சனி, 23 நவம்பர், 2024

இந்தியா முழுதும் பரவிய காலாநமக்! :வறண்ட பூமியில் வளரும் ரகம்!!

கங்கைச் சமவெளிப் பகுதிகளில் இருந்து இந்தியா முழுதும் பரவிய பாரம்பரிய நெல் காலாநமக். வேத காலத்தின் பிற்பகுதியில் இருந்தே பயிரிடப்படும் இந்த நெல்லில் இருந்து கிடைக்கும் அரிசியைத்தான் புத்தர் சாப்பிட்டார் என்று வரலாறு கூறுகிறது. அதிக நேரம் பசி தாங்கும் அரிசி என்பதால் புத்தரைப் போன்ற துறவிகள் உண்டிருக்க வாய்ப்பு அதிகம். உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய்கள், புற்றுநோய் என பல பிரச்னைகள் இப்போது அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. நோயில் விழுந்து பாயில் படுத்த பிறகே நம் சமூகத்தில் பாரம்பரிய அரிசி பற்றிய விழிப்புணர்வு மெல்ல அதிகரித்து வருகிறது. 

காலா என்றால் கறுப்பு என்று பொருள். நமக் என்றால் உப்பு. காலா நமக் என்றால் கறுப்பு உப்பு என்ற பொருள் வரும். இந்த அரிசி மேலே கறுப்பு நிறத்திலும் உட்புறம் வெண்மையாகவும் இருக்கும். உப்புச்சுவை இதில் அதிகமாக இருக்கும் என்பதால் கறுப்பு உப்பு என்று சொல்லப்படுகிறது. உப்பரிசி என்றும் சொல்வார்கள். 

கார்போஹைட்ரேட் நிறைந்துள்ள இந்த அரிசியில் நம் உடலுக்குத் தேவையான 72 வகையான தாது உப்புக்களில் சுமார் 40 வகைகள் நிறைந்திருக்கின்றன. காலாநமக்கில் உப்புத்தன்மை அதிகம் உள்ளதால் இதில் உள்ள குளுக்கோஸ் ரத்தத்தில் மிக மெதுவாகக் கரைகிறது. எனவே, சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது. 

தாதுஉப்புகள் நிறைந்துள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். டயாலிசிஸ் செய்துகொள்பவர்கள், புற்றுநோய் சிகிச்சை பெறுபவர்கள், சிறுநீரகம் செயல் இழந்தவர்கள் காலாநமக் அரிசியைச் சாப்பிட உடலுக்குத் தேவையான தெம்பு கிடைக்கும். தோல் நோய்களைக் கட்டுப்படுத்தும். நரம்புப் பிரச்னைகளை சீராக்கும். மூளையை வலுவாக்கும். காலா நமக் வறட்சியான நிலப்பகுதியிலும் வளரக்கூடிய போர்க்குணம் மிக்க நெல் ரகம். முறையாகப் பராமரித்தால் 120 நாட்களில் அறுவடைக்குத் தயாராகும். பூச்சி பாதிப்புக்கு எதிராகப் போராடும் இயல்பும் இதற்கு உண்டு. 

ஆடி முதல் கார்த்திகை வரை சாகுபடி செய்யலாம். சாதாரண, பாரம்பரியமான நடவு முறையில் ஏக்கருக்கு 25 கிலோ வரை விதைநெல் தேவைப்படும். நவீன முறை நடவு என்றால் 10 கிலோ விதை நெல்லும் ஒற்றை நாற்று முறை என்றால் 5 கிலோ விதை நெல்லும் தேவைப்படும். ஒரு ஏக்கர் நாற்றுகளை உற்பத்தி செய்வதற்கு 5 சென்ட் நிலத்தில் நாற்றங்கால் அமைக்க வேண்டும். 40-50 கிலோ வரை தொழுவுரத்தைப் போட்டு இரண்டு சால் சேற்று உழவில் நிலத்தைச் சமப்படுத்திக்கொள்ள வேண்டும். 

100 லிட்டர் தண்ணீருக்கு 5 லிட்டர் வரை அமுதக்கரைசல் கலந்து அதில் விதை நெல்லை சணல் சாக்கில் போட்டுக் கட்ட வேண்டும். அரை நாளுக்குப் பின் தண்ணீரை வடித்து மீண்டும் அரை நாள் இருட்டறையில் வைத்திருக்க வேண்டும். பிறகு நான்கு அங்குல உயரத்துக்கு நாற்றங்கால் அமைத்து தண்ணீர் பாய்ச்சி விதைக்க வேண்டும்..

அடுத்த அரை நாளில் நாற்றங்காலில் உள்ள தண்ணீரை வடித்துவிட வேண்டும். இப்படி நான்கைந்து நாட்கள் செய்தால் விதைநெல் முளைப்பெடுக்கும். 10ம் நாள், 10 லிட்டர் தண்ணீருக்கு ஒரு லிட்டர் வடிகட்டிய மாட்டுச் சிறுநீரைக் கலந்து தெளித்தால், பூச்சி-நோய் தாக்குதல் இருக்காது. 

நாற்றும் நன்றாக வளரும். ஒரு மாதத்துக்குள் நடவுக்குத் தயாராகிவிடும். நாற்றுத் தயாராகும் சமயத்திலேயே நடவு வயலையும், தயார் செய்வது நல்லது. இரண்டு சால் சேற்று உழவு செய்து சமப்படுத்தி, ஏக்கருக்கு 200 கிலோ தொழுவுரமிட்டு சாதாரண முறையில் அரையடி இடைவெளியில் குத்துக்கு, இரண்டு மூன்று நாற்றுக்களாக நடவு செய்வது நல்லது. 

நடவு முடிந்த 20ம் நாளில் தொழுவுரமிட வேண்டும். 25ம் நாளில் களை எடுக்க வேண்டும். 90ம் நாளில் கதிர் பிடிக்கத் தொடங்கும்போது 10 லிட்டர் தண்ணீருக்கு, ஒரு லிட்டர் மோர் (ஏழு நாட்கள் புளிக்க வைத்தது) என்ற விகிதத்தில் கலந்து ஏக்கருக்கு 10 டேங்க் தெளித்தால் சாறு உறிஞ்சும் பூச்சிகள் கட்டுப்படும். 

105ம் நாளுக்கு மேல் கதிர் முற்றத் துவங்கும். 110ம் நாள் தண்ணீர் கட்டுவதை நிறுத்தி, 120ம் நாளில் அறுவடை செய்யலாம். தற்போது பலரும் வெள்ளைவெளேர் என்று இருக்கும் மெருகேற்றபட்ட (பாலிஷ்) அரிசியைத்தான் சாப்பாட்டிற்கு பயன்படுத்துகிறார்கள். அரிசி வெள்ளையாக இருந்தால்தான் தரமானது என்ற எண்ணம் மிகவும் தவறானது. 

அரிசியை பாலிஷ் செய்யும்போது அதன் நுண்ணூட்டச் சத்துக்கள் நீங்கி விடுகின்றன. அரிசி பொதுவாக சற்றே மங்கலாக பால்வெண்மை நிறத்தோடு இருப்பதுதான் நல்லது.காலா நமக் அரிசியில் இருந்து தயாரிக்கப்பட்ட உணவைத்தான் புத்தர் உண்டார் என ஒரு தகவல் உண்டு. அதிக நேரம் பசி தாங்கும் என்பதால் புத்தர் போன்ற துறவிகள் இதை உண்டிருக்க வாய்ப்பு உண்டு என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிவப்பு வணக்கம்

வங்கி மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் பணத்தைத் திரும்பப்பெறும் உரிமை £100 !!

மோசடி பாதிக்கப்பட்டவர்களுக்கு வங்கிகள் மற்றும் பிற கட்டண நிறுவனங்கள் திருப்பிச் செலுத்த வேண்டும் என்ற புதிய விதிகள் கடந்த மாதம் அமலுக்கு வந்...