வெள்ளி, 25 செப்டம்பர், 2026

ஈழத்து அரசியல் வரலாற்றில் 'துரோகி' என்ற சொல்

ஈழத்து அரசியல் வரலாற்றில் 'துரோகி' என்ற சொல் மிகவும் ஆழமாக வேரூன்றிய ஒன்று. மாற்றுக் கருத்துடையவர்களையும், அரசியல் போட்டியாளர்களையும் ஒழித்துக் கட்டுவதற்காக தமிழ்த் தேசிய அரசியலில் பயன்படுத்தப்பட்ட இந்த ஆயுதம், காலப்போக்கில் ஒட்டுமொத்த சமூகத்தையுமே அச்சுறுத்தும் ஒரு கருவியாக மாறிவிட்டது. 


அரசியலில் ஒருவரை உடல் ரீதியாக ஒழிப்பதற்கு (Assassination) முன்னர், அவரது நற்பெயரைக் குலைத்து சமூகத்திலிருந்து தனிமைப்படுத்துவது அல்லது கொன்றுவிட்டு அவரின் பெயரை கெடுப்பது (Character Assassination) காலங்காலமாகப் பின்பற்றப்படும் ஒரு தந்திரம் இந்தத் தந்திரத்தை ஈழத்து அரசியலில் ஆரம்ப காலத்தில் திறம்படக் கையாண்டவர்கள் தமிழரசு கட்சியினர் ஆவர். 

அல்பிரட் துரையப்பா இதற்கு சிறந்த உதாரணம். யாழ்ப்பாணத்தின் மேயராக இருந்து பல மக்கள் நலப் பணிகளைச் செய்த அல்பிரட் துரையப்பா, சிறிமாவே பண்டாரநாயக்காவின் ஆதரவு பெற்றவராக விளங்கியதை தமிழரசு கட்சியினர் விரும்பவில்லை. அவரைப் பற்றிய தவறான பரப்புரைகளைச் செய்து, 'துரோகி' என்ற விச முத்திரையை இளைய தலைமுறையினர் மத்தியில் விதைத்தனர்.

இதன் விளைவாகவே தமிழரசு கட்சியின் சதியை சிந்திக்கத் தெரியாத பிரபாகரனால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். துரோகி என்ற முத்திரை ஆரம்பத்தில் அரசியல் எதிரிகள் மீது ஏவப்பட்டாலும், பின்னர் இயக்கங்களுக்கு இடையிலான அதிகாரப் போட்டியைத் தீர்க்கும் கருவியாக மாறியது.

 பிரபாகரனுடன் இயங்கிய செட்டி தனபாலசிங்கம் மற்றும் ஓபராய் தேவன் போன்றோர் அதிகாரப் போட்டி காரணமாகவே பிரபாகரனால் கொல்லப்பட்டு துரோகிகளாக முத்திரை குத்தப்பட்டனர். 

குட்டிமணி, தங்கத்துரை போன்றோரின் கைதுகளுக்குப் பின்னால் இருந்த உள்முரண்பாடுகளும், இயக்கங்களுக்கு இடையே நிலவிய ஆதிக்கப் போட்டியும் ஈழ விடுதலைப் போராட்டத்தின் திசையை மாற்றின. இவர்களை காட்டிக் கொடுத்தது பிரபாகரனால் அவரது ஆரம்பகால கூட்டாளிகளுக்கு இழைக்கப்பட்ட துரோகம் மாபெரும் வரலாற்றுத் துரோகம். 

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் (LTTE) தங்களை மட்டுமே தமிழர்களின் ஒரே பிரதிநிதியாக முன்னிறுத்த விரும்பியது. மற்றைய இயக்கங்கள் தனித்து இயங்குவதையோ அல்லது மாற்று அரசியல் பாதைகளைக் கையாள்வதையோ புலிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. 

1983 ஜூலை கலவரத்திற்குப் பிறகு, இந்தியாவின் நேரடி உளவு மற்றும் ராணுவப் பயிற்சி உதவிகள் தமிழ் இயக்கங்களுக்குக் கிடைத்தது. இந்தச் சூழலில், இந்திய அரசோடு நெருக்கமாகப் பழகிய மற்றும் இந்தியாவின் பிராந்திய நலன்களுக்கு ஏற்பச் செயல்பட்டதாகக் கருதப்பட்ட இயக்கங்கள் மீது புலிகள் சந்தேகம் கொள்ளத் தொடங்கினர். 

இந்தியாவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த ரெலோ, இந்தியாவின் அரசியல் திட்டங்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டது. இது புலிகளுக்கும் ரெலோவுக்கும் இடையே மோதலைப் பெரிதுபடுத்தியது. 1986 மே மாதத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் திடீரென ரெலோ இயக்கத்திற்கு எதிராகப் போர் பிரகடனம் செய்து தாக்கியது. 

ரெலோ இயக்கத்தின் தலைவரான ஸ்ரீ சபாரத்தினம் உட்பட ஆயிரக்கணக்கான ரெலோ போராளிகள் குறுகிய நாட்களுக்குள் திட்டமிட்டு வேட்டையாடப்பட்டனர். அப்போது, "ரெலோ அமைப்பினர் இந்திய அரசின் கைக்கூலிகளாக மாறி தமிழினத்திற்குத் துரோகம் இழைத்துவிட்டனர்" என்ற பிரசாரத்தை விடுதலைப் புலிகள் தீவிரமாக முன்னெடுத்தனர். 

பத்மநாபா தலைமையில் இயங்கிய ஈபிஆர்எல்எஃப் அமைப்பு, இடதுசாரி சித்தாந்தத்தைக் கொண்டிருந்ததுடன், இந்தியாவின் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை (1987) ஏற்றுக்கொண்டு வட-கிழக்கு மாகாண சபையின் ஆட்சியிலும் பங்கெடுத்தது. 

இந்திய இராணுவத்துடன் (IPKF) இணைந்து செயல்பட்ட காரணத்தினால், இவர்கள் புலிகளால் முழுமையான 'துரோகிகளாக' முத்திரைக் குத்தப்பட்டனர். இதன் விளைவாக, பிற்காலத்தில் இந்தியாவிலும் இலங்கையிலும் ஈபிஆர்எல்எஃப் தலைவர்களும் போராளிகளும் திட்டமிட்டுக் கொல்லப்பட்டனர். 

உமா மகேஸ்வரன் தலைமையில் இயங்கிய புளட் அமைப்பும் ஆரம்ப காலங்களில் புலிகளுடன் கடுமையான மோதல்களைச் சந்தித்தது. அதிகாரப் போட்டி மற்றும் அரசியல் செல்வாக்குக்காக நடந்த உள்வீட்டுச் சண்டைகளில் புளட் அமைப்பினரும் துரோகிகளாக்கப்பட்டு பெருமளவில் கொல்லப்பட்டனர்.

அரசியல் கருத்து வேறுபாடுகளுக்காக களமிறக்கப்பட்ட 'துரோகி' என்ற சொல், ஈழ நிலப்பரப்பில் சகோதரப் படுகொலைகளுக்கு வழிவகுத்தது. களத்தில் போராட வேண்டிய ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் மாற்று இயக்கங்களுடன் மோதிக் கொல்லப்பட்டனர். 

புலிகள் தங்களின் அரசியல் மற்றும் இராணுவத் தேவைகளுக்காகப் பல நாடுகளுடனும், சிங்கள அரசுகளுடனும் ரகசிய மற்றும் வெளிப்படையான உறவுகளைப் பேணியது தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம் ஆகும்.

இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள் உச்சமடைந்த காலகட்டத்தில், தமிழ் இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சியும், தங்குமிடமும், நிதியுதவியும் வழங்கி வளர்த்து விட்டது இந்திய அரசும் அதன் உளவுத்துறையுமான 'ரா' (RAW) ஆகும். விடுதலைப் புலிகள் ஒரு பலமிக்க அமைப்பாக மாறுவதற்கு இந்தியாவே அடித்தளம் அமைத்துக் கொடுத்தது.

 இலங்கை-இந்திய ஒப்பந்தம் (1987) மற்றும் அதன் மூலம் உருவாக்கப்பட்ட வட-கிழக்கு மாகாண சபை போன்றவற்றைத் தங்களது ஏகபோகத் தலைமைக்குக் குந்தகமாகப் புலிகள் கருதினர். தங்களுக்குப் பயிற்சி அளித்து வளர்த்துவிட்ட இந்திய அரசுடனே நேரடிப் போரில் குதித்து, ஆயிரக்கணக்கான இந்திய வீரர்களை எதிர்த்துப் போராடினர்.

இந்தியாவுடன் போரிட்ட புலிகள், அதற்குப் பிறகு தமிழர்களைக் கொன்று குவித்த இனவெறி அரசான ரணசிங்க பிரேமதாசவின் அரசாங்கத்துடன் ரகசியக் கூட்டு வைத்துக் கொண்டனர். 

இந்திய இராணுவத்தை வெளியேற்றுவதற்காக பிரேமதாச அரசிடமிருந்து கோடிக்கணக்கான பணத்தையும், பெருமளவிலான ஆயுதங்களையும், வெடிகுண்டுகளையும் புலிகள் பெற்றுக் கொண்டனர். 

தங்களுக்கு ஆதரவளித்த இந்தியாவை எதிர்ப்பதற்காக, அன்றைய காலகட்டத்தில் தமிழர்களின் பிரதான எதிரியாக இருந்த சிங்கள அரசுடனே கைகோர்த்தது போராட்ட வரலாற்றில் இழைக்கப்பட்ட ஒரு பெரும் வரலாற்றுத் துரோகமாகவும் சந்தர்ப்பவாதமாகவும் பார்க்கவேண்டும். 

தங்களுக்கு ஆயுதப் பயிற்சி கொடுத்து வளர்த்த இந்திய நாட்டின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியை, தமிழக நிலப்பரப்பில் வைத்து படுகொலை செய்தமை சர்வதேச அளவில் ஈழத் தமிழர் போராட்டத்திற்கு எதிராகத் திரும்பிய மிகப்பெரிய திருப்புமுனையாகும். இந்தச் செயலால் இந்தியா மற்றும் மேற்குலக நாடுகளின் பரிதாபத்தையும் ஆதரவையும் போராட்டம் முற்றிலுமாக இழந்தது. 

தமிழர்களின் நியாயமான கோரிக்கையை உலக அரங்கில் ஒரு 'பயங்கரவாதச் செயலாகப்' பார்க்க வைப்பதற்கு இந்தத் துயரச் சம்பவம் வழிவகுத்தது. அதேபோல், தமக்குத் தேவையான ஆயுதங்களையும் பணத்தையும் கொடுத்து உதவினார் என்ற காரணத்திற்காகப் பிரேமதாசவுடன் நட்பில் இருந்த புலிகள், புவிசார் அரசியல் கணக்குகளுக்காகவும் அதிகார மாற்றங்களுக்காகவும் அவரையும் படுகொலை செய்தனர்.

தமக்கு உதவியவர்களையே சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல் தீர்த்துக்கட்டுவது என்பது இயக்கத்தின் நீண்டகாலப் பாதுகாப்பைக் கேள்விக்குள்ளாக்கியதுடன், ஒட்டுமொத்த தமிழினத்தையும் சர்வதேச நாடுகளின் தீவிர கண்காணிப்புக்கும் சந்தேகத்திற்கும் உள்ளாக்கியது. இந்த படுகொலைகள் எல்லாம் விடுதலையை வேண்டி நின்ற மக்களின் எதிர்காலத்தை குழிதோண்டிப் புதைத்த துரோகங்கள் . 

2005 ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கையின் அதிபர் தேர்தலில், சமாதானப் பேச்சுவார்த்தைகளில் ஓரளவுக்குப் பழகிய ரணில் விக்கிரமசிங்கவைத் தோற்கடிக்க வேண்டும் என்பதில் புலிகள் தீவிரமாக இருந்தனர். பெறப்பட்ட மில்லியன் கணக்கான நிதி: 

சிங்கள இனவாதக் கட்சியான மகிந்த ராஜபக்ச தரப்புடன் புலிகள் தரப்பு இரகசியப் பேச்சுவார்த்தை நடத்தி, சுமார் 300 மில்லியனுக்கும் அதிகமான பணத்தைப் பெற்றுக் கொண்டனர். 

வட-கிழக்கில் இருந்த தமிழர்களை வாக்களிக்கச் செல்ல வேண்டாம் என மிரட்டித் தேர்தல் பகிஷ்கரிப்பைச் செய்ய வைத்து, மிகக் கடுமையான சிங்களப் பேரினவாதக் சிந்தனை கொண்ட மகிந்த ராஜபக்சவை அதிகாரத்திற்குக் கொண்டுவர மறைமுகமாக உதவினார்கள் புலிகள். 

 ரணில் வந்தால் சமாதானம் நீடிக்கலாம், ஆனால் அது தங்களின் ஏகபோகத் தலைமைக்கு ஆபத்தாகலாம் என்ற ஒற்றைக் காரணத்துக்காக, பேரினவாத சக்திகளை அதிகாரத்தில் அமரச் செய்யப் பணத்தைப் பெற்றுக்கொண்டு புலிகள் செய்த இந்தச் செயல், பிற்காலத்தில் ஈழத் தமிழர்களுக்குச் சவக்குழியைத் தோண்டிய வரலாற்றுத் துரோகமாக மாறியது. 

மகிந்த அதிபரான பின்னர்தான் கோத்தபாயாவின் இராணுவ யுக்தியும், இறுதிக்கட்ட ஈழப் படுகொலைகளும் அரங்கேறின என்பது குறிப்பிடத்தக்கது.

 நோர்வே அனுசரணையுடன் சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற காலத்தில், கிழக்கின் பிரதிநிதியாக இருந்த கருணாவை மக்கள் நலனுக்காக ஒப்பந்ததில் கையெழுத்திட்டதற்காக துரோகியாக்கி வெளியேற்றியமையும், பின்னர் கிழக்குப் போராளிகள் கொல்லப்பட்டதும் புலிகளின் மாபெரும் துரோகம் ஆகும். 

2009 காலப்பகுதியில் இலங்கைப் படைகள் முன்னேறி வந்துகொண்டிருந்த வேளையிலும், சர்வதேச சமூகம் அல்லது மேற்குலக நாடுகள் ஏதேனும் ஒரு அற்புதத்தைச் செய்து தங்களைக் காப்பாற்றும் என்ற குருட்டு நம்பிக்கையில், விடுதலைப் புலிகள் மக்களைப் பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்ல அனுமதிக்கவில்லை. 

மாறாக, தங்களின் ராணுவ நகர்வுகளுக்கும் பாதுகாப்பிற்கும் மக்களை ஒரு மனிதக் கவசமாகப் (Human Shielding) பயன்படுத்தினர். இவ்வளவு பெரிய அழிவுகளுக்கும், லட்சக்கணக்கான மக்களின் உயிர்ப்பலிக்கும் காரணமான புலிகளின் தலைமையும் உயர் மட்டத் தளபதிகளும் இறுதியில் போர்க்களத்திலிருந்து தப்பியோடவோ அல்லது மக்களைக் காப்பாற்றவோ முயலாமல், இறுதிக்கட்டத்தில் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளச் சரணடையும் முடிவை எடுத்தனர்.

 மக்களுக்காகப் போராடுவதாகக் கூறிய இயக்கம், மக்களைப் பாதுகாப்பற்ற போர்க்களத்தில் பலிகொடுத்துவிட்டு தாங்கள் சரணடைந்தமை ஈழத் தமிழினத்திற்கு இழைக்கப்பட்ட மன்னிக்க முடியாத வரலாற்றுத் துரோகம்.

விடுதலைப் புலிகள் அமைப்பு ராணுவ ரீதியாக அழிக்கப்பட்டு பல ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும், அவர்களின் பெயரால் பிழைப்பு நடத்தும் சில அடிவருடிகளும், புலம்பெயர் தேசங்களில் தங்களை தீவிரவாதிகளாகக் காட்டிக்கொள்ளும் சில எச்சங்களும் இன்னும் அதே பழைய 'துரோகி' முத்திரை குத்தும் கலாச்சாரத்தைக் கைவிடவில்லை. 

ஜனநாயக ரீதியாகவும், அமைதியான முறையிலும் தமிழர்களின் உரிமைகளுக்காகப் பேசும் அரசியல்வாதிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் அல்லது புலிகளின் கடந்தகாலத் தவறுகளைச் சுட்டிக்காட்டி விமர்சிப்பவர்கள் எவராயினும், அவர்கள் உடனடியாக 'துரோகிகள்' என முத்திரைக் குத்தப்படுகிறார்கள். 

புலம்பெயர் தேசங்களிலும் தாயகத்திலும் உள்ள இந்தச் சிறு குழுவினர், தங்களை எதிர்த்துப் பேசுவோரின் நற்பெயரைக் குலைப்பது (Character Assassination), இணைய வழிகளில் மிரட்டல் விவிடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது தமிழ்ச் சமூகத்தில் ஆரோக்கியமான விவாதங்களுக்கும், சுயவிமர்சனத்திற்கும் உள்ள வாய்ப்பை முற்றிலும் முடக்கிவிடலாம் என முயற்சிக்கின்றனர். 

வரலாற்றில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளாத இந்தக் குறுகிய மனப்பான்மை கொண்ட அடிவருடிகளின் செயல்பாடு தொடருமானால், அது ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்திற்கும் மிக ஆபத்தான எதிர்காலத்தையே உருவாக்கும். 

இந்தச் சிறிய போலி அயோக்கியக் குழுவினரைத் தவிர, நாளடைவில் ஈழத்தின் பிரதான கோரிக்கைகளுக்காக உண்மையாகச் சிந்திக்கும், தவறுகளை பற்றிப் பேசும் மற்ற அனைத்துத் தமிழர்களுமே 'துரோகிகள்' என்று முத்திரைக் குத்தப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை.

இந்த நச்சுத்தனமான கலாச்சாரத்திலிருந்து தமிழ்ச் சமூகம் விடுபட்டால் மட்டுமே, எதிர்காலத்தில் மாற்றுச் சிந்தனைகளுடன் கூடிய ஒரு வலுவான அரசியல் பாதையை அமைக்க முடியும்.

இது ஒரு முகப்புத்தகத்தின் பிரதியாக்கம்.

முகிந்தன் துரைராஜசிங்கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks