வெள்ளி, 11 செப்டம்பர், 2026

வெளிநாடுகளிலும் சில தமிழர்கள் அநாகரிகக் கூத்துகள்!!

இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா , பிரான்ஸ் போன்ற மேற்கு நாடுகளுக்குப் பிழைப்பு தேடிச் சென்றுவிட்டு, அங்கே நிலவும் உயரிய நாகரிகச் சூழலையும் மீறிச் சில தமிழர்கள் நிகழ்த்தும் அநாகரிகக் கூத்துகள் ஒட்டுமொத்தத் தமிழினத்தின் மீதும் கரும்புள்ளியைப் பூசி வருகின்றன. கல்வியிலும், தொழிலும், வியாபாரத்திலும் நமது இனத்தைச் சேர்ந்த பல லட்சக்கணக்கானோர் சிறந்து விளங்கி, தாங்கள் வசிக்கும் நாடுகளுக்கும் சொந்த இனத்திற்கும் பெருமை சேர்த்து வருகின்றனர். 


 ஆனால், இந்த நல்மதிப்பைத் தூக்கியெறிந்துவிட்டு, சில காட்டுமிராண்டித்தனமான செயல்களைச் செய்யும் ஒரு சிறு கூட்டத்தால் ஒட்டுமொத்தச் சமூகமும் தலைகுனிய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. நம்பிக்கைகளும் வழிபாடுகளும் அவரவர் தனிப்பட்ட உரிமை; அது நான்கு சுவர்களுக்குள் அல்லது அதற்கென ஒதுக்கப்பட்ட வழிபாட்டுத் தலங்களுக்குள் இருக்கும் வரை யாருக்கும் எந்தத் தொல்லையும் இல்லை. 

 ஆனால், அதை விடுத்து நாகரிகமான ஒரு நாட்டின் நடுத்தெருவில் கொண்டு வந்து இறக்குவதுதான் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் மூலக்காரணம். UK போன்ற ஒரு ⁠Civilized Society⁠-யில் போய், தங்களின் மூன்றாம் உலக நாட்டு ⁠Uncivilized, Barbaric Attitude⁠-களைக் காட்ட முற்படும்போதுதான் அங்கே மிகப்பெரிய முரண்பாடு வெடிக்கிறது. பக்தி என்ற பெயரிலும் கலாச்சாரப் பேரணி என்ற பெயரிலும் ரோட்டுகளில் உருண்டு, முதுகில் கோரமாக முள்ளில் குத்திக்கொண்டு, தூக்கு காவடி ஆடுவதும், போக்குவரத்தை முழுமையாக ஸ்தம்பிக்க வைத்து தேர் இழுப்பதும் எந்த வகையில் நாகரிகம்? 

அங்கே வாழும் உள்ளூர் மக்கள் முகஞ்சுளிக்கும் படியும், "இவர்கள் இன்னும் காட்டுமிராண்டித்தனத்திலிருந்து மாறவில்லை" என்று முகம் திருப்பும் படியும் நடந்து கொள்வது எத்தகைய மனநிலை? பிரிட்டிஷ்காரன் காலனித்துவ ஆட்சியில் விட்டுச் சென்ற நற்பண்புகளையும், நவீனச் சட்ட விதிகளையும் சரியாகப் புரிந்துகொள்ளாமல், காட்டுமிராண்டித்தனமான பழக்கவழக்கங்களை வெளிநாடுகளிலும் கட்டிக்கொண்டு அழுவது நாம் இன்னும் நாகரிகமடையவில்லை என்பதையே அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. 

இத்தகைய பொறுப்பற்ற செயல்களால்தான் இன்றைக்கு சமூக ஊடகங்களில் இந்தியர்கள் மற்றும் தமிழர்கள் மீது கடுமையான வெறுப்பு விஷம் கக்கி வரப்படுகிறது. வெளிநாடுகளில் வசிக்கும் மக்களைக் குறிவைத்து இனவெறித் தாக்குதல்கள் நடப்பதற்கும், இணையத்தில் அவர்களை மட்டம் தட்டிப் பேசுவதற்கும் இதுபோன்ற செயல்களும் ஒரு மறைமுகக் காரணமாக அமைந்துவிடுகின்றன. Generalisation தவறு என்றாலும்...: 

எல்லாரும் ஒரே மாதிரி இருப்பதில்லை, ஒரு சிலரின் மடையத்தனமான செயல்களுக்காக ஒட்டுமொத்தச் சமூகத்தையும் குறைசொல்வது தவறுதான். ஆனால், அந்தத் தவறுகளைத் திருத்திக் கொள்ளாமல் "எங்கள் இஷ்டம், நாங்கள் இப்படித்தான் இருப்போம்" என்று திமிர் காட்டுவதை எப்படி நியாயப்படுத்த முடியும்? 

ஜப்பானில் குப்பைகளைச் சொந்த மாணவர்களே தூய்மைப்படுத்துகிறார்கள். ஆனால், நம் ஊரிலோ எங்கு குப்பை போட்டாலும் அதை எடுக்க ஒருவன் இருக்கிறான் என்ற அலட்சியம் சிறு வயதிலிருந்தே நம் ரத்தத்தில் ஊறிக் கிடக்கிறது. 

அந்தத் திமிரையும் குப்பை மனநிலையையும் அப்படியே வெளிநாடுகளுக்கும் தூக்கிச் சென்று, அங்குள்ள சுத்தமான பொதுவெளிகளை நாசம் செய்வது எந்தச் சட்டத்தின்படி நியாயம்?

நம்மவர்களில் பலருக்குச் சிறிதும் இல்லாதது இந்த Civic Sense எனப்படும் பொதுவெளிப் பொறுப்புணர்ச்சிகள்தான். ஒரு நாட்டின் சட்டதிட்டங்களையும், பொதுமக்களின் அமைதியையும் மதிக்கத் தெரியாமல், அதிக சத்தத்துடன் ஸ்பீக்கர்களை வைத்துக்கொண்டு பொதுவெளியில் ஆடுவதும் கூச்சலிடுவதும் சுதந்திரம் அல்ல.

அது அடுத்தவனின் உரிமையைப் பறிக்கும் அநாகரிகம். இதுபோன்ற பொறுப்பற்ற செயல்களால்தான் வெளிநாடுகளில் இந்தியர்களுக்கு எதிரான இனத்துவேசம் தலைதூக்கக் காரணமாக அமைகிறது. "இவர்கள் நம் நாட்டுக்கு வந்து நம் அமைதியைக் கெடுக்கிறார்கள், நம் கலாச்சாரத்தை மதிக்கத் தெரியாதவர்கள்" என்ற எண்ணம் அங்கே உள்ளூர் மக்களிடையே ஆழமாக வேரூன்ற இதுவே வழிவகுக்கிறது.

மற்றவர்களின் சுதந்திரத்திற்கும் அமைதிக்கும் குந்தகம் விளைவிக்காத வகையில் ஒரு சமூகத்தின் கலாச்சாரம் இருக்க வேண்டும். அதை மீறி, "இது எங்கள் கலாச்சாரம், நாங்கள் இப்படித்தான் இருப்போம்" என்று திமிர் காட்டுவது நம்மை நாமே தரம் தாழ்த்திக் கொள்வதற்குச் சமம். வெஸ்டர்ன் மக்களிடமிருந்து நாம் எல்லாவற்றையும் குருட்டுத்தனமாகப் பின்பற்ற வேண்டும் என்று யாரும் சொல்லவில்லை. 

ஆனால், ஒழுக்கம், பொதுவெளிப் பொறுப்பு, அடுத்த மனிதனின் அமைதிக்கு இடையூறு செய்யாதிருத்தல் போன்ற அடிப்படை நாகரிகங்களைக் கற்றுக்கொள்வதில் எந்தத் தவறும் இல்லை. ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது அங்கே கட்டப்பட்டுள்ள உயரமான கட்டிடங்களிலோ அல்லது நவீன தொழில்நுட்பங்களிலோ மட்டும் அடங்கிவிடுவதில்லை.

அந்த நாட்டு மக்கள் ஒருவருக்கொருவர் எத்தகைய மரியாதையுடன் நடக்கிறார்கள் என்பதில்தான் அந்தச் சமூகத்தின் உண்மையான நாகரிகம் அடங்கியிருக்கிறது. அதிகாரமும், பணமும், கூட்டமும் இருக்கிறது என்பதற்காக எதை வேண்டுமானாலும் பொதுவெளியில் செய்யலாம் என்ற எண்ணத்தை விட்டுவிட்டு, வாழும் நாட்டின் சட்டங்களையும் விதிகளையும் மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.

 கலாச்சாரத்தைக் காப்பது என்பது ஊருக்கு நடுவே காது செவிடுபடும் அளவுக்குக் கத்துவதிலோ, போக்குவரத்தை மறித்து ஊர்வலம் நடத்துவதிலோ இல்லை; மாறாக, நம்முடைய நற்பண்புகளாலும், பொறுப்பான நடத்தையாலும் பிறர் நம்மைத் திரும்பிப் பார்க்க வைப்பதில்தான் இருக்கிறது. இனியாவது இந்த மூடத்தனமான, நாகரிகமற்ற பழக்கவழக்கங்களை வெளிநாடுகளிலும் அரங்கேற்றுவதை விடுத்து, பொறுப்புள்ள நாகரிகக் குடிமக்களாக நடந்து கொள்ளப் பழக வேண்டும். 

இல்லையேல், வெளிநாட்டவர்கள் நம்மைத் துச்சமாக மதிப்பதற்கும், நம் மீது இனத்துவேசம் கக்குவதற்கும் நாமே முழுக்காரணமாக இருக்கிறோம் என்ற உண்மையை உணர்ந்து திருந்துங்கள்.

ஒரு சிந்தனைக்கு: மாற்றம் என்பது அரசாங்கத்தாலோ அல்லது சட்டத்தாலோ மட்டும் வந்துவிடாது. நம்முடைய மனநிலையிலும், அன்றாடப் பழக்கவழக்கங்களிலும்தான் அது தொடங்க வேண்டும். வெளிநாட்டில் வாழ்ந்தாலும் சரி, ஊரில் வாழ்ந்தாலும் சரி , நம்முடைய செய்கை நம் இனத்திற்கு பெருமையை தர வேண்டுமே தவிர, கேவலத்தைத் தேடித்தரக் கூடாது.

முகிந்தன் துரைராஜசிங்கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks