சனி, 19 ஜூலை, 2025

அமெரிக்காவின் ஓரிகான் கடலுக்கடியில் வெடிக்க தயாராகும் எரிமலைகள்!!

நீருக்கடியில் உள்ள எரிமலைகள் எந்த நேரத்திலும் வெடிக்கக்கூடும் என்பதே அந்த எச்சரிக்கையின் முக்கிய அம்சம். அமெரிக்காவின் ஓரிகான் கடற்கரையில் இருந்து 300 மைல் தொலைவில் உள்ள ஆக்சியல் சீமவுண்ட் எரிமலை குறித்து, அவ்வாறு ஒரு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த எரிமலை வெப்பமடைந்து வருவதாகவும், அடுத்த ஆண்டுக்குள் வெடிக்கும் அறிகுறிகளை காட்டுவதாகவும், நிபுணர்கள் கூறுகின்றனர். 

கிரேக்கத் தீவான சாண்டோரினியில் ஏற்பட்ட சமீபத்திய நிலநடுக்கங்கள், அங்குள்ள கால்டெரா (பெரிய எரிமலைப் பள்ளம்) மற்றும் அதற்கு அருகிலுள்ள கொலம்போ எனும் நீருக்கடியில் உள்ள எரிமலையைப் பற்றி ஆராய விஞ்ஞானிகளைத் தூண்டியுள்ளன.பூமியின் மேலோட்டத்தில் உள்ள திறப்புகள் தான் எரிமலைகள் எனப்படுகின்றன. இவை சூடான சாம்பல், வாயுக்கள், மற்றும் மாக்மா எனப்படும் உருகிய பாறைகளை வெளியேற்றுகின்றன. பொதுவாக, எரிமலைகள் மவுண்ட் வெசுவியஸ் அல்லது மவுண்ட் எட்னா போன்ற மாபெரும் மலைகளாகக் கருதப்படுகின்றன. 

இவை கண்ணைக் கவரும் வகையில் ஆரஞ்சு நிற எரிமலைக்குழம்பை வெளியேற்றுகின்றன. ஆனால், பூமியில் உள்ள எரிமலைகளில் மூன்றில் இரண்டு பங்கு கடலுக்கு அடியில் உள்ளன என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். கடலின் ஆழத்தில், சில நேரங்களில் ஆயிரக்கணக்கான மீட்டர் கீழே மறைந்திருக்கும் இந்த எரிமலைகள், அறியப்படாத உயிரினங்களுக்கு வாழ்விடமாய் உள்ளன. 

மேலும், இவை வெடித்த பிறகு புதிய தீவுகளை உருவாக்குகின்றன.நிலத்தில் உள்ள எரிமலைகளைப் போலவே, நீருக்கடியில் உள்ளவையும் நிலநடுக்கங்கள் மற்றும் சுனாமிகளை ஏற்படுத்தலாம். இவை சில சமயங்களில் பெரிய விளைவுகளையும் உருவாக்குகின்றன. 2022-ல், டோங்காவில் உள்ள ஹங்கா-டோங்கா ஹங்கா-ஹாபாய் எரிமலை வெடித்து, பசிபிக் பெருங்கடலில் சுனாமியை ஏற்படுத்தியது.

இதன் அலைகள் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான், மற்றும் வடக்கு மற்றும் தென் அமெரிக்காவின் மேற்கு கடற்கரைகளை எட்டின. அதில் மூன்று பேர் உயிரிழந்தனர், நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன. மேலும், நீர்மூழ்கி இணைய கேபிள் துண்டிக்கப்பட்டதால், ஐந்து வாரங்களுக்கு உலகத்துடனான தொடர்பை டோங்கா இழந்தது.

நீருக்கடியில் உள்ள எரிமலைகள், பூமியின் வெளிப்புற அடுக்கான பெரிய டெக்டோனிக் தகடுகள் இருக்கும் இடங்களில் உருவாகின்றன. இந்த தகடுகள், ஒன்றையொன்று விலகிச்செல்லும்போது, அல்லது ஒன்றையொன்று சறுக்கிச்செல்லும்போது , பூமியின் ஆழத்தில் இருக்கும் மாக்மா மேலே எழுவதற்கான இடம் உருவாகிறது. 

இந்த டெக்டோனிக் தகடுகள் உலகம் முழுவதையும் உள்ளடக்கியவை. எனவே, நீருக்கடியில் உள்ள எரிமலைகள் அட்லாண்டிக், பசிபிக் பெருங்கடல்கள் முதல் மத்தியதரைக் கடல் வரை உலகின் பல பகுதிகளில் காணப்படுகின்றன. சில சமயங்களில், வெப்பமான புளூம்கள், டெக்டோனிக் தகடுகளின் நடுவில் மேல்நோக்கி உயர்ந்து, எரிமலைகளை உருவாக்குகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக