வியாழன், 3 செப்டம்பர், 2026

ஈரான் டேங்கர் மீது அமெரிக்கா தாக்குதல்

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நிலவி வரும் மோதல் போக்கு மீண்டும் உச்சத்தை எட்டியுள்ளது. குறிப்பாக ஈரானுக்கு எதிரான தனது ராணுவ நடவடிக்கைகளை அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ளது. 

ஈரான் தரப்பிலிருந்து நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பதிலடியாகவும், சர்வதேச கப்பல் போக்குவரத்தை பாதுகாப்பதாகவும் கூறி, அமெரிக்க ராணுவம் ஈரானின் பல்வேறு பகுதிகளை குறிவைத்து சுமார் 100-க்கும் மேற்பட்ட இலக்குகள் மீது சக்திவாய்ந்த வான்வழி தாக்குதல்களை நடத்தியுள்ளது. ஈரான் அரசுக்குச் சொந்தமான இரண்டு பெரிய எண்ணெய் டேங்கர் கப்பல்களும் இந்த தாக்குதல்களில் இலக்கு வைக்கப்பட்டு தாக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஹார்முஸ் ஜலசந்தி பகுதி யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது என்பதில் ஈரானும் அமெரிக்காவும் உடன்பாட்டை எட்டாமல் உள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் Tanker-for-Tanker என்ற கொள்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளார். அதாவது ஈரானின் ஒவ்வொரு தாக்குதலுக்கும் அந்த நாட்டின் டேங்கர் கப்பல்களை தாக்குவது என முடிவு செய்துள்ளது. 

ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில், ஈரானின் புரட்சிகர பாதுகாப்பு படை கடலில் கண்ணிவெடிகளை பதிக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. பந்தர் அப்பாஸ் துறைமுகத்திற்கு அருகில் உள்ள லாராக் தீவு பகுதியில், ஈரான் படையினர் கடல் கண்ணிவெடிகளை ஏற்றி செல்லும் ராக்கெட் லாஞ்சர்களை தயார்படுத்தி கொண்டிருந்தபோது அமெரிக்கப் படைகள் அவற்றை தாக்கி அழித்தன என தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 29,108 காவலர் பணியிடங்கள்-முதல்வர் விஜய்

தமிழகத்தில் புதிதாக 29,108 காவல் பணியிடங்கள் உருவாக்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்து உள்ளார். விரைவில் 10,000 காவலர்கள் நியமிக்கப்படுவர், இதில் 5,000 பெண் காவலர்கள் அடக்கம். 

காவல்துறையை நவீனமயமாக்க ரூ.212 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். காவல் நிலையங்களுக்கு சில்லறை செலவினம் உயர்த்தி வழங்கப்படும் எனவும் முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். 

ரூ.14 கோடியில் டிஎன்ஏ பரிசோதனை மையம் அமைக்கப்படும். 6 இடங்களில் புதிய தீயணைப்பு நிலையம் அமைக்கப்படும் எனவும் முதல்வர் விஜய் அறிவித்து உள்ளார்.

பாதாள குழுவினருக்கு மோட்டார் சைக்கிள் "போம்புவல சுத்தா" கைது.

பாதாள உலகச் செயற்பாடுகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களுக்கு மோட்டார் சைக்கிள்களை வழங்கியதாக சந்தேகிக்கப்படும் "போம்புவல சுத்தா" என்ற புனைப்பெயரில் அழைக்கப்படும் 30 வயதுடைய சந்தேகநபர் ஒருவரை களுத்துறை குற்றத்தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகொட சந்திப் பகுதியில் உள்ள கடையொன்றின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் திருடப்பட்டமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி (CCTV) காணொளிகள் மூலம் சந்தேகநபரை அடையாளம் கண்டுள்ளனர். 


பின்னர் களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் குழுவினர், போம்புவல பகுதியில் குறித்த மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற நிலையில் சந்தேகநபரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்படும் போது, குறித்த மோட்டார் சைக்கிளின் இலக்கத் தகட்டில் பதிவு இலக்கங்கள் மாறுபடும் வகையில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

மேலதிக விசாரணைகளின் போது, இவர் இங்கிரிய, இரத்தினபுரி மற்றும் கிரியெல்ல ஆகிய பொலிஸ் பிரிவுகளில் பல மோட்டார் சைக்கிள் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்பது தெரியவந்துள்ளது. 

இவ்வாறு திருடப்படும் மோட்டார் சைக்கிள்களை போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஏனைய குற்றச் செயல்களுக்காக பாதாள உலகக் குழுக்களுக்கு வழங்குவதற்கு இவர் செயற்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், களுத்துறை குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

புதன், 2 செப்டம்பர், 2026

இங்கிலாந்துக்கு மாணவர் விசா வீட்டை விற்று விமானம் ஏறுவதற்கு முன் !!

வீட்டை விற்று விமானம் ஏறாதீர்கள்—இங்கே வீடே இல்லாமல் போகலாம்! இங்கிலாந்துக்கு மாணவர் விசாவில் வர நினைப்பவர்களே… நான் இதைப் பொறாமையால் எழுதவில்லை. உங்கள் வெளிநாட்டுக் கனவை உடைப்பதற்காகவும் எழுதவில்லை. நான் நடந்த முட்பாதையில் நீங்கள்

வெறும் கால்களுடன் நடக்க வேண்டாம் என்பதற்காக எழுதுகிறேன்! 

நானும் இங்கிலாந்துக்கு மாணவர் விசாவில்தான் வந்தேன். திருமணமான பெண்ணாக, வயிற்றில் குழந்தையைச் சுமந்துகொண்டு எட்டு மாதங்கள் படித்தும் வேலை செய்தும் வாழ்ந்தேன். 

இன்று நான் சிரித்துக்கொண்டு நிற்பதைப் பார்த்துவிட்டு, “இவருக்கு எல்லாமே எளிதாகக் கிடைத்திருக்கும்!” என்று நினைக்காதீர்கள். இங்கு நான் எழுதுவது என் போராட்டத்தின் 20% மட்டுமே! மீதமுள்ள 80% பசி, கண்ணீர், அவமானம், ஏமாற்றம், தனிமை—இன்னும் என் மௌனத்திற்குள்ளேயே புதைந்திருக்கிறது! பேருந்து நிறுத்தத்தில் சாய்ந்திருந்த கர்ப்பிணி நான்! 

கர்ப்பகால வாந்தியால் (Morning Sickness) உடல் தளர்ந்து, பேருந்து நிறுத்தத்தில் நிற்கக்கூட முடியாமல், அங்கிருந்த கம்பத்தில் தலையைச் சாய்த்துக்கொண்டு பேருந்துக்காகக் காத்திருந்த நாட்களை இன்றும் மறக்கவில்லை. அதிகாலையில் வேலைக்குச் செல்வேன். காலை வேலை முடிந்ததும் பல்கலைக்கழகத்திற்குச் செல்லும் வழியில் பசியுடன் McDonald’s உணவகத்தில் உணவுக்காகக் காத்திருப்பேன். 

சில நாட்களில் அதுதான்— எனக்கும், என் வயிற்றில் வளர்ந்த குழந்தைக்கும் கிடைத்த முதல் உணவு! கையில் முதுகலைப் பட்டத்தின் கனவு இருந்தது; ஆனால் வயிற்றுக்குள் குழந்தையும், வயிற்றில் பசியும் ஒன்றாக இருந்தன!

 அங்கிருந்து பல்கலைக்கழகம்… வகுப்புகள் முடிந்ததும் மீண்டும் பிற்பகல் வேலை… இரவு வீட்டிற்குச் செல்லும்போது என் கால்கள் மட்டும் நடந்தன; என் உயிர் ஏற்கெனவே சோர்ந்து ஏதோ ஒரு பேருந்து நிறுத்தத்தில் அமர்ந்திருந்தது! ஆனாலும் படிப்பை விட்டுவிடவில்லை. என் குழந்தையைப் பெற்றெடுப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்புதான் என் முதுகலைப் பட்டப்படிப்பை (Master’s Degree) முடித்தேன். ஒரு கையில் கர்ப்பத்தின் வலி… மறுகையில் கல்வியின் கனவு… இரண்டையும் கீழே விழாமல் சுமந்துதான் என் பட்டத்தைப் பெற்றேன்! 

ஏழு மாதக் குழந்தையைப் பிரிந்து இரவுப் பணிக்குச் சென்றேன்! மாணவர் விசாவுக்குப் பிறகு எனக்கு வேலை அனுமதி (Work Permit) கிடைத்தது. என் குழந்தைக்கு ஏழு மாதங்கள் மட்டுமே இருந்தபோது, அவளை குழந்தைப் பராமரிப்பாளரிடம் (Childminder) விட்டுவிட்டு வேலைக்குச் சென்றேன்.

குழந்தைப் பராமரிப்புக் கட்டணம், வீட்டு வாடகை, உணவு, போக்குவரத்து—எல்லாவற்றையும் நாங்களே செலுத்தினோம். என் குழந்தையின் முகத்தைப் பார்த்துக்கொண்டிருக்க வேண்டிய இரவுகளில், அவளைப் பிரிந்து சென்று 12 மணிநேர நீண்ட இரவுப் பணிகள் செய்தேன். 

அவள் தூங்கும்போது நான் வேலை செய்தேன். அவள் விழித்திருக்கும்போது நான் சோர்ந்து தூங்கினேன். அவள் வளர்ந்த சில அழகான தருணங்களை வாழ்க்கைச் செலவும் விசா அழுத்தமும் என்னிடமிருந்து பறித்துக்கொண்டன! 12 மணிநேரம் வேலை செய்தாலும் சம்பளம் குறைவாகவே இருந்தது. 

ஆனால் குழந்தைப் பராமரிப்பாளருக்கு, “என்னிடம் பட்டம் இருக்கிறது; கட்டணத்தில் தள்ளுபடி செய்யுங்கள்!” என்று சொல்ல முடியுமா? வீட்டு உரிமையாளரிடம், “நான் கர்ப்பமாகப் படித்தேன்; இந்த மாத வாடகையை மன்னித்துவிடுங்கள்!” என்று கேட்க முடியுமா? 

இங்கிலாந்தில் மழை இலவசம்; வீட்டு வாடகை இலவசமல்ல! வாக்குறுதி கொடுத்த நிறுவனம் இறுதியில் கைவிட்டது! நான் வேலை செய்த நிறுவனம் வேலை விசாவுக்கான அனுசரணை (Sponsorship) வழங்குவதாக வாக்குறுதி அளித்தது. 

அதை நம்பி உண்மையாக உழைத்தேன். ஆனால் இறுதியில் தேவையான சுமார் £41,000 அளவிலான சம்பளத்தை வழங்க முடியாது என்று சொல்லிக் கைவிரித்துவிட்டார்கள். வாக்குறுதி கொடுத்தபோது அவர்களுக்கு என் உழைப்பு தேவைப்பட்டது,

வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டியபோது அவர்களுக்கு நான் தேவையில்லாமல் போனேன்! “கவலைப்படாதீர்கள்; நாங்கள் Sponsor செய்வோம்!” என்ற ஒரு வாக்கியம், எழுதப்பட்ட சட்ட ஆவணம் அல்ல. வாயால் வழங்கப்படும் சில வெளிநாட்டு வாக்குறுதிகள், விசா தேவைப்படும் நேரத்தில் காற்றோடு கரைந்துவிடும்! 

இன்றைய பொதுவான Skilled Worker Visa விதிகளின்படி, வேலை கிடைத்தால் மட்டும் போதாது. நிறுவனம் அங்கீகரிக்கப்பட்ட Licensed Sponsor ஆக இருக்க வேண்டும்; தகுதியான வேலை, Certificate of Sponsorship (CoS) மற்றும் தேவையான சம்பளம் இருக்க வேண்டும். பொதுவாக £41,700 அல்லது அந்த வேலைக்கான Going Rate—இரண்டில் எது அதிகமோ அதை எட்ட வேண்டும்.

 சில துறைகள் மற்றும் விண்ணப்பதாரர்களுக்கு விதிவிலக்குகள் உள்ளன. Skilled Worker Visa விதிகள் பட்டம் உங்களுக்குச் சான்றிதழைக் கொடுக்கலாம்; ஆனால் அந்தச் சான்றிதழே உங்களுக்கு Sponsorship கொடுக்காது! வேலை முடிந்ததும் ஒரு வயதுக் குழந்தையுடன் வீடு வீடாகச் சென்றேன்! 2011 முதல் 2013 வரை என் வழக்கமான வேலை முடிந்த பிறகும் என் நாள் முடிந்துவிடவில்லை.

அப்போது ஒரு வயதே ஆன என் மகளையும் அழைத்துக்கொண்டு பேருந்துகளிலும் ரயில்களிலும் பயணம் செய்து, மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று பாடம் கற்பித்தேன். ஒரு கையில் பாடப் புத்தகங்கள்… மறுகையில் என் குழந்தை… தோளில் அவளுக்குத் தேவையான பொருட்கள்… மனத்தில் எப்படியாவது முன்னேற வேண்டும் என்ற வைராக்கியம்! 

மழை, குளிர், பசி, தூக்கமின்மை—எதுவும் என்னை நிறுத்தவில்லை. மற்றவர்கள் தங்கள் குழந்தைகளைத் தூங்கவைக்கும் நேரத்தில், நான் என் குழந்தையைத் தூக்கிக்கொண்டு அடுத்த மாணவரின் வீட்டைத் தேடிப் பயணம் செய்தேன். 

அவள் அழுதால் சமாதானப்படுத்துவேன்; அவள் தூங்கினால் தோளில் சுமப்பேன்; மாணவர்களுக்குப் பாடம் கற்பிக்கும்போது என் மகளையும் அருகிலேயே வைத்திருப்பேன். அந்த நாட்களில் நான் ஒரு ஆசிரியையாக மட்டும் உழைக்கவில்லை— என் குழந்தையின் எதிர்காலத்தை உருவாக்குவதற்காகப் போராடிய ஒரு தாயாக உழைத்தேன்! என் வெற்றியின் பின்னால் அதிர்ஷ்டம் மட்டும் இல்லை. 

ஒரு வயதுக் குழந்தையின் சிறிய பாதங்களும், அவளைச் சுமந்து நடந்த ஒரு தாயின் வலித்த கால்களும் இருக்கின்றன! குறைந்தபட்சம் என் உழைப்பால் நான் ஏதோ ஒன்றைச் சாதித்தேன். ஆனால் நான் அடைந்த இடத்திற்குப் பின்னால், சமூக வலைத்தளத்தில் பதிவிடாத ஆயிரம் கண்ணீர்க் கதைகள் இருக்கின்றன. உங்கள் நாட்டின் பதவி விமானத்தில் உங்களுடன் வராது! உங்களில் சிலர் உங்கள் நாட்டில் அரசாங்க வேலை செய்திருக்கலாம்.

அலுவலக வாகனம், ஓட்டுநர், உதவியாளர், உயர்ந்த பதவி, சொந்த வீடு என்று வாழ்ந்திருக்கலாம். ஆனால் இங்கிலாந்து விமான நிலையத்தில் இறங்கும்போது, குடிவரவு அதிகாரி உங்கள் பழைய பதவிக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கமாட்டார்! உங்கள் நாட்டில் அலுவலக வாகனத்தில் சென்றவர், இங்கே அதிகாலை பேருந்து வராததால் மழையில் நின்று அழ வேண்டியிருக்கலாம். 

உங்கள் நாட்டில் பத்து பேருக்கு வேலை சொன்னவர், இங்கே ஒரு சிறிய வேலைக்காகப் பத்து நேர்முகத் தேர்வுகளுக்குச் செல்ல வேண்டியிருக்கலாம். உங்கள் நாட்டில் நீங்கள் பத்தாவது படியில் இருந்தாலும், இங்கே வாழ்க்கை உங்களைப் பூஜ்ஜியத்திலிருந்து தொடங்கச் சொல்லலாம். 

சிலருக்கு அந்த ஆரம்பம் பூஜ்ஜியம் கூட அல்ல— கடன், வாடகை, தனிமை, விசா அழுத்தம் ஆகியவற்றுடன் பூஜ்ஜியத்திற்கும் கீழிருந்து ஆரம்பிக்க வேண்டியிருக்கும்! உழைப்பு அவமானமல்ல. எந்த நேர்மையான வேலையும் தாழ்வானதல்ல. ஆனால் அந்த யதார்த்தத்தை அறியாமல், பெற்றோரின் வீட்டையும் நிலத்தையும் விற்று வருவது மிகப்பெரிய ஆபத்து. 

உங்கள் குடும்பம் வீட்டை விற்று உங்களை விமானத்தில் ஏற்றலாம்; ஆனால் இங்கே வந்த பிறகு உங்களுக்கு வீடு கிடைக்கும் என்று யாரும் உத்தரவாதம் தரமாட்டார்கள்! இங்கே பிறந்த பிள்ளைகளுக்குக்கூட வேலை கிடைப்பது எளிதல்ல! இங்கிலாந்திலேயே பிறந்து, இங்குள்ள பள்ளி மற்றும் பல்கலைக்கழகங்களில் படித்த பிள்ளைகளுக்குக்கூட படிப்புக்கேற்ற வேலை கிடைக்காமல் போராடுகிறார்கள். 

நூற்றுக்கணக்கான விண்ணப்பங்கள்… பல சுற்று நேர்முகத் தேர்வுகள்… அனுபவம் கேட்கும் நிறுவனங்கள்… அனுபவம் பெறுவதற்கே வேலை தர மறுக்கும் இன்னொரு உலகம்! 

பட்டம் உங்களை நேர்முகத் தேர்வின் வாசல்வரை அழைத்துச் செல்லலாம். ஆனால் அந்த வாசலைத் திறப்பது உங்கள் திறமை, அனுபவம், தொடர்பாடல், நற்சான்றுகள், நேர்முகத் தேர்வு மற்றும் மீண்டெழும் மனவலிமை (Resilience) ஆகியவையே. வேலை கிடைத்தாலும் கதை முடிந்துவிடாது. பணிச்சுமை, மொழி, கலாசாரம், தனிமை, குடும்பப் பிரிவு, குழந்தைப் பராமரிப்பு மற்றும் விசா அழுத்தங்களைச் சமாளிக்கும் மனவலிமை வேண்டும். 

CV-யில் பட்டங்கள் நிறைய இருக்கலாம்; ஆனால் பசித்த வயிறு “Certificate” கேட்காது— “Sandwich எங்கே?” என்றுதான் கேட்கும்! மாணவர் விசா என்பது முழுநேர வேலை விசா அல்ல! பட்டப்படிப்பு மட்டத்திலான முழுநேர மாணவர்களுக்கு கல்விக்காலத்தில் பொதுவாக வாரத்திற்கு 20 மணிநேர வேலை மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. 

மாணவர் விசாவில் சுயதொழில் பொதுவாக அனுமதிக்கப்படுவதில்லை. உங்கள் விசாவில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளே இறுதியானவை. Student Visa வேலை விதிகள் படிப்பை முடித்த பின் கிடைக்கும் Graduate Visa நிரந்தர விசா அல்ல. 31 டிசம்பர் 2026க்குள் விண்ணப்பித்தால் இரண்டு ஆண்டுகள்; 1 ஜனவரி 2027 முதல் விண்ணப்பித்தால் 18 மாதங்கள்; முனைவர் பட்டதாரிகளுக்கு மூன்று ஆண்டுகள். 

இதை நீட்டிக்க முடியாது; தொடர்ந்து தங்க வேறு தகுதியான விசாவுக்கு மாற வேண்டும். Graduate Visa விதிகள் “இரண்டு ஆண்டுகள் இருக்கின்றன; மெதுவாக வேலை தேடலாம்!” என்று நினைக்காதீர்கள். விசா நாட்காட்டி மெதுவாக நகராது; அது ஓடிக்கொண்டே இருக்கும். வேலை தேடுதல், நேர்முகத் தேர்வு, அனுசரணை மற்றும் விசா விண்ணப்பம்—எல்லாவற்றுக்கும் நேரம் தேவை.

 மருத்துவர், செவிலியர் என்றாலும் நேரடியாக வேலை கிடைக்காது! “நான் என் நாட்டில் மருத்துவர்; இங்கிலாந்து சென்ற மறுநாள் மருத்துவமனையில் வேலை கிடைத்துவிடும்” என்று நினைக்காதீர்கள். வெளிநாட்டில் மருத்துவம் படித்த பல மருத்துவர்கள் தங்களின் தகுதி மற்றும் பதிவு வழியைப் பொறுத்து GMC Registration, ஆங்கில மொழித் தகுதி மற்றும் PLAB 1, PLAB 2 போன்ற தேர்வுகளை முடிக்க வேண்டியிருக்கலாம். 

எல்லோருக்கும் ஒரே பாதை இல்லை; ஆனால் UK, EEA மற்றும் Switzerlandக்கு வெளியே படித்த பலருக்கு PLAB தேவைப்படலாம். GMC–PLAB வழிகாட்டுதல் மருத்துவர் அல்லது செவிலியராகப் பணியாற்ற அனைவரும் IELTS 8.5 பெற வேண்டும் என்பது சரியல்ல. மருத்துவர்களுக்கான பொதுவான GMC IELTS வழியில் ஒவ்வொரு பிரிவிலும் குறைந்தது 7.0 மற்றும் மொத்தமாக 7.5 தேவைப்படலாம்.

 OET Medicine போன்ற வேறு ஆதாரங்களும் ஏற்கப்படுகின்றன. GMC ஆங்கில மொழித் தகுதி வெளிநாட்டில் பயிற்சி பெற்ற செவிலியர்கள் NMC Registration பெற வேண்டும். IELTS வழியில் Listening, Reading, Speaking ஆகியவற்றில் பொதுவாக 7.0 மற்றும் Writing-இல் 6.5 தேவை; OET வழியும் உள்ளது. NMC–IELTS விதிகள் ஆகவே மருத்துவப் பட்டம் கையில் இருப்பதால் மட்டும் மறுநாள் கழுத்தில் ஸ்டெதஸ்கோப் தொங்கிவிடாது! 

மொழித் தகுதி, தொழில்முறைப் பதிவு, தேர்வுகள், ஆவணங்கள், நற்சான்றுகள், அனுபவம் மற்றும் நேர்முகத் தேர்வு—எல்லாவற்றையும் கடந்துதான் வேலை கிடைக்கும். மற்றவர் விதியை மீறுகிறார் என்பதால் நீங்களும் பின்பற்றாதீர்கள்! உறவினர்கள் இல்லாமலேயே சிலர் முழுநேரம் வேலை செய்வதையும், படிப்புக்குச் சரியாகச் செல்லாமல் இருப்பதையும் நீங்கள் பார்க்கலாம்.

 “அவர் செய்கிறார்; அவருக்கு ஒன்றும் நடக்கவில்லை; நானும் செய்யலாம்!” என்று நினைக்காதீர்கள். பல்கலைக்கழகங்கள் மாணவர்களின் கல்வி ஈடுபாட்டைக் கண்காணிக்க வேண்டும். ஒருவர் பதிவு செய்யவில்லை, படிப்பை நிறுத்தினார் அல்லது தொடர்ந்து கல்வியில் ஈடுபடவில்லை என்றால், விசா அதிகாரிகளுக்குத் தெரிவிக்க வேண்டிய சூழல் ஏற்படலாம். Student Sponsor கடமைகள் அதேபோல், “வேலை விசா கிடைக்காவிட்டால் புகலிடம் (Asylum) கோரிவிடலாம்!” என்று நினைக்காதீர்கள். 

தங்கள் நாட்டிற்குத் திரும்பும்போது துன்புறுத்தல் அல்லது கடுமையான ஆபத்து ஏற்படும் உண்மையான பாதுகாப்புத் தேவை உள்ளவர்களுக்கான சட்டப் பாதுகாப்புதான் புகலிடம். அது மாணவர் விசாவுக்கான மாற்றுத் திட்டமோ, வேலை அனுமதி பெறும் குறுக்குவழியோ அல்ல. UK Asylum வழிகாட்டுதல் உண்மையான ஆபத்திலிருந்து தப்பி வருபவர்களை நாம் அவமதிக்கக்கூடாது. அதேநேரம், பாதுகாப்பு தேவையில்லாமல் அந்த முறையைப் பயன்படுத்தலாம் என்றும் நினைக்கக்கூடாது. 

தயவுசெய்து யோசித்து வாருங்கள்! உறவினர் அல்லது நம்பகமான ஆதரவு வட்டம் இல்லாமல் வருவதற்கு முன் நூறு தடவை சிந்தியுங்கள். அவசரத்தில் தங்குவதற்கு இடம் இருக்கிறதா? வேலை கிடைக்காவிட்டால் உணவுக்கு பணம் இருக்கிறதா? நோயுற்றால் உதவ ஒருவர் இருக்கிறாரா? உங்கள் படிப்புக்கு உண்மையான வேலைவாய்ப்பு இருக்கிறதா? அந்தத் துறையில் அனுசரணை வழங்கும் நிறுவனங்கள் எத்தனை? ஆறு மாதங்கள் வருமானமின்றி வாழ முடியுமா? நாடு திரும்ப வேண்டியிருந்தால் அதை ஏற்றுக்கொள்ள முடியுமா?

பல்கலைக்கழகம் இடம் கொடுத்துவிட்டது என்பதால், இங்கிலாந்து உங்களுக்கு வேலை வழங்கக் கடமைப்பட்டதல்ல. வங்கி இருப்பு பனிக்கட்டி போல— வாடகை, கட்டணம், போக்குவரத்து, உணவு என்று ஒவ்வொரு மாதமும் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்துவிடும்! இங்கிலாந்து வாய்ப்புகளின் நாடாக இருக்கலாம்; ஆனால் வெற்றியைத் தட்டில் வைத்து வழங்கும் உணவகம் அல்ல! நான் உங்களை வரவேண்டாம் என்று சொல்லவில்லை. திட்டமின்றி வராதீர்கள் என்றுதான் சொல்கிறேன். 

கனவுடன் வாருங்கள்—ஆனால் கண்களை மூடிக்கொண்டு வராதீர்கள். பட்டத்துடன் வாருங்கள்—அதற்கான அனுபவத்தையும் வளர்த்துக்கொண்டு வாருங்கள். பணத்துடன் வாருங்கள்—அது தீர்ந்தால் என்ன செய்வது என்ற மாற்றுத் திட்டத்துடனும் வாருங்கள். உறவினர் இல்லாவிட்டால், குறைந்தபட்சம் நம்பகமான ஆதரவு வட்டத்தை ஏற்படுத்திக்கொண்டு வாருங்கள். 

உங்கள் நாட்டில் நீங்கள் எவ்வளவு உயர்ந்த பதவியில் இருந்தாலும், இங்கே நீங்கள் தொடங்கும் இடம் பூஜ்ஜியமாக இருக்கலாம். சில நேரங்களில்— கடன், பசி, தனிமை, விசா அழுத்தத்துடன் பூஜ்ஜியத்திற்கும் கீழே இருக்கலாம்! நான் பேருந்து நிறுத்தத்தில் தலையைச் சாய்த்து நின்ற வலியை நீங்கள் அனுபவிக்க வேண்டாம் என்பதற்காக எழுதுகிறேன். ஏழு மாதக் குழந்தையைப் பிரிந்து, 12 மணிநேர இரவுப்பணி செய்த கண்ணீரை நீங்கள் சிந்த வேண்டாம் என்பதற்காக எழுதுகிறேன். 

ஒரு வயதுக் குழந்தையைச் சுமந்துகொண்டு, வேலை முடிந்த பின்னரும் வீடு வீடாகச் சென்று கற்பித்த களைப்பை நீங்கள் சந்திக்க வேண்டாம் என்பதற்காக எழுதுகிறேன். வாக்குறுதிகளை நம்பி உழைத்து, கடைசியில் கைவிடப்பட்ட ஏமாற்றத்தை நீங்கள் அனுபவிக்க வேண்டாம் என்பதற்காக எழுதுகிறேன். நான் இங்கே எழுதியது என் போராட்டத்தின் 20% மட்டுமே— மீதமுள்ள 80% இன்னும் என் மௌனத்திற்குள்ளேயே இருக்கிறது! வீட்டை விற்று விமானம் ஏறுவதற்கு முன் சிந்தியுங்கள்… இங்கே வந்து வீடே இல்லாமல் போகாதீர்கள்

இங்கிலாந்தின் சட்டவிரோதக் கழிவுப் பிரச்சினையைச் சமாளிப்பதற்கான திட்டம்

"பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளியில் விட்டுவிட்டு, அந்த நாற்றத்தால் வாந்தி எடுத்தார்கள்,அது பிணங்களின் வாடையைப்போல இருந்தது." என்கிறார் மேற்கு யார்க்ஷயரில் உள்ள பிராட்போர்டில் 'பிளெஸ்ஸிங்ஸ் நர்சரி'யை நடத்தும் 45 வயதான லிஸ் தாம்சன்.

 சமீபத்திய கடும் வெப்ப அலைகளின் போது, ​​நர்சரியிலிருந்து சில மீட்டர் தொலைவில் உள்ள மிட்லாண்ட் சாலையில் இருந்த ஒரு சட்டவிரோத கழிவுக் கிடங்கிலிருந்து வந்த நாற்றம் தாங்க முடியாத அளவுக்கு அதிகமானதால், ஊழியர்கள் கதவுகளையும் ஜன்னல்களையும் மூடியே வைத்திருக்க வேண்டியிருந்தது, 

மேலும் குழந்தைகளால் வெளியே விளையாடவும் முடியவில்லை. "அது இறந்தவர்களின் நாற்றம் போலவும், மிகவும் கெட்டுப்போன உணவின் நாற்றம் போலவும் இருந்தது. 

அது பயங்கரமாக இருந்தது," என்கிறார் அவர். வாரக்கணக்கில் நீடித்த அந்த நாற்றம், தாம்சனின் தொழிலைப் பாதிக்கத் தொடங்கியது. இதனால், வருங்காலப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை நர்சரியில் சேர்ப்பதில் இருந்து பின்வாங்கினர்.

 "அது சங்கடமாக இருந்தது," என்கிறார் அவர்.தாம்சன் எதிர்கொண்ட நிலைமை ஒரு தனிப்பட்ட நிகழ்வு அல்ல. 2025-ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் சந்தேகிக்கப்படும் கழிவுக் குற்றங்கள் குறித்து சுற்றுச்சூழல் முகமை 10,238 புகார்களைப் பெற்றது. யார்க்ஷயர் ஒரு குறிப்பிட்ட முக்கிய மையமாக உள்ளது; ஒரு புதிய வெப்ப வரைபடம் 2025-ஆம் ஆண்டில் 1,068 புகார்களைக் காட்டுகிறது. 

இது, சாதனை அளவாக 1,542 கழிவுக் குற்றப் புகார்கள் பதிவு செய்யப்பட்ட மேற்கு மிட்லாண்ட்ஸுக்கு அடுத்தபடியாக உள்ளது. இந்தக் புள்ளிவிவரங்கள் அநேகமாக குறைத்து மதிப்பிடப்பட்டிருக்கலாம், ஏனெனில் கழிவுக் குற்றங்களில் வெறும் 27% மட்டுமே புகாரளிக்கப்படுவதாகக் கருதப்படுகிறது. இது பொதுமக்களைப் பெரிதும் கவலைக்குள்ளாக்கும் ஒரு பிரச்சனையாகும்.

மேலும், பிரதமராகப் பதவியேற்ற தனது முதல் நடவடிக்கைகளில் ஒன்றாக, ஆண்டி பர்ன்ஹாம் மிட்லாண்ட் சாலைக் கழிவுக் கிடங்கைப் பார்வையிட்டு, "கழிவுகளிலிருந்து எளிதாகப் பணம் சம்பாதிக்கும் நாட்கள் முடிந்துவிட்டன" என்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

துர்நாற்றம் வீசுவதாக வந்த புகார்களைத் தொடர்ந்து ஜூன் மாதத்தில் பிராட்ஃபோர்ட் கவுன்சில் மற்றும் சுற்றுச்சூழல் முகமையின் கவனத்திற்கு வந்த இந்தக் குப்பை மேடு, பல மாதங்களாகவே உருவாகி வந்திருந்தது. 

நள்ளிரவு மற்றும் அதிகாலை வேளைகளில் கனரக சரக்கு வாகனங்கள் அந்த இடத்திற்கு வந்து கொண்டிருந்தன; அங்குள்ள ஒரு பெரிய அகழ்வு இயந்திரம் (excavator) ஆயிரக்கணக்கான டன் கழிவுகளை இறக்கி கொட்டி வந்தது.

தூத்துக்குடி அருகே பெண் கொலை காவலர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே முடிவைத்தானேந்தலில் பெண் வெட்டி கொல்லப்பட்ட வழக்கில் காவலர் முத்துக்குமார் கைது செய்யப்பட்டார். தூத்துக்குடி அருகே முடிவைத்தானேந்தல் கிராமத்தில் பிரியா என்னும் பெண் ஜெராக்ஸ் (Xerox) கடை நடத்தி வருகிறார்.

இவரது சகோதரி முத்து லட்சுமி கடைக்கு வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த காவலர் முத்துக்குமார் என்பவர்பிரியாவின் தங்கையான முத்துலட்சுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. காவலர் முத்துக்குமார் தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் காவல் நிலையத்தில் பணிபுரிகிறார். 

இந்நிலையில் பிரியாவின் தங்கையான முத்துலட்சுமியிடம் அவரது நகையை வாங்கி அடமானம் வைத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த நகையை திருப்பி தருமாறு முத்துகுமாரிடம் கேட்டுள்ளனர். முத்துக்குமார் அந்த நகையை திருப்பி தருவதற்கு காலதாமதம் செய்து வந்த நிலையில் நேற்று இரவு பிரியா நடத்தி வரக்கூடிய ஜெராக்ஸ் கடையில் முத்துக்குமார் வந்தார். 

மேலும் முத்துக்குமாருக்கும் பிரியாவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.இந்த நிலையில் ஆத்திரமடைந்த காவலர் முத்துக்குமார், அருகே இருந்த கம்பியால் அடித்தும் அரிவாளால் வெட்டியும் பிரியாவைக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். 

இதுகுறித்து புதுக்கோட்டை காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்படவே, அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சம்பவ இடத்திலேயே பிரியா உயிரிழந்ததை அறிந்த காவல்துறையினர், முத்துக்குமாரைக் கைது செய்ய முயன்றபோது அவர் தலைமறைவாகியிருப்பது தெரியவந்தது. 

 மேலும் இறந்த பிரியாவின் உடலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணையில் ஈடுபட்ட போலீசார் தற்போது இன்று காலை முத்துக்குமாரை முடிவைத்தானேந்தல் பகுதியில் பதுங்கி இருப்பது கண்டறிந்து அவரை கைது செய்து தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

96 அமெரிக்க டொலர்களை தாண்டிய கச்சா எண்ணெய்

2026 ஜூன் 8 ஆம் திகதிக்குப் பின்னர் முதன்முறையாக பிரென்ட் கச்சா எண்ணெய் பெரல் ஒன்றுக்கு 96 அமெரிக்க டொலர்களை கடந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 2.19% உயர்ந்து, பெரல் ஒன்றுக்கு $ 96.13 டொலரை எட்டியுள்ளது. இது முந்தைய விலை விட 1.96% அதிகமாகும். மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் பதற்றம், ஹோர்முஸ் ஜலசந்தி வழியிலான கப்பல் போக்குவரத்தில் ஏற்படும் தடைகள் மற்றும் பாரசீக வளைகுடா நாடுகளில் இருந்து எண்ணெய் விநியோகம் குறைதல் ஆகியவற்றின் காரணமாக, நடப்பு ஆண்டின் நான்காவது காலாண்டில் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை பெரல் ஒன்றுக்கு 120 டொலரைக் கடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அதேவேளை, உக்ரைன் மற்றும் பாரசீக வளைகுடா பகுதிகளில் நிலவும் மோதல்கள், உலகளாவிய பெட்ரோல் மற்றும் டீசல் எரிபொருள் சந்தையில் பேரழிவு அபாயத்தை அதிகரித்து வருவதாக ரொய்ட்டர் செய்தி நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Thank You Google

Thank You Google
Thanks