புதன், 26 ஆகஸ்ட், 2026

தமிழகத்தில் அதிகரிக்கும் பன்றிக்காய்ச்சல்.

தமிழ்நாட்டில் பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவும் நிலையில் சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. ஜனவரியில் 19 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருந்த நிலையில் தற்போது 339 பேராக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் H1N1 பன்றிக் காய்ச்சல் பொதுமக்களிடையே தீவிரமடைவதாகச் சுகாதாரத்துறை அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. 

குறிப்பாக, பருவமழை தீவிரமடைவதற்கு முன்பாகவே H1N1 வகை பன்றிக் காய்ச்சல் தொற்று மிக வேகமாகப் பரவி வருவதாக தெரிவித்துள்ளது. டெல்லியைத் தொடர்ந்து தற்போது தமிழகத்திலும் இதன் தாக்கம் அதிகரித்து வருவதாகப் பொதுச் சுகாதாரத்துறையும் மத்தியச் சுகாதாரத்துறையும் இணைந்து முக்கிய வழிகாட்டுதல்களையும் எச்சரிக்கைகளையும் வெளியிட்டுள்ளன. 

 குறிப்பாக தமிழ்நாட்டில் கடந்த ஜனவரி மாதத்தில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு 19 ஆக இருந்த நிலையில், தற்போது கிட்டத்தட்ட 339 ஆக உயர்ந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இதன் காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பன்றிக்காய்ச்சல் வார்டுகளில் நோயாளிகளின் வருகையும் கணிசமாக அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். மாவட்ட செயலகத்தில் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வு

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில், காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் ஏற்பாட்டில் நிகழ்வு நடைபெற்றன. 

 மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (25) பிற்பகல் 2 மணிக்கு குறித்த நிகழ்வு இடம்பெற்றன. இந்நிகழ்வில் நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நானாயக்கார, கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பாராளுமறன்ற உறுப்பினர்களான க. இளங்குமரன், ச பவானந்தராசா மற்றும் ரஜீவன் ஜெயசந்திரமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர். 

நிகழ்வின் ஒரு அங்கமாக பயனாளிகளுக்கு மூக்கு கண்ணாடிகளும் வழங்கி வைக்கப்பட்டன. கடந்த வருடங்களில் இந்நிகழ்வு அலரி மாளிகையிலும், கொம்பனித்தெரு ஞாபகார்த்த மண்டபத்திலும் நடைபெற்றிருந்த நிலையில், இம்முறை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. 

அதேவேளை, சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான ஆகஸ்ட் 30 ஆம் திகதி வடக்கு - கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் சர்வதேச மாநாடும் , கண்காட்சியும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் வைத்தியசாலை தீ விபத்தில் 15 பச்சிளம் குழந்தைகள் பலி!

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான ‘பாகிஸ்தான் வைத்திய அறிவியல் கழக’ (PIMS) வைத்தியசாலையின் மகப்பேறு பிரிவில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் புதிதாகப் பிறந்த 15 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளனர்.

ஏர் கண்டிஷனர் (AC) அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து நடந்த போது அந்தப் பிரிவில் 16 குழந்தைகள் இருந்த நிலையில், ஒரு குழந்தை மட்டுமே பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது. தீயை அணைக்கும் பணிகள் நிறைவடைந்து, தற்போது புகையைக் கட்டுப்படுத்தும் பணிகள் நடந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2026

அதிகாலையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட "பஸ் லலித்"

டுபாயில் கைது செய்யப்பட்ட திட்டமிட்ட குற்றக் குழு உறுப்பினரான "பஸ் லலித்" எனப்படும் லலித் கன்னங்கர, மேலதிக விசாரணைகளுக்காக மத்திய குற்ற விசாரணைப் பணியகத்திடம் (CCIB) ஒப்படைக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. இன்று (25) காலை சுமார் 5.20 மணியளவில், டுபாயிலிருந்து சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-226 மூலம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு (BIA) கொண்டுவரப்பட்டார். 

இந்தநிலையில், மேலதிக விசாரணைகளுக்காக பலத்த பாதுகாப்புடன் அவர் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்குக் கொண்டு செல்லப்படுவதற்கு முன்பு, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) அதிகாரிகள் அவரிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

டுபாயில் கைது செய்யப்பட்ட திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான லலித் கன்னங்கர என்ற 'பஸ் லலித்' இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். 

 இன்று (25) அதிகாலை குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளின் குழுவொன்றினால் அவர் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விடயத்தை காவல்துறை ஊடகப் பேச்சாளர் உதவி காவல்துறை அத்தியட்சகர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.

களுத்துறை தெற்கு பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதான இந்த சந்தேகநபருக்கு எதிராக இன்டர்போல் சர்வதேச சிவப்பு எச்சரிக்கையும் (Red Notice) விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.'பஸ் லலித்' என அறியப்படும் சந்தேக நபர் சமீபத்தில் டுபாய் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டிருந்தார். 

பஸ் லலித்' மீது மனிதக்கொலை, குற்றச்செயல்கள் மற்றும் கப்பம் கோருதல் போன்ற பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட சந்தேகநபர் குறித்து குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. 

அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பில் மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினால் சிவப்பு எச்சரிக்கை பெறப்பட்டுள்ளதுடன், கொலைக் குற்றத்திற்காக நீதிமன்றத்தில் முன்னிலையாகாத குற்றத்திற்காக கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் இவருக்கு எதிராகத் திறந்த பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் 130 புதிய ஏசி மின்சார பேருந்துகள்-முதல்வர் விஜய்

சென்னையில் புதிதாக 130 தாழ்தள குளிர்சாதன மின்சாரப் பேருந்துகள் சேவையை முதல்வர் விஜய் தொடக்கி வைத்தார். சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் நடைபெற்ற தொடக்க நிகழ்வில் கலந்துகொண்ட முதல்வர் விஜய், மொத்தம் 250 புதிய பேருந்துகளின் சேவைகளை கொடியசைத்து தொடக்கி வைத்தார். சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்துக்காக ரூ. 134.50 கோடியில் வாங்கப்பட்ட 130 தாழ்தள குளிர்சாதன மின்சாரப் பேருந்துகளை முதல்வர் விஜய் கொடியசைத்து தொடக்கி வைத்த பின், பேருந்தில் ஏறி ஆய்வு செய்தார். 

130 புதிய ஏ.சி. மின்சார பேருந்துகள் ஆலந்தூர், பெரம்பூர், ஆவடி, சென்ட்ரல், பாடியநல்லூர், கேகே நகர், அய்யப்பன்தாங்கள் உள்ளிட்ட பணிமனைகளில் இருந்து இயக்கப்படுகிறது. இதேபோல், சேலம், விழுப்புரம், மதுரை, கோவை, நெல்லை ஆகிய மாவட்டங்களின் பயன்பாட்டிற்காக ரூ. 55.58 கோடியில் வாங்கப்பட்ட 120 புதிய சாதாரண பேருந்துகளின் சேவையையும் சேர்த்து மொத்தம் 250 புதிய பேருந்துகளின் சேவைகளை தொடக்கிவைக்கப்பட்டது.

குழந்தைகள் பாதுகாப்பிற்கு வைத்தியர் அறிவுரை!

தற்போது நிலவும் அதிக வெப்பமான வானிலை மற்றும் பாடசாலை விடுமுறை காலத்தைக் கருத்தில் கொண்டு, பிள்ளைகளின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்து பெற்றோர்கள் மிகுந்த அவதானத்துடன் செயல்பட வேண்டும் என விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா சுட்டிக்காட்டுகின்றார். 

இந்த நாட்களில் நிலவும் அதிக வெப்பம் காரணமாக பிள்ளைகள் நீரிழப்பு நிலைக்கு உள்ளாகும் அதிக அபாயம் காணப்படுவதாக அவர் குறிப்பிடுகிறார். நீண்ட நேரம் அதிக வெயிலில் விளையாடுவதால் உடலுக்குக் கடுமையான பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பதுடன், சில சந்தர்ப்பங்களில் அதிர்ச்சி நிலைகள் ஏற்படுவதுடன் இதயம் மற்றும் மூளைக்குக்கூட பாதிப்புகள் ஏற்படக்கூடும் என வைத்தியர் எச்சரிக்கிறார். 

தலைவலி, வாந்தி, உடல் வலி, மயக்க நிலை/தூக்கக் கலக்கம், அசௌகரியம், பசியின்மை மற்றும் சிறுநீர் அடர் நிறமாக மாறுதல் என்பன நீரிழப்பின் ஆரம்ப அறிகுறிகளாகும் என்பதால், வெளியில் விளையாடும் பிள்ளைகளுக்குப் போதுமான அளவு நீரைக் கொடுப்பது அத்தியாவசியமானதாகும்.

நீருக்கு மேலதிகமாகக் இளநீர், ஜீவனி, எலுமிச்சை, நாரத்தை, மாம்பழம், மாதுளைச் சாறு, கஞ்சி மற்றும் சூப் போன்ற இயற்கை திரவ உணவுகளைப் பிள்ளைகளுக்கு வழங்குவது முக்கியம் என அவர் சுட்டிக்காட்டுகிறார். 

சூரியன் உச்சிக்கு வரும் வேளைகளில் எளிய பருத்தி ஆடைகளை அணிவித்தல், தொப்பி பயன்படுத்துதல் மற்றும் மர நிழல் போன்ற குளிர்ந்த இடங்களில் ஓய்வெடுத்தல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் என வைத்தியர் கூறுகிறார். 

இதேவேளை, விடுமுறை காலம் என்பதால் வீடுகளில் அதிக நேரம் தங்கியிருக்கும் பிள்ளைகள் குறித்துப் பெற்றோர்கள் இதைவிடவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா வலியுறுத்துகிறார்.

திங்கள், 24 ஆகஸ்ட், 2026

Starlink மூலம் ரஷ்யாவுக்குள் தாக்குதல் நடத்த உக்ரைனுக்கு அனுமதி மறுப்பு

உக்ரைன், Elon Musk-ன் SpaceX நிறுவனத்தின் Starlink செயற்கைக்கோள் தொடர்பு சேவையைப் பயன்படுத்தி ரஷ்ய எல்லைக்குள் ஆழமான இராணுவத் தாக்குதல்களை மேற்கொள்ள அனுமதி கோரியிருந்த நிலையில், அந்தக் கோரிக்கையை Musk நிராகரித்ததாக உக்ரைன் ஜனாதிபதி Volodymyr Zelenskyy தெரிவித்துள்ளார். 

Zelenskyy வெளியிட்ட தகவலின்படி, உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் முன்னதாக Starlink-ஐ ரஷ்யப் பகுதிக்குள் பயன்படுத்த SpaceX ஒப்புதல் அளித்துள்ளதாக அவரிடம் தெரிவித்திருந்தது. இதன் அடிப்படையில் அவர் அமெரிக்க ஜனாதிபதி Donald Trump-ிடம் இந்த விவகாரத்தை எடுத்துச் சென்றதாகவும் கூறியுள்ளார். 

ஆனால் பின்னர் Trump, Musk அந்தத் திட்டத்தை நிராகரித்துவிட்டதாக தமக்குத் தெரிவித்ததாக Zelenskyy கூறியுள்ளார்.

 Musk இந்த நடவடிக்கை போரை மேலும் தீவிரப்படுத்தக்கூடிய ஆபத்தான நடவடிக்கை எனக் கருதியதாகவும் Zelenskyy தெரிவித்துள்ளார். இந்த விவகாரம், உக்ரைன் போரில் Starlink தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தையும், ஒரு தனியார் தொழில்நுட்ப நிறுவனத்தின் செயற்கைக்கோள் வலையமைப்பு இராணுவ நடவடிக்கைகளில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதையும் மீண்டும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. 

குறிப்பாக, 2022ஆம் ஆண்டிலும் ரஷ்ய ஆக்கிரமிப்பிலுள்ள கிரிமியா அருகே உக்ரைன் மேற்கொள்ளத் திட்டமிட்ட கடற்படை ட்ரோன் தாக்குதலுக்கு Starlink சேவையைச் செயல்படுத்துமாறு கேட்டபோது Musk மறுத்திருந்தார். 

அந்த நேரத்தில் தாக்குதல் போரை பெரிய அளவில் தீவிரப்படுத்தக்கூடும் என்ற கவலை அவருக்கு இருந்ததாக பின்னர் வெளியான தகவல்கள் தெரிவித்தன.

Thank You Google

Thank You Google
Thanks