வியாழன், 20 ஆகஸ்ட், 2026

தூத்துக்குடி துப்பாக்கி சூடு அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை?

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் தொடர்புடைய அதிகாரிகள் மீதான நடவடிக்கை அரசின் பரிசீலனையில் உள்ளது என உயர் நீதிமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டம் நடத்திய பொதுமக்களில் 13 பேர் துப்பாக்கிச் சுட்டில் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். 

இதற்கு காரணமானோர் மீது குற்ற வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என கோரி மதுரை பீபிகுளம் கதிரேசன் உள்பட பலர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத் தாக்கல் செய்தனர். மனுக்களை நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் அமர்வு விசாரித்தது. அப்போது நீதிபதிகள், துப்பாக்கிச் சூடு தொடர்பாக விசாரணை நடத்திய நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் விசாரணை அறிக்கையை அரசு ஏற்றுக்கொண்டுள்ளதா என கேள்வி எழுப்பினர். 

அதற்கு அரசுத் தரப்பில், விசாரணை ஆணையத்தின் அறிக்கையின் பரிந்துரைகள் பகுதியளவு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட பரிந்துரைகள் அரசின் பரிசீலனையில் உள்ளன என தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து நீதிபதிகள், பாதிக்கப்பட்டோரின் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு மட்டுமே வழங்கப்பட்டுள்ளதா என்றனர்.

மனுதாரர் தரப்பில், இந்த வழக்கில் 8 ஆண்டுகளாக நிவாரணம் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள், ‘பொறுமை கடலினும் பெரிது’ என பதிலளித்தனர். 

தொடர்ந்து நீதிபதிகள், அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கைகளின் தற்போதைய நிலை என்ன, எந்த நடவடிக்கைகள் கைவிடப்பட்டன, எந்த நடவடிக்கைகள் தொடர்கின்றன என்பது குறித்து அரசுத் தரப்பில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு ஏற்கெனவே உத்தரவிடப்பட்டுள்ளது. இதுவரை தாக்கல் செய்யப்படவில்லை என்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks