ ரீதியான தீர்வை விட அரசியல் ரீதியான தீர்வையே விரும்பினார்.
இதனால், இலங்கையில் மோதல்களை நிறுத்தவும், பேச்சுவார்த்தைகளைத் தொடங்கவும் அவர் தீவிரமாக முயன்றார்.
ஆனால் ஜேஆர் பெரிதாக பணியவில்லை, ஜேஆரை தமது வழிக்கு கொண்டுவர “றோ”களத்தில் இறங்கியது.
1980களின் தொடக்கத்தில் (1983-1984 காலப்பகுதியில்) இந்தியாவின் உளவு அமைப்பான 'றோ' (R&AW) தமிழ் ஆயுதக் குழுக்களுக்கு இந்தியாவில் ஆயுதப் பயிற்சியும் உதவிகளையும் வழங்கியது என்பது வரலாற்று உண்மை.
“றோ” பயிற்சி வழங்கியதன் உண்மையான நோக்கமே போராளிகளை வைத்து இலங்கை அரசிற்கு தலைவலி கொடுப்பதற்காக தான்.
அன்றைய இயக்கங்களான புலி, ரெலோ , புளட், ஈரோஸ் ஈபிஆர்ரெல்எப் போன்ற இயக்கங்களுக்கு ஆயுதமும் பயிற்சியும் இந்திய “றோ”வால் கொடுக்கப்பட்டது.
அதன் அறுவடையாக அன்றைய காலகட்டத்தில் இலங்கை இராணுவத்தின் மீது அனைத்து போராளிக் குழுக்களாலும் பரவலாக தாக்குதல் நடாத்தப்பட்டது.
1985 மே 9 ஆம் திகதி, டெலோ (TELO) அமைப்பின் தளபதி “மீசோ”என்பவரின் தலைமையில் வவுனியா - கிளிநொச்சி எல்லையிலிருந்த கொக்காவில் இராணுவ முகாம் மீது ஒரு பாரிய தாக்குதல் நடத்தப்பட்டது.
அரசாங்கத் திணைக்களத்திற்குச் சொந்தமான இரு புல்டோசர்களை (Bulldozers) கடத்திய டெலோ போராளிகள், அவற்றை குண்டு துளைக்காத வாகனங்களாகவும், கண்ணிவெடி அகற்றும் வாகனங்களாகவும் மாற்றி முகாமிற்குள் புகுந்தனர்.
இந்தத் துணிச்சலான நேருக்கு நேர் மோதலில் 48 இலங்கை இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலில் தளபதி மீசோ உட்பட 9 டெலோ போராளிகளும் மரணமடைந்தனர்.
மே மாதப் பகுதியில் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவ விநியோகப் பாதைகளைத் துண்டிக்கும் நோக்கில் கண்ணிவெடித் தாக்குதல்களையும், அரச உள்கட்டமைப்புகளைச் சேதப்படுத்தும் நடவடிக்கைகளையும் EROS மேற்கொண்டது.
உமாமகேஸ்வரன் தலைமையிலான plote அமைப்பு, அந்த காலகட்டத்தில் மிக அதிகமான எண்ணிக்கையிலான போராளிகளைக் கொண்ட இயக்கமாக இருந்தது.
1985 மே மாதத்தில், இலங்கை இராணுவத்தினர் தமிழ் கிராமங்களுக்குள் நுழைவதைத் தடுப்பதற்காக மன்னார், செட்டிக்குளம் மற்றும் வவுனியா பகுதிகளில் plote அமைப்பினர் இராணுவ ரோந்து அணிகள் மீது தொடர்ச்சியான மறைந்திருந்து தாக்கும் (Ambush) உத்திகளைக் கையாண்டனர்.
மன்னார் மற்றும் காரைநகர் கடற்படைத் தள எல்லைகளில் பாதுகாப்புப் படையினரின் நகர்வுகளை முடக்குவதற்கான தாக்குதல்களில் ஈபிஆர்எல்எஃப் ஈடுபட்டது. மேலும், மட்டக்களப்பு மற்றும் கிழக்கு மாகாணப் பகுதிகளில் இராணுவத்தினருக்குத் தகவல் வழங்கும் ஒற்றர்களைக் குறிவைத்து அவர்கள் தாக்குதல் நடத்தினர்.
அவ்வாறு அனைத்து இயக்கங்களும் வெவ்வேறாக நின்றாலும் ஒரு பொது எதிரியை எதிர்த்து சண்டையிட்டனர்.
புலிகளும் சிறு சிறு தாக்குதல் நடாத்தினார்கள், அதில் முக்கியமான தாக்குதல் வல்வெட்டித்துறையில் மே 12 அன்று இராணுவ ரோந்து அணி மீது நடத்தப்பட்ட கண்ணிவெடித் தாக்குதலில் ஒரு இராணுவ அதிகாரி உட்பட 10 சிப்பாய்கள் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலுக்கு பழிவாங்கவே வல்வை நூலகப் படுகொலை ( செம்மீன் சனசமூக நிலையம்) மற்றும் ஊறணிபடுகொலை போன்ற படுகொலைகள் 1985 மே 10-12 ஆம் திகதிகளில் இலங்கை இராணுவத்தினரால் நடத்தப்பட்டது.
அப்பகுதியில் இருந்த சுமார் 70 தமிழ் பொதுமக்கள் மற்றும் இளைஞர்களை இராணுவத்தினர் வலுக்கட்டாயமாக ஒன்றுதிரட்டி, வல்வெட்டித்துறை நகரின் பொது நூலகக் கட்டடத்திற்குள் செல்லுமாறு பணித்தனர்.
பின்னர் அந்த நூலகக் கட்டடத்தை வெடிவைத்துத் தகர்த்ததன் மூலம் அனைவரும் படுகொலை செய்யப்பட்டனர்.
இதற்கு முன்னர் இன்னொரு சம்பவத்தை இங்கு குறிப்பிட வேண்டும்,
ரோவிற்கு இராணுவத்தை தாக்குவதை விட சிங்களபகுதிகளில் மக்களை தாக்கி கொல்வதையே விரும்பியது.
ஜேஆருக்கு அழுத்தம் கொடுக்க சிங்கள மக்கள் மீது பாரிய கொலைவெறித்தாக்குதல் ஒன்றை
நிகழ்த்தினால் மட்டுமே ஜேஆரை பணிய வைக்க முடியும் என திட்டமிட்டு இத்தாக்குதலை செய்ய முதலில் ploteஐ அணுகியது ரோ.
இதற்கு திட்டவட்டமாக மறுத்துவிட்டார் உமாமகேஸ்வரன், சிங்கள மக்களுக்கு எதிரான போராட்டம் இல்லை எமது போராட்டம் என உறுதியாக கூறிவிட்டார்,
அதன்பின்னர் புலிகளை அணுகி அவரை மாபெரும் சிங்கள படுகொலை நிகழ்த்த வேண்டும் என கேட்டனர்,
அதற்கு புலிகள் கூலியாக ஆயுதமும் பணமும் கேட்டனர் . ரோவும் பணமும் ஆயுதமும் வழங்கியது.
படுகொலைக்கான சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருந்தனர் புலிகள்.
1985 மே 12 அன்று வல்வை நூலகப்படுகொலை இடம் பெற்றது.
தாக்குதலில், நூலகக் கட்டடத்திற்குள் போராளிகள் என சந்தேகத்தின் பேரில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 70 தமிழ் பொதுமக்கள்(பெரும்பான்மையானோர் இளம் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள்) உடல் சிதறிப் பலியாயினர்.
இந்த வல்வை நூலக படுகொலைக்கு பழிவாங்குவது என்ற போர்வையிலேயே லெப்டினட் கேணல் விக்டர் தலமையில் ஒரு கொலைவெறிக் கும்பல் அநுராதபுரத்திற்கு அனுப்பபட்டனர்.
அநுராதபுரப் படுகொலை(Anuradhapura massacre) என்பது 1985 ஆம் ஆண்டு மே 14 ஆம் தேதி இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க அநுராதபுர நகரை கலங்கடித்த சிங்களப் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட ஒரு கொடூரமான கொலைவெறித் துப்பாக்கித் தாக்குதல்.
இலங்கையின் உள்நாட்டுப் போரின் வரலாற்றில், தமிழ் ஆயுதக் குழுக்களால் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிக்கு வெளியே நடத்தப்பட்ட முதல் பெரிய மற்றும் மிக மோசமான தாக்குதலாக இது கருதப்படுகிறது.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஆயுததாரிகள், விக்டர் தலமையில் வவுனியாவில் ஒரு அரசுப் பேருந்தைக் கடத்தி, இராணுவ சீருடையில் அநுராதபுர நகருக்குள் நுழைந்தனர்.
அநுராதபுரம் பிரதான பேருந்து நிலையத்திற்குள் நுழைந்த அவர்கள், பேருந்துக்காகக் காத்திருந்த பொதுமக்கள் மீது தானியங்கி ஆயுதங்களால் சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
அதன் பின்னர், பௌத்தர்களின் புனிதத் தலமான ஜெய ஸ்ரீ மகா போதி வளாகத்திற்குள் சென்று, அங்கு வழிபாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பௌத்த துறவிகள், கன்னியாஸ்திரிகள் மற்றும் பொதுமக்கள் மீதும் கடுமையான துப்பாக்கிச் சூட்டை நிகழ்த்தி கொன்று குவித்தனர்.
அநுராதபுர நகரை விட்டு வெளியேறும் போது, வில்பத்து தேசிய பூங்காவிற்குள் புகுந்து அங்கிருந்த 23 வனவிலங்குத் துறை ஊழியர்களையும் அவர்கள் படுகொலை செய்தனர்.
இந்தத் கொடூரத் தாக்குதலில் மொத்தம் 146 சிங்களப் பொதுமக்கள் மற்றும் பௌத்த யாத்திரிகர்கள் கொல்லப்பட்டனர்.நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
பிரபாகரனின் உத்தரவின் பேரில், மன்னார் மாவட்டத்தின் அப்போதைய தளபதிகளான விக்டர் மற்றும் ராதா ஆகியோரின் வழிநடத்தலில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.
எவ்வாறாயினும், இத்தாக்குதலில் முக்கியத் திட்டமிடல் அல்லது களப் பங்களிப்புகளில் விடுதலைப் புலிகளின் மற்றொரு மூத்த தளபதியான லெப். கேணல் புலேந்திரன் (அக்டோபர் 1987-ல் பலாலியில் சயனைட் அருந்தி மரணமடைந்தவர்) உள்ளிட்டோரின் பெயர்களும் இடம்பெறுகிறது.
இந்த ஒரு படுகொலை சிங்களவர்களை மேலும் ஆத்திரம் அடைய வைத்தது.
அநுராதபுர தாக்குதல் நடந்து அடுத்த நாளே 1985 மே 15 அந்த கோரமான பழிவாங்கல் நடவடிக்கை ஒன்று வடக்கில் நிகழ்ந்தது.
அதுதான் “ குமுதினி படுகொலை”.
1985 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி யாழ்ப்பாணம் நெடுந்தீவுக்கும் புங்குடுதீவுக்கும் (குறிகாட்டுவான்) இடையே பயணித்த பொதுமக்கள் போக்குவரத்துப் படகான 'குமுதினி'யில் இருந்த தமிழ் பயணிகள் மீது நிகழ்த்தப்பட்ட இத்தாக்குதலே “குமுதினிப் படுகொலை”.
1985 மே 15 அன்று காலை 7:15 மணியளவில் நெடுந்தீவு மாவலித் துறைமுகத்திலிருந்து சுமார் 64 முதல் 72 வரையிலான பயணிகளுடன் குமுதினி படகு யாழ்ப்பாணம் நோக்கிப் புறப்பட்டது.
தீவுப் பகுதி மக்களின் அன்றாட வாழ்வாதாரத்திற்கும் அத்தியாவசியப் போக்குவரத்துக்கும் இந்தப் படகே உயிர்நாடியாக விளங்கியது.
படகு புறப்பட்டுச் சுமார் அரை மணி நேரத்தில், நயினாதீவு அருகே நடுக்கடலில் வந்துகொண்டிருந்தபோது, சிவிலியன் உடையில் (Plain clothes) வந்த இலங்கைக் கடற்படையினர் 6 பேரைக் கொண்ட குழுவினர் கண்ணாடி இழை ( fibre glass)விசைப்படகில் வந்து குமுதினியை வழிமறித்தனர்.
துப்பாக்கிகளைக் காட்டிப் பயணிகளை மிரட்டிய அவர்கள், படகின் எஞ்சின் பகுதிக்கு அருகில் இருந்த பலகைகளை அகற்றி 4 அடி ஆழமான ஒரு குழியை உருவாக்கினர். அதன் பின்னர் பயணிகள் ஒவ்வொருவராகப் படகின் மேல் தளத்திற்கு (Deck) அழைக்கப்பட்டனர்.
உள்ளே அழைக்கப்படுபவர்கள் வெட்டப்படும் போது எழும் மரண ஓலம் மற்றும் அலறல் சத்தம் மற்றவர்களுக்குக் கேட்கக் கூடாது என்பதற்காக, "உங்கள் பெயரையும் ஊரையும் உரக்கச் சத்தமாகச் சொல்லுங்கள்" என அரைகுறைத் தமிழில் கடற்படையினர் கட்டளையிட்டனர்.
துப்பாக்கிகள் இருந்தபோதிலும், சத்தம் வெளியே கேட்கக் கூடாது என்பதற்காகக் கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தாமல் முக்கோண கூர்க்கா கத்திகள்( Triangular Blade Knife / Tri-dagger), கோடலிகள் மற்றும் இரும்புக்கம்பிகளைப் பயன்படுத்திப் பயணிகளை கொடூரமாக வெட்டியும் குத்தியும் படுகொலை செய்து அந்த எஞ்சின் குழிக்குள் தள்ளினர்.
சிலர் நடுக்கடலில் குதித்துத் தப்பிக்க முயன்ற போது அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகமும் செய்யப்பட்டது.
இந்தத் கொடூரத் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் மற்றும் மதப் பெரியவர்கள் எனப் பாகுபாடின்றி 36 தமிழ் பொதுமக்கள் சம்பவ இடத்திலேயே படுகொலை செய்யப்பட்டனர்.
இந்த குமுதினிப் படுகொலை சர்வதேச அளவில் கண்டனங்களைப் பெற்ற இந்த நெஞ்சை உறைய வைக்கும் படுகொலை என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமே இல்லை, ஆனால் இந்த படுகொலைக்கான காரணம் புலிகளின் அநுராதபுர வெறியாட்டத்திற்கான பழிவாங்கல் என்ற உண்மையை எம்மவர்கள் உணர மறுக்கின்றனர்.
ஒன்றும் செய்யாத அப்பாவிகளான எம்மை குறிவைத்து சிங்களவர்கள் தாக்குகிறார்கள் என உலகின் முன் கண்ணீர் வடிக்கிறோம். ஆனால் முதலில் குளவிக்கூட்டில் கல்லெறிந்தது நாமே என்ற உண்மைகளை வெளியுலகிற்கு மூடி மறைக்கிறோம்.
83 ஜூலை கலவரத்திற்கும் முதலில் கல்லெறிந்தது நாம் என்பதை ஒத்துக் கொள்ள மறுக்கிறோம்.
போர் என்றால் இராணுவத்திற்கும் போராளிகளுக்கும் இடையே நடப்பது, இந்தியாவின் நலனுக்காக ஆயுதம் பணம் வாங்கி கொலை செய்யும் கூலிப்படையாக மாறி புலிகள் செய்த முட்டாள்த்தனமான செயல் அப்பாவி சிங்கள மக்களை கொன்றது.
அந்த கோரவெறியாட்டத்தின் பின்னர் பழிவாங்கும் இராணுவத்தின் வெறியாட்டங்களும் தொடர்ந்தன.
இனவிடுதலைக்காக புறப்பட்ட புலிகள் இயக்கம் மட்டும் எதற்காக சிங்கள மக்களை குறி வைக்க வேண்டும்?
ஒட்டுக்குழு, துரோகிகள், என புலிகளால் முத்திரை குத்தப்பட்ட ரெலோ புளட், ஈரோஸ், ஈபிஆர்எல்எப் போன்ற மாற்றியத்தினரிடம் இருந்த மனிதாபிமானம் சிங்கள மக்களை கொல்லும் விடயத்தில் புனிதர்கள் என்று தம்மைத்தாமே வர்ணித்த புலிகளிடம் ஒரு துளி கூட இருந்ததில்லை.
இந்த மனிதாபிமானமற்ற தன்மையே அவர்களை முற்றாக அழிக்கப்பட காரணமாக இருந்தது.
புலிகளின் அழிவு என்பது முள்ளிவாய்க்காலில் அல்ல…
புலிகளின் அழிவு என்பது எப்பொழுது அப்பாவி பொதுமக்களையும் சகோதர இனத்தவர்களையும் கொல்லத் தொடங்கினரோ அப்போதே அவர்களின் அழிவும் ஆரம்பித்து விட்டது.
வரலாறு என்பது ஒருபோதும் ஒரு பக்கமானது அல்ல, அது வெற்றியாளர்களின் புகழ்பாடுவதோ அல்லது ஒரு தரப்பின் வலிகளை மட்டும் நியாயப்படுத்துவதோ அல்ல.
1985 மே மாதத்தில் நிகழ்ந்த இந்தச் நெடிய தொடர் படுகொலைகள் வல்வெட்டித்துறை நூலகத் தாக்குதல், அநுராதபுரக் கொலைவெறியாட்டம் மற்றும் அதன் நேரடித் தாக்கமாக அரங்கேறிய ‘குமுதினி’ நடுக்கடல் படுகொலை என்பவை ஈழத் தமிழர் வரலாற்றில் ஆற்றொணாத் துயரத்தையும், அதேவேளை அரசியல்ரீதியான கசப்பான உண்மைகளையும் எஞ்சவிட்டுச் சென்றுள்ளன.
போர்க்களத்தில் எதிரியை எதிர்கொள்வது போராட்டம், ஆனால், பாதுகாப்பற்ற அப்பாவிப் பொதுமக்களைக் குறிவைத்துத் தாக்கப்படும் எச்செயலும் எத்தகைய காரணங்களைக் கூறினாலும் அது வரலாற்றின் முன்னால் குற்றமே.
ஒரு தரப்பின் தவறான வியூகங்களும், இலக்குத் தப்பிய வன்முறைகளும் மறுபுறம் இன்னும் கோரமான பழிவாங்கல்களுக்குத் தீனிபோட்டு, இறுதியில் சொந்த இனத்தின் எளிய மக்களின் உயிர்களையே நடுக்கடலில் பலிகொடுத்தது.
"வரலாற்றின் பிழைகளை மறைக்காமல், உண்மைகளைத் தைரியமாக எதிர்கொள்ளும் போதே அடுத்த தலைமுறைக்கான சரியான பாதையை நாம் வடிவமைக்க முடியும்.
"
முள்ளிவாய்க்காலில் வந்து முடிவடைந்த பேரிழப்புகளின் வித்துக்கள் எங்கே தூவப்பட்டன என்பதைப் புரிந்துகொள்ள இதுபோன்ற வரலாற்றுப் பக்கங்களை நடுநிலையோடு வாசிப்பது அவசியமானது.
படுகொலைகளின் வலிகளைச் சுமக்கும் அதேவேளை, வன்முறை எப்போதுமே நிரந்தர விடுதலையைத் தராது என்ற வரலாற்றுப் பாடத்தை உணர்ந்து, மனிதாபிமானமும் அறமும் சார்ந்த பாதையில் மட்டுமே எமது வரலாற்றின் எதிர்காலம் பயணிக்க வேண்டும்.
இது ஒரு முகப்புத்தகத்தின்
பிரதியாக்கம்.
முகிந்தன் துரைராஜசிங்கம்


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக