அதன் அருகில் நடுக்குப்பம் மீனவ கிராமம் உள்ளது. அங்கு 250க்கும் மேற்பட்ட மீனவர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பெரிய கோட்டக்குப்பம் ஆதிதிராவிடர் மக்களுக்கு, நடுக்குப்பம் கடற்கரை அருகே உள்ள சுமார் 1 ஏக்கர் நிலப்பரப்பில் இடுகாடு அமைந்துள்ளது.
இந்த இடுகாட்டின் அருகில் உள்ள கடற்கரை ஒட்டிய பகுதியில் நடுக்குப்பம் மீனவர்கள் படகுகளை நிறுத்தி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்தனர். சுனாமி தாக்குதலுக்கு பிறகு கடலரிப்பு ஏற்பட்டதையடுத்து மீனவ மக்கள் பயன்படுத்தி வந்த கரை பகுதியானது கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டது.
இதனால் மீனவர்கள் தங்கள் படகுகளை பெரிய கோட்டகுப்பம் தலித் மக்கள் பயன்பாட்டில் உள்ள இடுகாட்டுப் பகுதியில் படகுகளை நிறுத்தி பாதுகாத்து வந்தனர்.
இதனால் அவர்கள் இப்பகுதியில் அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து வந்ததால், இரு பிரிவினர்களிடையே அவ்வப்போது பிரச்னை ஏற்பட்டு பதட்டமான சூழல் நிலவி வந்தது. பெரிய கோட்டகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர்கள் கடந்த ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கினை விசாரித்த நீதிமன்றம், எட்டு வார காலத்திற்குள் சம்மந்தப்பட்ட இடத்தை அளவீடு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வானூர் வட்டாட்சியர், கோட்டக்குப்பம் நகராட்சி ஆணையர் உள்ளிட்ட 8 பேருக்கு உத்தரவிட்டது. கடந்த ஜனவரி மாதம் இடத்தை அதிகாரிகள் அளவீடு செய்தனர். இதற்கும் மீனவ பஞ்சாயத்தார் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இது போன்ற சூழலில் நேற்று முன்தினம் இரவு பெரியகோட்டக்குப்பம் பகுதியை சேர்ந்த பூமிலிங்கம்(76) என்ற முதியவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவரது உடலுக்கு இறுதிச்சடங்கு முடிந்து நேற்று மாலை வழக்கமாக இடுகாட்டில் அடக்கம் செய்ய ஊர்வலமாக எடுத்துச்சென்றனர்.
அப்போது இதனை தடுக்கும் வகையிலும், நடுக்குப்பம் மீனவர்கள் கல், சுளுக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் பெரியகோட்டக்குப்பம் பகுதி ஆதிதிராவிடர் மக்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
அப்போது நடந்த கல்வீச்சில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உள்பட ஐந்து பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.இதையடுத்து பெரியகோட்டக்குப்பம் பகுதி மக்கள் இறந்தவரின் சடலத்துடன் கோட்டக்குப்பம் ரவுண்டானா இசிஆர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விழுப்புரம் சரக டிஐஜி அருளரசு, விழுப்புரம் பொறுப்பு எஸ்பி ஜெயக்குமார் மற்றும் கோட்டக்குப்பம் டிஎஸ்பி ரூபன்குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சடலத்தை தற்போதுள்ள இருகாட்டிலே அடக்கம் செய்ய ஏற்பாடு செய்வதாக போலீசார் உறுதியளித்தனர். இதனையேற்று பெரிய கோட்டக்குப்பம் மக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.
தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் சடலத்தை இடக்காட்டுக்கு எடுத்து சென்றனர். அசம்பாவிதத்தை தடுக்கும் வகையில் இடுகாடு வரை போலீஸ் பாதுகாப்புடன் சவஊர்வலம் சென்றது.
இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் நாளை(8ம் தேதி) காலை விழுப்புரத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்த இரு தரப்புக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சடலத்துடன் நடந்த சாலை மறியலால் புதுச்சேரி-சென்னை இருமார்க்கத்திலும் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவி வரும் நிலையில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க இரு கிராமங்களில் டிஎஸ்பி ரூபன்குமார் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக