திருகோணமலை – பாலைஊத்து பகுதியில் வைத்து கடந்த 2008 ஆம் ஆண்டில் இரண்டு பெண்கள் வெள்ளை வானில் கடத்திச் செல்லப்பட்டு, கடற்படை முகாமின் நிலத்தடிப் பதுங்கு குழி சிறையிலடைக்கப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரிகள் மூவர் கைது
கடந்த 2008 ஆம் ஆண்டு மே மாதத்தில், மேரி டெல்ஷியா மற்றும் சசிகுமார் தேன்மொழி ஆகிய இரண்டு பெண்களே இவ்வாறு கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
இக் கடத்தல் மற்றும் படுகொலை சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் கூட்டுச் சூறையாடல் விசாரணைப் பிரிவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.
மாத்தளை, பூஸ்ஸ மற்றும் பதுளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 47 மற்றும் 53 வயதுடைய, ஓய்வுபெற்ற கடற்படையின் நிர்வாகப் பிரதான கீழ்நிலை அதிகாரிகளே (Chief Petty Officers) இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள குறித்த மூன்று ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரிகளும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இன்று (20) காலை இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு வருகை தந்துள்ளார்.
குறித்த ஆணைக்குழுவின் முன் ஆஜராகுமாறு விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு அமையவே அவர் அங்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் வாக்குமூலம் அளிப்பதற்காக வருகை தந்திருந்த முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், சுமார் இரண்டு மணித்தியால வாக்குமூலப் பதிவின் பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.
நாடு முழுவதும் வார இறுதியில் நடந்த வன்முறைப் போராட்டங்களின் போது காவல்துறை "கட்டுப்பாட்டை இழந்தது" என்று அரசாங்கம் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, பாரிஸின் சில பகுதிகள் உட்பட பல பிரெஞ்சு நகரங்களுக்குப் பகுதி நேர ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
பிரெஞ்சுப் பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு, திங்களன்று நடந்த அவசர அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு, "பொது ஒழுங்கை மீட்டெடுக்க முழுமையாகத் தீர்மானித்துள்ளதாகவும்", தேவைப்பட்டால் "உள்ளூர் மற்றும் பகுதி நேர" ஊரடங்குகளுக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் கூறினார்.
முழு நகரங்களுக்கும் முழுமையான ஊரடங்கு உத்தரவைப் பிறப்பிக்கும் கேள்விக்கே இடமில்லை என்றும் அவர் கூறினார்.
பின்னர் அவரது அலுவலகம், லில் உட்பட நான்கு வடக்கு நகரங்களில் திங்கள் மற்றும் செவ்வாய் இரவுகளில் இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை பகுதி நேர ஊரடங்குகளை அறிவித்தது.
சனிக்கிழமை கலவரம் நடந்த பிளேஸ் டி லா ரிபப்ளிக் மற்றும் கொள்ளைச் சம்பவங்களுக்கு உள்ளான லெ ஹால்ஸ் வணிகப் பகுதி ஆகிய பாரிஸில் உள்ள இரண்டு பகுதிகளில், திங்கள் இரவு 11 மணி முதல் செவ்வாய் காலை 6 மணி வரை காவல்துறை ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்தது.
கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்கு இந்த உத்தரவுகள் தடை விதிப்பதாகவும், குறிப்பிட்ட இரண்டு பகுதிகளுக்குள் யாரும் நுழைவதற்கோ அல்லது தங்குவதற்கோ தடை விதிப்பதாகவும் காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸின் இரண்டாவது பெரிய நகரமான மார்சேய், திங்கள்கிழமை அன்று அனைத்துக் கூட்டங்களுக்கும் ஆர்ப்பாட்டங்களுக்கும் தடை விதிப்பதாகத் தனிப்பட்ட முறையில் அறிவித்தது.
இதற்கிடையில், பிரெஞ்சு தொழிற்சங்கங்கள் நவம்பர் 5-ஆம் தேதியன்று புதிய கட்ட வேலைநிறுத்தங்களுக்கும் பேரணிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளன.
அவசரகால நிலையை அறிவிப்பது அவசியமெனக் கருதப்பட்டால், "நாங்கள் அதைச் செய்ய முடியும்" என்று லெகோர்னு செய்தியாளர்களிடம் கூறினார்.
இருப்பினும், தற்போதைய சூழலில் பகுதிநேர ஊரடங்கு உத்தரவுகளை அமல்படுத்துவதே "மிகவும் பொருத்தமானதாக" இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.
சனிக்கிழமையன்று நடைபெற்ற போராட்டங்களின் போது சில நகரங்களில் காவல்துறை "கட்டுப்பாட்டை இழந்ததை" பிரான்ஸின் உள்துறை அமைச்சர் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, லெகோர்னுவின் இந்தக் கருத்துகள் வெளியாகியுள்ளன.
கலவரத்தை முடிவுக்குக் கொண்டுவர, முழுமையான பாதுகாப்பு மறுஆய்வு மற்றும் "புதிய செயல்பாட்டு முறைகள்" தேவை என்று அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வலியுறுத்தியுள்ளார்.
போராட்டங்களுக்கான ஏற்பாடுகளில் "முன்னெச்சரிக்கை நடவடிக்கை போதவில்லை" என்று லாரன்ட் நுனெஸ் திங்கள்கிழமை தெரிவித்தார்.
போராட்டங்களின் விளிம்பில் கலவரக்காரர்களையும் கொள்ளையர்களையும் கையாள்வதற்குப் போதுமான எண்ணிக்கையிலான காவலர்கள் இல்லை என்பதையும் அவர் ஒப்புக்கொண்டார்.
நாடு முழுவதும் சுமார் 2,00,000 போராட்டக்காரர்கள் பங்கேற்பார்கள் என்று உளவுத்துறை கணித்திருந்ததாக நுனெஸ் கூறினார். ஆனால், உண்மையில் 5,00,000-க்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.
அமைதியான போராட்டங்கள் திசைதிருப்பப்பட்டு, சமீபத்திய ஆண்டுகளில் பிரான்ஸ் கண்ட மிக வன்முறைச் சம்பவங்களில் ஒன்றாக இது மாறியது.
நடந்த அனைத்து நிகழ்வுகளுக்கும் "தாமே பொறுப்பு" என்று கருதியதால், அதிபர் மேக்ரானிடம் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியதாக அவர் தெரிவித்தார்.
ஆனால், மேக்ரான் அந்த ராஜினாமாவை ஏற்க மறுத்து, அதற்குப் பதிலாக "தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு" நுனெஸிடம் கேட்டுக்கொண்டார்.
ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதல்களில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள உக்ரைனுக்கு வழங்கி வந்த மிக முக்கியமான உளவுத்துறைத் தகவல்களை, சிறிய இடைவெளிக்குப் பின்னர் அமெரிக்கா மீண்டும் வழங்கத் தொடங்கியுள்ளது
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி (Volodymyr Zelenskiy) (18) இந்த விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.
ரஷ்யா தனது நகரங்களை நோக்கி தொடர்ச்சியாக வீசும் அதிவேக பெலிஸ்டிக் ஏவுகணைகளைக் கண்டறிவதற்கு உக்ரைன் அமெரிக்காவின் உளவுத் தகவல்களையே பெரிதும் நம்பியிருந்தது.
இந்நிலையில் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியில், உளவுத் தகவல்களைப் பகிர்ந்து கொள்வது இடைநிறுத்தப்பட்டிருந்த போதிலும், பின்னர் அது "நீக்கப்பட்டது என்று கூறினார்.
இதற்காக நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.
இப்போது அது மீண்டும் செயல்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.
உக்ரேனிய அதிகாரிகள் சிலர் ரஷ்யத் தாக்குதல்கள் எந்தவித முன்னறிவிப்புமின்றி இடம்பெற்றதாகக் கூறியபோதிலும், வொஷிங்டன் இன்னமும் உளவுத் தகவல்களைப் பகிர்ந்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்த வார ஆரம்பத்தில் கூறியிருந்தமை தெரிவிக்கப்படுகின்றது.
கனடாவின் அல்பர்ட்டா (Alberta) மாகாணத்தில் உள்ள வெய்ன்ரைட் கனேடியப் படைத் தளத்தில் (CFB Wainwright) ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்து மற்றும் அதனைத் தொடர்ந்து பரவிய காட்டுத்தீ காரணமாக குறைந்தது நான்கு படைவீரர்கள் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 39 பேர் படுகாயமடைந்துள்ளனர் என அந்நாட்டு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கடந்த சனிக்கிழமை (17) பிற்பகல் இத் தளத்தில் இந்த வெடிவிபத்து சம்பவித்துள்ளது. வெடிப்பைத் தொடர்ந்து உருவான பாரிய தீ, பலத்த காற்று காரணமாக இராணுவத் தள வளாகத்திலிருந்து சுற்றியுள்ள கிராமப்புறப் பகுதிகளுக்கும் வேகமாகப் பரவியுள்ளது.
இவ் வெடிவிபத்து மற்றும் தீ விபத்துக்கான துல்லியமான காரணங்கள் குறித்து கனேடிய பாதுகாப்புத் துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செம்மணி மனித புதைகுழி தொடர்பிலான வழக்கு விசாரணைகள் இன்றைய தினம் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் நீதவான் லெனின் குமார் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
குறித்த வழக்கில் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவாவினால் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் குற்றப்புலனாய்வு பிரிவினரால் இரு அறிக்கைகளும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
இவை தொடர்பில் எதிர்வரும் நவம்பர் மாதம் 19ஆம் திகதி நடைபெறவுள்ள நிர்வாக குழு கூட்டத்தில் ஆராய்ந்து மேலதிக நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என மன்று அறிவித்துள்ளது.
செம்மணி மனிதப் புதைகுழி வழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், இன்றைய வழக்கில் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவாவினால் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதனை பாதிக்கப்பட்ட தரப்பினருக்கும் உரிய தரப்பினருக்கும் வழங்குமாறு நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.அத்துடன் குற்றப்புலனாய்வு பிரிவினரால் இண்டு விண்ணப்பங்கள் பிரேரிக்கப்பட்டன. முதலாவது C -14 பரிசோதனைக்கு இந்த மாதிரிகள் விரைவாக அனுப்பப்பட வேண்டும்.
இரண்டாவது ஏற்கனவே சிறைச்சாலையில் இருக்கும் செம்மணி புதைகுழி வழக்கு தொடர்பில் ஈடுபட்டிருந்த சோமரத்ன ராஜபக்சவின் வாக்குமூலம் சம்மந்தமாக விசாரணை ஒன்றை மேற்கொள்வதற்கும் அவரிடமிருந்து வாய் முறைப்பாட்டைப் பெற்றுக்கொள்வதற்கும் நீதிமன்றத்திடம் விண்ணப்பம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் சோமரத்ன ராஜபக்சவிடம் இருந்து வாக்குமூலம் பெறுவதற்கான அனுமதியை வழங்கியதுடன் C -14 பரிசோதனைக்கு அனுப்புவது சம்மந்தமாக வருகின்ற மாதம் 19ஆம் திகதி நிர்வாக கூட்டத்தில் முடிவெடுத்த பிற்பாடு தீர்மானம் எடுக்கப்படும் என மன்று அறிவித்துள்ளது
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் கனமழை பெய்தது. இதனால் செம்பரம்பாக்கம், புழல் ஏரிக்கு வரும் நீரின் வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக செம்பரம்பாக்கம் ஏரி விளங்குகிறது. கடந்த சில நாட்களாக அதிகப்படியான புவி வெப்பத்தின் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் வேகமாக குறைந்து, ஆங்காங்கே தரைகள் தெரியும் அளவிற்கு காட்சியளித்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் பெய்த கனமழை காரணமாக தற்போது செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீரின் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த நீர்மட்ட உயரம் 24 அடியில் தற்போது தண்ணீர் 14.21 அடியாகவும், மொத்த நீரின் கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடியில் 1,390 மில்லியன் கன அடியாகவும், நீர்வரத்து 655 கன அடியாகவும் உள்ளது.
தற்போது தினமும் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து சென்னை குடிநீர் மற்றும் சிப்காட் தேவைகளுக்காக 203 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
தொடர்ந்து மழை பெய்தால் சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்குவதில் எந்தவித தட்டுப்பாடும் ஏற்படாது எனவும், அவ்வாறு தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலையில், சிக்கராயபுரம் கல்குவாரியில் தேங்கியிருக்கும் அதிகப்படியான மழைநீரை சுத்தம் செய்து சென்னை மக்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்படும் ஏரியை கண்காணித்து வரும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேபோல் சோழவரம், செங்குன்றம், புழல் சுற்றுவட்டார இடங்களில் நேற்று முன்தினம் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.
திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக செங்குன்றத்தில் 12 செமீ மழை பதிவாகியுள்ளது. நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக புழல் ஏரிக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது.
புழல் ஏரிக்கு நேற்று முன்தினம் 663 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 1485 கன அடியாக அதிகரித்துள்ளது.
3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில், 2037 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. 21.2 அடி உயரம் கொண்ட புழல் ஏரியில் தற்போது 14.95 அடி உயரத்தில் நீர் இருப்பு உள்ளது. சென்னை குடிநீருக்காக புழல் ஏரியில் இருந்து 171 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. புழல் ஏரிக்கு ஒரே நாளில் 111 மில்லியன் கன அடி நீர்வரத்து வந்துள்ளதால் நீர்மட்டம் கிடுகிடுவென உயர தொடங்கியுள்ளது.