ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து இஸ்ரேலுக்குச் சென்றுகொண்டிருந்த விமானத்தின் விமானி ஒருவர், தனது சக விமானியைக் கத்தியால் குத்தியதுடன், விமானத்தை விபத்துக்குள்ளாக்க முயன்றதாகத் தெரிகிறது என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இது இஸ்ரேலியர்களுக்கு எதிரான பயங்கரவாதத் தாக்குதல் முயற்சியாக இருந்ததா என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
டபூக் (Tabuk) விமான நிலையம் என்று பரவலாக அறியப்படும் 'பிரின்ஸ் சுல்தான் பின் அப்துல்அஜிஸ்' சர்வதேச விமான நிலையத்தின் அறிக்கையின்படி, இந்த விமானம் சவுதி அரேபியாவில் அவசரமாகத் தரையிறக்கப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இதில் இரண்டு விமானிகளும் காயமடைந்தனர், ஆனால் மற்ற பயணிகள் பாதுகாப்பாக உள்ளனர்.
கத்தியால் குத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட விமானியை சவுதி அதிகாரிகள் விசாரித்து வருவதாக நெதன்யாகு கூறினார். இஸ்ரேலின் போக்குவரத்து அமைச்சகம், பாதுகாப்புத் துறையுடன் இணைந்து இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.
விமானத்தில் இருந்த சுமார் 170 பயணிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவித்த இந்தத் தாக்குதல் முயற்சிக்கு என்ன காரணம் என்பது உடனடியாகத் தெரியவரவில்லை.
இஸ்ரேலியப் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், இந்தச் சம்பவத்தை "ஜிஹாதி பயங்கரவாதத் தாக்குதல் முயற்சி" என்று வர்ணித்தார். "அந்தப் பயங்கரவாதிக்கு ஒரே ஒரு நோக்கம் மட்டுமே இருந்தது.
விமானத்தை விபத்துக்குள்ளாக்கி, அதில் இருந்த அனைவரையும் கொல்ல வேண்டும் என்பதுதான் அது," என்று கூறிய காட்ஸ், "பல பயணிகளின் வீரத்தால்" அந்தத் தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக