திங்கள், 8 ஜூன், 2026

செம்மணியில் 6 சிறுவர்களின் என்புக்கூடுகள்!!

யாழ் செம்மணி மனித புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளில் இன்று (திங்கட்கிழமை) மேலும் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. 

இன்றைய 19ஆம் நாள் அகழ்வுப் பணிகளின் போது சிறுவர்களின் என்புக்கூடுகள் அடங்கிய 06 மனித என்புக் கூட்டு தொகுதிகள் ஒரே இடத்தில் குவியலாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக நீதிமன்ற கண்காணிப்பில் பணிகளை முன்னெடுத்து வரும் தரப்புகள் தெரிவித்துள்ளன. 

அடையாளம் காணப்பட்ட என்புக்கூடுகளை சுத்தம் செய்து, விஞ்ஞான மற்றும் தடயவியல் ஆய்வுகளுக்காக பாதுகாப்பாக பதிவு செய்யும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. மேலும், இன்றைய தினம் மட்டும் மொத்தமாக 16 மனித என்புக் கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே கண்டறியப்பட்ட 04 என்புக் கூட்டு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. 

செம்மணி மனித புதைகுழி தொடர்பான அகழ்வு பணிகள் இலங்கையின் உள்நாட்டு போருக்கால காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் பொதுமக்கள் படுகொலை குறித்த நீண்டகால குற்றச்சாட்டுகளுடன் தொடர்புபடுத்தப்பட்டு சர்வதேச மனித உரிமை அமைப்புகளாலும் கவனிக்கப்பட்டு வருகிறது.

 1990களில் முதன்முறையாக வெளிச்சத்துக்கு வந்த செம்மணி புதைகுழி, வடக்கிலான போர்க்கால மனித உரிமை மீறல்களின் முக்கிய சாட்சியிடமாகக் கருதப்படுகிறது.

இதுவரை நடைபெற்ற அகழ்வு பணிகளின் அடிப்படையில் மொத்தமாக 318 மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 302 என்புக் கூட்டு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. 

சிறுவர்களின் என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை, போரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களிடையே மீண்டும் ஆழ்ந்த துயரத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks