வியாழன், 29 அக்டோபர், 2026

இஷார தாக்கப்படவில்லை என்பதை உடனே மறுக்க முடியாது

ஹோமாகம பொலிஸ் நிலையத்தினால் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தபோது உயிரிழந்த இஷார என்ற நபர் கைது செய்யப்பட்ட விதம் மற்றும் அதற்கு முன்னர் நடைபெற்ற சம்பவங்கள் குறித்துப் பொலிஸார் பல புதிய தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

ஹோமாகம பொலிஸ் காவலில் இருந்தபோது இஷார ஹர்ஷ என்ற நபர் உயிரிழந்த சம்பவம் தாக்குதல் காரணமாகவே நிகழ்ந்திருக்கலாம் என நம்பப்பட்ட போதிலும், அது குறித்து மருத்துவ அறிக்கையின் தகவல்களுக்கு அமைவாகவே இறுதியாக உறுதியாகக் கூற முடியும் என மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் சஜீவ மெதவத்த தெரிவித்துள்ளார்.

பொலிஸ் ஊடகப் பிரிவில் இன்று (29) நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

 "ஹோமாகம சம்பவத்தில், மருத்துவ அறிக்கையில் அவருடைய மூன்று விலா எலும்புகள் உடைந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று அவரது மூளையில் இரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எங்களுக்குக் கிடைத்த தகவல்களின்படி தலையிலும் காயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து மேல் மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் சஜீவ மெதவத்த ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், கைதுசெய்யப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் குறித்த நபர் கிராமத்தினரால் தாக்கப்பட்டுள்ளார். 

அவர் கைது செய்யப்பட்ட பின்னர், தான் சைக்கிளிலிருந்து கீழே விழுந்ததாகவே ஆரம்பத்தில் தெரிவித்திருந்தார். எனினும், விசாரணைகளில் அவர் சைக்கிளிலிருந்து விழவில்லை என்பதும், உண்மையில் அது கிராமத்தினரால் நடத்தப்பட்ட தாக்குதல் என்பதும் தெரியவந்துள்ளது.

தாக்குதலின் பின்னர் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்த நபர் சுய விருப்பத்தின் பேரில் அங்கிருந்து வௌியேறியுள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. 

கைதுக்கு முன்னர், தாக்குதலுக்குள்ளாகி தான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறித்து அவர் பொலிஸாருக்கு ஆரம்பத்தில் முறையாகத் தெரிவிக்கவில்லை. 

இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் தனி விசாரணை நடத்தப்பட்டு, தாக்குதல் நடத்திய தரப்பினரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். பொலிஸார் அவரைக் கைது செய்து குற்றப்பிரிவிடம் ஒப்படைக்கும் வரை, அவரது உடல்நிலையில் அல்லது அவர் காவலில் எடுக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் மருத்துவ ரீதியான தீவிரமான சிக்கல்கள் எதுவும் உத்தியோகபூர்வமாகப் பதிவாகவில்லை.

விசாரணைகளின் தகவலின்படி அவர் போதைப்பொருளுக்கு அடிமையானவராக இருக்கலாம் எனக் கருதப்பட்டாலும், பொலிஸ் நிலையச் சிறையில் இருந்தபோது அவர் சில வித்தியாசமான தன்மைகளை காட்டியதையடுத்து உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

 அதேநேரம். சந்தேகநபரை முறைப்படி கைது செய்யும் போது பின்பற்றப்பட வேண்டிய சட்ட மற்றும் பொலிஸ் நடைமுறைகள் இதன்போது முறையாகப் பின்பற்றப்படவில்லை என்பதை சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் சஜீவ மெதவத்த வெளிப்படையாக ஏற்றுக்கொண்டுள்ளார். 

பொதுவாகச் சந்தேகநபரைக் கைது செய்யும் போது அவரது உடல்நிலை குறித்துப் பதிவிடுவதும், உறவினர்களுக்கு அறிவிப்பதும் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். 

இந்தச் சம்பவத்தில் அந்த முறையான வழிமுறைகள் சரியாகக் கடைப்பிடிக்கப்படவில்லை என்பதால் தான் உடனடியாகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். இந்தச் சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks